தமிழ்நாட்டில் உள்ள 11 அரசு பொறியியல் கல்லூரிகளில் நவீன ஆய்வகங்களை அமைக்க ரூ.43.39 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியீடு!!

1 month ago 6

சென்னை : தமிழ்நாட்டில் உள்ள 11 அரசு பொறியியல் கல்லூரிகளில் நவீன ஆய்வகங்களை அமைக்க ரூ.43.39 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான செய்தி குறிப்பில், “தமிழ்நாட்டில் உள்ள அரசு பொறியியல் கல்லூரிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் உயர்கல்வித்துறையின் வளர்ச்சிக்கு பல்வேறு முத்தான திட்டங்கள் வகுத்து கொடுக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகின்றன.அந்த வகையில், கடந்த 2024-2025 ஆம் ஆண்டின் உயர்கல்வித்துறை மானியக்கோரிக்கையில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளின்படி மாநிலத்தில் உள்ள 11 அரசு பொறியியல் கல்லூரிகளில் புதிய நவீன ஆய்வகங்களை அமைக்க தற்போது தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நிதி ஒதுக்கீடு வழங்கியுள்ளார்கள்.

மாணாக்கர்கள், பொருட்களின் இணைய பயன்பாடுகள் மற்றும் பிற மேம்பட்ட உட்பொதிக்கப்பட்ட அமைப்பு அடிப்படையிலான திட்டத்தை உருவாக்க காரைக்குடி மற்றும் போடிநாயக்கனூர் ஆகிய இடங்களில் உள்ள 2 அரசு பொறியியல் கல்லூரிகளில் பொருட்களின் இணைய ஆய்வகம் (Internet of Things Laboratory) அமைக்க தலா ரூ.92,10,000 வீதம் மொத்தம் ரூ.1,84,20,000 நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வேலூர், தஞ்சாவூர் மற்றும் திருச்சிராப்பள்ளி ஆகிய இடங்களில் உள்ள 3 அரசு பொறியியல் கல்லூரிகளில் பொருள்சேர் உற்பத்தி ஆய்வகம் அமைக்க தலா .1.16,00,000 வீதம், மொத்தம் ரூ.3,48,00,000 நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பொருள்சேர் உற்பத்தியானது (Additive Manufacturing) பொருள் கழிவுகள், சரக்கு மற்றும் பல்வேறு வகையான தொகுப்பு செயல்பாடுகளை குறைக்க உறுதியளிக்கிறது. இந்த மையம் தொழில்துறை, அரசு மற்றும் கல்வியாளர்களை ஒன்றிணைத்து ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை ஒருங்கிணைத்து நிலையான தயாரிப்புகளுக்கான மேம்பாடு, குறைந்த செலவில் அதிக உற்பத்தித்திறனைக் கொண்டிருப்பது, தொடர்புடைய கல்வி மற்றும் பயிற்சியை ஆதரிப்பது மற்றும் பல நோக்கங்களைக் கொண்டுள்ளதாகும்.

செயற்கை நுண்ணறிவு மற்றும் எந்திரனியல் தொழில்நுட்ப ஆய்வகங்கள், மாணாக்கர்களின் திறமைகளை வளர்ப்பதிலும், திறமையான மனிதவளத்தினை உருவாக்குவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே கோயம்புத்தூர், சேலம் மற்றும் பர்கூர் ஆகிய இடங்களில் உள்ள 3 அரசு பொறியியல் கல்லூரிகளில் செயற்கை நுண்ணறிவு மற்றும் எந்திரனியல் ஆய்வகம் அமைக்க தலா ரூ.1,31,87,975 வீதம் மொத்தம் ரூ.3,95,63,926 நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆய்வகம், மாணாக்கர்களுக்கு பலவிதமான பயிற்சி திட்டங்கள், பட்டறைகள் (Workshops) மற்றும் படிப்புகளை வழங்கும்.

மின்சார வாகன வடிவமைப்பு மற்றும் மேம்பாடு, மோட்டார் மற்றும் மோட்டார் கட்டுப்பாடு, மின்சார வாகன மின்கலன்கள் மற்றும் மின்கல மேலாண்மை அமைப்புகள், மின்னேற்றி, உட்பொதிக்கப்பட்ட அமைப்புகள், பொருட்களின் இணையம் மற்றும் தானியங்கி வாகன மின்னணுவியல் ஆகியவற்றில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை துரிதப்படுத்த, திருநெல்வேலி, தருமபுரி மற்றும் ஈரோடு ஆகிய இடங்களில் உள்ள 3 அரசு பொறியியல் கல்லூரிகளில் மின்சார வாகன தொழில்நுட்ப ஆய்வகம் அமைக்க தலா ரூ.1,03,33,910 வீதம், மொத்தம் ரூ.3,10,01,730 நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது,

இதன்மூலம் தமிழ்நாட்டில் உள்ள 11 அரசு பொறியியல் கல்லூரிகளில் அப்பகுதியில் உள்ள மாணவர்களின் தேவையினை பூர்த்தி செய்ய இந்த புதிய நவீன ஆய்வகங்கள் அமையும் என்பதில் ஐய்யமில்லை. இவற்றை அமைக்க மொத்தம் ரூ.12.38 கோடி நிதி ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணைகள் வெளியிட்டுள்ளன”.இவ்வாறு உயர்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

The post தமிழ்நாட்டில் உள்ள 11 அரசு பொறியியல் கல்லூரிகளில் நவீன ஆய்வகங்களை அமைக்க ரூ.43.39 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியீடு!! appeared first on Dinakaran.

Read Entire Article