
சென்னை,
அந்தமான் கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு, வெப்பசலனம் காரணமாக இன்று முதல் வருகிற 22-ந்தேதி (வியாழக்கிழமை) வரையிலான ஒரு வாரத்துக்கு கோடை மழை தீவிரம் அடைய வாய்ப்பு இருப்பதாக தனியார் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பெரும்பாலும் இந்த மழை என்பது மாலை, இரவு மற்றும் நள்ளிரவு நேரங்களில் இடி மின்னலுடன் கூடிய மழையாக பெய்யக்கூடும் என்றும் பகல் நேரங்களை பொறுத்தவரையில், வெப்பநிலை இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வட, டெல்டா, மத்திய, தென் மாவட்டங்களில் இந்த மழைக்கான சூழல் அதிகமாக இருக்கிறது. அதிலும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், '
தமிழ்நாட்டில் இன்று முதல் 16-ந்தேதி வரை சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், நாளை (வியாழக்கிழமை) கோவை மாவட்ட மலைப் பகுதிகள், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர், வேலூர், நாமக்கல், கரூர் மற்றும் திருச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது' என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தமான் கடல் பகுதிகளில் நேற்று மழை பெய்தது. அங்கு தென்மேற்கு பருவமழை தொடங்கியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்தாலும், கேரளாவை மையமாக வைத்து தொடங்கக்கூடிய தென்மேற்கு பருவமழைதான் கணக்கில் கொள்ளப்படும். அந்தவகையில் வழக்கமாக கேரளாவில் ஜூன் முதல் வாரத்தில் தொடங்கக்கூடிய தென் மேற்கு பருவமழை, இந்த ஆண்டு முன்கூட்டியே, அதாவது வருகிற 27-ந்தேதியையொட்டி தொடங்குவதற்கான சாதகமான சூழல் உருவாகி இருப்பதாகவும் வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.