தமிழ்நாடு விளையாட்டு பல்கலை 14வது பட்டமளிப்பு விழாவில் 3,638 மாணவர்களுக்கு பட்டம்

3 months ago 17

சென்னை: தமிழ்நாடு விளையாட்டு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் 3,638 மாணவர்கள் பட்டம் பெற்றனர். வெவ்வேறு பாடங்களில் பல்கலைக்கழக அளவில் சிறப்பிடம் பெற்ற 37 பேருக்கு பதக்கமும் சிறப்பு பரிசும் வழங்கப்பட்டது. தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தின் 14வது பட்டமளிப்பு விழா சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக அரங்கில் நேற்று நடந்தது. விழாவுக்கு பல்கலைக்கழக வேந்தரும், தமிழக ஆளுநருமான ஆர்.என்.ரவி தலைமை தாங்கினார்.

பல்கலைக்கழக இணைவேந்தரும், விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சருமான துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலை வகித்தார். பல்கலைக்கழக அளவில் உடற்கல்வி, விளையாட்டு பயிற்சி விளையாட்டு மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு பாடங்களில் சிறப்பிடம் பெற்ற 37 மாணவ, மாணவிகளுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதக்கங்களையும் பட்டங்களையும் வழங்கினார். விழாவில் மொத்தம் 3,638 பேருக்கு பட்டம் வழங்கப்பட்டது. அவர்களில் 37 பேர் பிஎச்டி பட்டதாரிகள். இந்திய கூடைப்பந்து அணியின் முன்னாள் கேப்டனும் பத்ம விருது பெற்றவருமான அனிதா பால்துரை பட்டமளிப்பு விழாவில் உரையாற்றினார்.

அவர் பேசும்போது, ‘‘பள்ளியில் படிக்கும் காலத்தில் உடற்கல்வி ஆசிரியர்தான் என்னிடம் இருந்து விளையாட்டு திறமைகளை கண்டறிந்து கூடைப்பந்து வீராங்கனை ஆக்கினார். அவர் அளித்த ஊக்கத்தினால்தான் தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் கூடைப்பந்து விளையாட்டில் என்னால் சாதிக்க முடிந்தது. வாழ்க்கையில் வெற்றிபெற ஓர் இலக்கு, கடின உழைப்பு, அர்ப்பணிப்பு, விடாமுயற்சி இவை மிகவும் அவசியம்” என்று குறிப்பிட்டார். முன்னதாக, துணைவேந்தர் சுந்தர் வரவேற்று ஆண்டறிக்கை சமர்ப்பித்தார். விழாவில் விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை செயலர் அதுல்யா மிஸ்ரா, பல்கலைக்கழக பதிவாளர் லில்லிபுஷ்பம், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர், முருகவளவன், பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள், பெற்றோர் கலந்துகொண்டனர்.

* ‘பொறுத்திருந்து பாருங்கள்’
பட்டமளிப்பு விழா முடிந்த பின்னர், சனாதனத்தை டெங்கு, மலேரியா போன்ற நோய்களுடன் ஒப்பிட்டு பேசியிருந்த நிலையில், ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் உங்களுக்கு கண்டனம் தெரிவித்திருந்தார் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், பொறுத்திருந்து பாருங்கள் (wait and see) என பதில் அளித்தார்.

The post தமிழ்நாடு விளையாட்டு பல்கலை 14வது பட்டமளிப்பு விழாவில் 3,638 மாணவர்களுக்கு பட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article