சென்னை,
தமிழ்நாட்டில் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட மஹிந்திராவின் அதிநவீன எஸ்.யு.வி (SUV) கார்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்த்து பெருமிதம் தெரிவித்தார். இந்த கார்களை தமிழ்நாடு அரசுப் பள்ளிகள், கல்லூரிகளில் தமிழ் வழியில் பயின்ற, வேலுச்சாமி உள்ளிட்ட பொறியாளர்கள் வடிவமைத்து முத்திரை பதித்துள்ளனர்.
அதன்பின்னர் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
மின்சார வாகனங்கள் தொடர்பான ஆராய்ச்சிகள் தமிழ்நாட்டில்தான் நடைபெற வேண்டும் என்பதுதான் முதல்-அமைச்சரின் நோக்கம். மஹிந்திரா நிறுவனத்தின் ஒட்டுமொத்த ஆராய்ச்சியும் தமிழ்நாட்டில்தான் நடைபெறுகிறது. இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பொறியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
40 சதவீத மின்சார வாகனங்கள் தமிழ்நாட்டில்தான் உற்பத்தியாகிறது. ஆட்டோமொபைல் துறையில் நீண்ட காலமாக தமிழ்நாடு நம்பர் 1 நிலையில் உள்ளது. காரின் பாகங்கள் எல்லாமே தமிழ்நாட்டில் தயார் செய்யப்பட்டது என சொன்னதும் முதல்-அமைச்சர் ரொம்ப சந்தோஷப்பட்டார். இவ்வாறு அவர் கூறினார்.