சிட்னி: ஆஸ்திரேலியாவின் சிட்னியில் 6.11.2024 அன்று நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ள சட்டப் பேரவைத் தலைவர் மு. அப்பாவு பயணம் மேற்கொண்டுள்ளார். முன்னதாக 3.11.2024 அன்று கோலாலம்பூரில் மலேசிய தமிழ்ச் சங்கத்தில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
அங்கு பேரவைத் தலைவர் அவர்கள் பேசியதாவது:
மலேசியாவில் உள்ள தமிழர்கள் முன்பு எப்படி இருந்தாலும், எவ்வளவு வறுமை, கஷ்டங்களைத் தாங்கிக்கொண்டு, சொந்த பந்தங்களையெல்லாம் மறந்து இங்கு வந்திருக்கிறீர்கள். இந்த நாட்டு மக்களும் உங்களை சொந்தங்களாக அங்கீகரித்து அன்போடு வரவேற்றிருக்கிறார்கள். இந்த நாட்டுக்காக கடுமையாக உழைக்கிறீர்கள். உழைத்த உழைப்புக்கு பலனும் கிடைத்துள்ளது. மலேசியாவில் பல பேர் நல்ல வாழ்வாதாரத்தோடு வாழ்ந்து வருகிறீர்கள். இன்னும் நீங்கள் பொருளாரத்தில் மேம்பட வேண்டுமென்று வாழ்த்துகிறேன்.
இந்தியாவைப் பொறுத்தவரையில், உலகத்திலேயே எடுத்துக்காட்டான மிகப் பெரிய ஜனநாயக நாடு என்றால் அது இந்தியாதான் என்று உங்களுக்கு நன்றாகவே தெரியும். 1957-ல், பிரிட்டிஷாரிடமிருந்து மலேசியாவிற்கு சுதந்திரம் கிடைத்தது. அதுபோல், இந்தியாவிற்கு 1947 ஆம் ஆண்டு சுதந்திரம் கிடைத்தது. அதில், பெரிய மகிமை, சிறப்பு என்னவென்றால் கத்தியின்றி, இரத்தமின்றி அமைதி வழியில் ஆங்கிலேயர்களை எதிர்த்து, மகாத்மா காந்தியடிகள் சுதந்திரத்தை பெற்று தந்தார்கள். இன்றும் உலகம் முழுவதும் மகாத்மா காந்தியடிகளினுடைய அகிம்சை வழியைத்தான் ஜனநாயகம் என்று எல்லோரும் ஏற்றுக்கொள்கிறார்கள். பல ஆட்சி மாற்றங்கள் வரலாம்.
பல பேர் வருவார்கள், போவார்கள். ஆனால், இந்திய அரசியலமைப்புச் சட்டம் என்பது நம் எல்லோரையும் வாழ வைக்கின்ற சட்டமாக மகாத்மா காந்தியடிகள், அண்ணல் அம்பேத்கர், ஜவஹர்லால்நேரு உள்பட பெரிய தியாகச் செம்மல்களால் உருவாக்கப்பட்டது. தமிழகத்திற்கு அதில் மிகப் பெரிய பங்குண்டு. தமிழகத்தைச் சேர்ந்த பெரியரை யாராலும் மறக்க முடியாது. அண்ணாவை மறக்க முடியாது. பெருந்தலைவர் காமராஜரை மறக்க முடியாது. மறைந்த தலைவர் கலைஞர் அவர்களை மறக்க முடியாது. அவர்கள் போட்ட விதைகள்தான், அவர்கள் ஆற்றிய பணிகள்தான், அவர்கள் சந்தித்த எத்தனையோ அவமானங்களை தாங்கித்தான் தமிழ்நாடு வளர்ந்திருக்கிறது. படிப்பில் உயர்ந்த இடத்தில் எந்த மாநிலம் இருக்கிறது என்றால், அது தமிழ்நாடுதான். எனவே, அதற்காக உழைத்தவர்களை நாம் மறக்கவே முடியாது. அந்தளவுக்கு அவர்கள் கடுமையாக உழைத்திருக்கின்றார்கள். காரணம், அந்தக் காலக்கட்டத்தில் ஒரு சமூகத்தினர் மட்டும்தான் படிக்க முடியும். மற்ற சமூகத்தைச் சார்ந்தவர்கள் படிக்க முடியாது. இது அப்போதைய இந்திய கலாச்சாரம். ஆலயத்திற்குள் எல்லோரும் செல்ல முடியாது. குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டுமே செல்ல முடியும். இவ்வாறு பல சம்பவங்கள் நடந்தன என்பது நமக்குத் தெரியும். குறிப்பிட்ட 7 முதல் 10 சதவிகிதம் பேர் மட்டுமே கல்வி கற்றவர்களாக ஆட்சியில் இருப்பார்கள், அதிகாரத்தில் இருப்பார்கள்.
நீங்கள் நினைத்தால் இங்கு நிலம் வாங்கிவிடலாம். ஆனால், இந்தியாவில் வாழ்ந்தவர்களுக்கு 1795 வரை நிலம் வாங்கும் உரிமை இல்லை. நிலம் வாங்க வேண்டுமென்றால், தலையில் பிறந்தவர், நெஞ்சில் பிறந்தவர், தொடையில் பிறந்தவர் ஆகியோர் மட்டும்தான் வாங்க முடியும். 1795-ல் பிரிட்டிஷ் ஆட்சியின்போதுதான் எல்லோரும் நிலம் வாங்கலாம் என்ற சட்டம் இயற்றப்பட்டது. அதன் பின்புதான் நம் முன்னோர்களால் நிலங்கள் வாங்க முடிந்தது. பிரிட்டிஷ் ஆட்சியாக இருந்தாலும்கூட, 1835-ல் மெக்காலே பிரபு அவர்கள் கல்வித் துறையின் தலைவராக பொறுப்பு வகித்தபோதுதான், எல்லோரும் கல்வி கற்கலாம் என்ற புதிய சட்டத்தை கொண்டு வந்தார். அதன்பிறகுதான் இந்தியாவில் எல்லோரும் கல்வி கற்கக் கூடிய நிலை உருவானது. அதுவரையில் அனைவருக்கும் கல்வி என்பது மறுக்கப்பட்டிருந்தது. கல்வி கற்கும் வசதி இருந்தது. குருகுலம் இருந்தது. அங்கே ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கு மட்டுமே கல்வி கற்றுக்கொடுக்கப்பட்டது. எல்லோருக்கும் அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. அனைவரும் கல்வி கற்கலாம் என்ற சட்டத்தை மெக்காலே பிரபு கொண்டுவந்தபிறகு, அதன் தொடர்ச்சியாக கிறித்தவ அமைப்புகள் மதபோதனைகளுக்கென இங்கு வந்தாலும், கல்வியையும் சேர்த்து கற்று கொடுத்தார்கள். இவ்வாறு, படிப்படியாக வளர்ந்துதான் இன்று தமிழ்நாடு கல்வியில் மிக உயர்ந்த இடத்தில் உள்ளது.
அதேபோன்று, தமிழ்நாடு மருத்துவத் துறையிலும் மிக உயரிய இடத்தில் இருக்கிறது. முதலமைச்சர் பொறுப்பேற்று மூன்றாண்டுகள் நிறைவடைந்த நிலையில், இந்த நிலையை நாம் எட்டியிருக்கிறோம். சாமானிய மக்களைப் பற்றி சிந்திக்கின்ற ஓர் அரசு தற்போது இருக்கிறது.
நாம் விமானத்தில் பறக்கிறோம், இரயிலில் குளிர்சாதன வசதி வகுப்பில் செல்கிறோம். இருசக்கர வாகனத்தில் செல்கிறோம். படகு போன்ற காரில் செல்கிறோம். ஆனால், எதுவும் இல்லாமல் பேருந்திற்காக காத்துக்கொண்டிருக்கிற தாய்மார்களுக்காக, மகளிருக்காக, பொறுப்பேற்றவுடன் நகரப் பேருந்துகளில் நாளொன்றுக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் கட்டணம் இல்லாமல் மகளிர் செல்லலாம் என்ற திட்டத்தை நம்முடைய முதலமைச்சர் அவர்கள் கொண்டுவந்து, தமிழ்நாட்டு மகளிர் பயனடைந்து வருகிறார்கள். சாமானிய குடும்பத்தைச் சார்ந்த பெண் குழந்தைகள் 12 வகுப்பு முடித்ததோடு நின்றுவிடாமல், பட்டப் படிப்பிற்குச் சென்றால், புதுமைப் பெண் திட்டத்தின்கீழ் மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படுகிறது. மாணவிகளுக்கு மட்டும்தானா, எங்களுக்கு இல்லையா என்று கோரிக்கை வந்ததால், மாணவர்களுக்கு தமிழ்ப் புதல்வன் திட்டம் கொண்டுவரப்பட்டது. இவ்வாறு ஒரு சமூகம் முன்னேற வேண்டுமென்றால் கல்வி என்பது அதில் மிக மிக முக்கியமான ஒன்றாகும்.
முதலமைச்சர், தலைநகர் டெல்லிக்கு சென்றபோது அங்கு ஒரு பள்ளியை பார்வையிடுகின்றார். அனைத்து வகுப்புகளிலும் Smart Board வசதி செய்யப்பட்டிருந்து. பின்னர், தமிழ்நாட்டிற்கு வந்த அவர் இந்த ஆண்டே உடனடியாக பள்ளிக்கு ஒரு வகுப்பறையிலாவது Smart Board வசதி செய்து கொடுக்கப்படும் என்று அறிவிக்கிறார். தமிழ்நாடு மட்டுமல்ல, இந்தியாவைப் பொறுத்தவரையில் வசதி படைத்தவர்கள், CBSE பள்ளிகளில் பயில்கிறார்கள். ஆண்டுக்கு இலட்சக் கணக்கில் செலவு செய்து படிக்கின்றவர்கள் Smart Class Room வசதியை பெறுகிறார்கள். ஒரு சாமானியன் வீட்டில் பிறந்த குழந்தைகளும், பண வசதி படைத்த பிள்ளைகளைப்போன்று படிக்க வேண்டுமென்பதற்காக நடுநிலைப் பள்ளிகள் வரை பள்ளிக்கு ஒரு வகுப்பறையில் Smart Board வசதி ஏற்படுத்திக் கொடுத்து தமிழ்நாடு முழுவதும் இரண்டாண்டுகளுக்கு முன்பு முதற்கட்டமாக தொடங்கப்பட்டது.
என்னுடைய தொகுதியில், நான், ஆசிரியராக இருந்த காரணத்தினால், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் என அனைத்துப் பள்ளிகளுக்கும் கிட்டத்தட்ட இராதாபுரம் தொகுதியிலுள்ள 306-க்கு மேற்பட்ட பள்ளிகளில் ஒரு வகுப்பறையில் Smart Board வசதி செய்து கொடுத்தேன். அதற்கென்று அரசு நிதி, சொந்த நிதி, CSR நிதி மூலமாக செய்து கொடுத்தேன். அதைத் தொடங்கி வைத்த பெருமை இன்றைய முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களைச் சாரும். மேலும், ஆங்கிலத்தை சரளமாக பேசுவதற்கு வாய்ப்பாக Spoken English Coaching வழங்கும் திட்டமும் தொடங்கப்பட்டது. இவ்வாறு அவர் தீட்டுகின்ற திட்டங்கள் அனைத்தும் சாமானிய மக்களுக்காகவே உருவாக்கப்பட்டவை.
முதலமைச்சரால், மக்களைத் தேடி மருத்துவம் என்ற திட்டம் ஒன்று சுமார் 2 ஆண்டுகளுக்கு முன்பாக உருவாக்கப்பட்டது. திருநெல்வேலி மாவட்டத்தில் என்னுடைய தொகுதிக்குட்பட்ட சமூகரெங்கபுரத்தில் நான் நேரடியாக சென்று ஒரு வீட்டில் பார்த்தேன். கணவன் படுத்த படுக்கையாக இருக்கிறார். ரேஷனில் வாங்கும் பொருட்களை கொண்டு காலம் செல்கிறதே தவிர, மருந்துகள் வாங்குவதற்குக்கூட அவர்களிடம் பண வசதி இல்லை. என்ன நோய் இருக்கிறது என்பதை பரிசோதிப்பதற்குக்கூட வசதி இல்லை. மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின்மூலம் முதலில் இவர் போன்ற ஆட்கள் அடையாளப்படுத்தப்படுகிறார்கள். அனைத்து இடங்களிலும் துணை சுகாதார நிலையங்கள் இருக்கின்றன. கிராம செவிலியர்கள் இருக்கிறார்கள். ஊட்டச் சத்து பணியாளர்கள் இருக்கிறார்கள். ஆதரவு இல்லாதவர்களை அடையாளப்படுத்திய வகையில், சுமார் 50 இலட்சம் பேர் அடையாளப்படுத்தப்பட்டார்கள். உடனடியாக அங்கெல்லாம் மருத்துவக் குழு அனுப்பி வைக்கப்பட்டது.
மருத்துவக் குழு ஆய்வு செய்ததில் எவ்வாறெல்லாம் அவர்களுக்கு மருந்துகள் வழங்கப்பட வேண்டுமென்று நான்கு வகைகளாக பிரித்து, மருத்துவ உதவிகளும், மருந்துகளும் வழங்கப்பட்டு வருகின்றன. தொடர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தியாவில் மட்டுமல்ல; உலகத்திலேயே மக்களைத் தேடி மருத்துவம் வாயிலாக 60 இலட்சம் நபர்களுடைய சுய தேவையை பூர்த்தி செய்கின்ற அளவுக்கு ஒரு திட்டத்தை கொண்டு வந்து, அந்தத் திட்டம் செயல்படுத்தப்படுவதை ஐக்கிய நாடுகள் சபை கடந்த ஒரிரு மாதங்களுக்கு முன்பாக உலகிலேயே மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின்மூலம் சாமானிய மக்களை வாழ வைத்துக் கொண்டிருப்பவர் இன்றைய முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் என்று சொல்லி விருது வழங்கி தமிழ்நாட்டை கெளரவப்படுத்தியுள்ளது. இதை நான் எதற்காக சொல்கிறேன் என்றால், சாமானிய மக்களைப் பற்றி சிந்திக்கிறார். அதுவும், அவரது மனதில் ஜாதி இல்லை, மதம் இல்லை, இனம் இல்லை, ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்ற பாகுபாடும் இல்லை.
நம்முடைய முதலமைச்சர் பொறுப்பேற்ற பின்பு, தேர்தல் வாக்குறுதியில் சொன்னபடி, மகளிர் உரிமைத் தொகை என்ற திட்டத்தை கொண்டுவந்து, தகுதியுள்ள தாய்மார்களுக்கு வழங்கி வருகிறார். தேர்தல் வாக்குறுதியாக இருந்தாலும்கூட, இதையெல்லாம் எவ்வாறு நடைமுறைப்படுத்த முடியும் என்று நாங்கள் எண்ணினோம். நம்முடைய முதலமைச்சர் அவர்கள் அனைத்து கிராமங்களுக்கும் அங்கேயிருக்கக்கூடிய அங்கன்வாடி பணியாளர்கள்/ அங்கேயிருக்கக்கூடிய அரசுப் பணியாளர்களை அழைத்து, ஒவ்வொரு கிராமங்களிலும் 60 நபர்களுக்கு ஓர் அதிகாரி என்று நியமித்து, அவர்களை வரவழைத்து, தாய்மார்கள் வரும்போது செல்லிடைப்பேசி, ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, மின் கட்டணம் செலுத்தும் ரசீது, வங்கிப் புத்தகம் போன்ற ஆவணங்களோடு வரவைத்து, Online-ல் பதிவு செய்தவுடன், OTP வரும். வந்தவுடன் பதிவு நடைமுறைகள் முடிந்தது நீங்கள் செல்லலாம் என்று அனுப்பிவிடுவார்கள்.
தேர்வு எழுதி முடிவிற்காக காத்திருப்பதைப்போன்று, விண்ணப்பத்தவர்கள் அனைவரும் நமக்கு கிடைக்குமா, கிடைக்காதா என்று யோசித்து கொண்டிருந்தார்கள். இவ்வாறு தமிழ்நாடு முழுவதும் இதே போன்ற பணிகள் நடைபெற்றன. கிராமத்தில் இருப்பதால் அந்த தாய்மார்களைப் பற்றி எனக்கு நன்றாக தெரியும். பேரன், பேத்திகள் கேட்கும் தின்பண்டங்களை, பொருட்களை வாங்கிக் கொடுக்க இயலாமல், வாங்கிய கடனை செலுத்த முடியாமல் வெட்கிக் கொண்டிருந்தவர்களுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கி பேரன், பேத்திகள் கேட்டதை வாங்கி கொடுக்கும் அளவுக்கு இந்த அரசு அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தியுள்ளது. தற்போது, 1 கோடியே 16 இலட்சம் தகுதியுள்ள மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1,000/- உரிமைத் தொகையாக வழங்கப்படுகிறது;
அடுத்து, இன்னுயிர் காப்போம்-நம்மைக் காக்கும் 48 திட்டம். ஒரு காலத்தில், எங்கேயாவது விபத்து ஏற்பட்டுவிட்டால், எலும்பு முறிவு மருத்துவமனை வாசலில் குடும்பத்தினர் எல்லோரும் நிற்பார்கள். 2 இலட்சம் ரூபாய் முதலில் செலுத்த வேண்டுமென்று சொல்வார்கள். வெளிநாட்டில் இருந்து ஊசியை வரவழைத்து நோயாளிகளுக்கு செலுத்துவதாக பேரம் பேசுவார்கள். அழுதாலும், கதறினாலும் கேட்பதற்கு ஆள் இல்லை. 10 இலட்சம், 5 இலட்சம் மதிப்புள்ள சொத்தினை 2 இலட்சம் ரூபாய்க்கு அடமானம் வைக்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். தற்போது இந்த அரசு, விபத்து ஏற்பட்டுவிட்டால், விபத்தில் காயமடைந்தவர்களுக்கு நம்மைக் காக்கும் 48 என்ற திட்டத்தின்கீழ், விபத்து நடந்த 48 மணி நேரத்திற்குள் விபத்தில் சிக்கியவர்களை அப்பல்லோ, காவேரி உள்ளிட்ட மிகப்பெரிய தனியார் மருத்துவமனைகள் உள்ளிட்ட 756 மருத்துவமனைகளில் அட்மிட் செய்தால், அவர்கள் சிகிச்சைக்கான 2 இலட்சம் ரூபாய் செலவை அரசே ஏற்றுக்கொள்கிறது. அவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், அவர்களுக்கு தமிழ்நாட்டு எல்லைக்குள் விபத்து ஏற்பட்டால், அவர்களுடைய உயிரை பாதுகாக்கின்ற உரிமையை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளார்கள்.
அதேபோன்று, விடியல் பயணத் திட்டத்தின்கீழ், தமிழ்நாட்டிலுள்ள சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் வெளிநாட்டு பெண்களும் இலவசப் பயணம் மேற்கொள்ளலாம். இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு, இந்த மூன்றாண்டு காலத்தில் உலக அளவில், இந்திய அளவில், கல்வி, சுகாதாரம், மருத்துவம் உள்ளிட்டவற்றில் மிகப்பெரும் சாதனைகள் படைத்துள்ளது; தமிழ்நாடு சுகாதாரத் துறை மட்டும் 545 விருதுகளை பெற்றிருக்கிறது. தமிழ்நாட்டில் உடனடியாக மருத்துவ உதவி கிடைக்கிறது. வீடு தேடி மருத்துவ உதவிகள் கிடைக்கின்றன. அதை அங்கீகரிக்கும் வகையில், மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்திற்கு ஐ.நா. விருதும் கிடைத்துள்ளது. இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு, அயலகத்தில் வாழும் தமிழ்ச் சொந்தங்களுக்கென ஓர் அமைச்சரை நியமித்து, அயலக அணியையும் உருவாக்கி, அவர்களுக்கு என்ன உதவி தேவையோ, அவை உடனடியாக செய்து கொடுக்கப்படுகின்றன.
கடந்த பத்தாண்டு காலத்தில் தமிழ் இலக்கியத்திற்கோ, தமிழ் எழுத்தாளருக்கோ எந்த விருதும் வழங்கப்படவில்லை. ஆனால், இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு, தமிழ் இலக்கியவாதிகளுக்கு, எழுத்தாளர்களுக்கு என அனைத்து தமிழ் ஆர்வலர்களுக்கும் விருது வழங்குவது மட்டுமல்லாமல், வீடு, நிதியுதவி போன்றவையும் வழங்கப்படுகின்றன. தம்பி திரு. பன்னீர்செல்வம் அவர்கள் தமிழ் சார்ந்த விருதுகள் வழங்கக் கோரினார்கள். அதன் விவரத்தை அமைச்சர் திரு. சாமிநாதன் அவர்களைத் தொடர்புகொண்டு தெரிவித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். எல்லோருக்கும் எல்லாமும் என்ற வகையில் சமூக நீதி அரசாக, திராவிட மாடல் அரசாக இந்த அரசு திகழ்ந்து கொண்டிருக்கிறது. திராவிடம் என்பதற்கு சில தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தாலும், திராவிடம் இருந்தது என்பது உண்மை. 1947 வரை மதராஸ் பிரசிடென்சியின்கீழ்தான், கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, ஒடிசாவின் ஒரு பகுதி ஆகியவை இருந்தன.
அயர்லாந்தில் பிறந்து, இந்தியாவிற்கு வந்து, தமிழ்நாட்டிலுள்ள திருநெல்வேலி மாவட்டம், இடையங்குடியில் வாழ்ந்து மறைந்த, தமிழ், தெலுங்கு, மலையாளம், துளு, சமஸ்கிருதம் உள்ளிட்ட அனைத்து மொழிகளையும் இலக்கியங்களையும் கற்று, ஒப்பீடு செய்து, ஒப்பிலக்கணம் எழுதி, தமிழ் சம்ஸ்கிருதத்திலிருந்து தோன்றியது அல்ல என்று அறுதியிட்டு, உறுதியிட்டு தெரிவித்து, உலகில் தோன்றிய முதல் மூன்று மொழிகளில் முதல் மொழி தமிழ் என்றும், இன்றும் வாழுந்து கொண்டிருக்கின்ற மொழி தமிழ்மொழிதான் என்றும் உலகிற்கு பறைசாற்றிய ஐயா கால்டுவெல் அவர்களுக்கு சென்னை மெரினா கடற்கரையில் 1967 ஆம் ஆண்டு சிலை வைக்கப்பட்டுள்ளது. இவர், ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ என்ற நூலை எழுதி, தமிழ்மொழி உலகின் முதல் மொழி என்றும், மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்டவை தமிழ் மற்றும் பிற மொழிகளின் கலப்பில் வந்தவை என்றும், இவையெல்லாம் ஓரினத்தைச் சேர்ந்தவை என்பதையும் உலகிற்கு பறைசாற்றினார்.
இந்தியாவில் தோன்றிய மொழிகளில், முதன்முதலாக தமிழ்மொழிக்குத்தான் செம்மொழி அந்தஸ்து கிடைத்தது; அதைப் பெற்றுத்தந்தவர் மறைந்த தலைவர் கலைஞர் அவர்கள். கோயம்புத்தூர் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் தலைவர் கலைஞர் அவர்கள், தமிழ்மொழி செம்மொழி அந்தஸ்து பெற்றதற்கு நாம் கால்டுவெல் அவர்களுக்கு கடமைப்பட்டிருக்கிறோம் என்று கூறினார். ஒரு நாட்டை, சமூகத்தை, கலாச்சாரத்தை அழிக்க வேண்டுமென்றால், மொழியை அழித்துவிட்டால் போதுமானது; எல்லாம் முடிந்துவிடும். எனவே, நாம் நம்முடைய மொழியை பாதுகாக்க வேண்டும். கலாச்சாரத்தைப் பாதுகாக்க வேண்டும். நம் முன்னோர்கள் அவற்றைப் பாதுகாத்தனர்.
அடிமையாக இருந்தவர்களை தலைநிமிர வைப்பதற்குத்தான் சுயமரியாதை இயக்கம் தோன்றியது. திராவிட இயக்கத்தில் இருந்த திரு. நாயர், திரு. நடேசன், திரு. பி.டி.ஆர் உள்ளிட்டோர் இணைந்துதான், தென் மாவட்டங்களிலிருந்து சென்னைக்கு கல்வி பயில வரும் மாணவர்களுக்கு விடுதி கிடைக்காத நிலையில், அவர்கள் விடுதிகளில் தங்கி கல்வி பயில்வதற்காக தென்னிந்திய நல உரிமைச் சங்கம் என்ற அமைப்பை உருவாக்கினார்கள். அதே காலகட்டத்தில்தான் சென்னைக்கு வந்து கல்வி பயில்வோர் பயன் பெறுவதற்காக YMCA உள்ளிட்ட பல கிறிஸ்தவ அமைப்புகளும் ஆரம்பிக்கப்பட்டன.
நீங்கள் தமிழ்நாட்டிற்கு வந்து தொழில் தொடங்குங்கள். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தித் தாருங்கள். தமிழ்நாட்டில் single window system மூலம் நீங்கள் உடனடியாக தொழில் துவங்கலாம். Online மூலம் அனுமதி வழங்கப்படுகிறது; உங்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் என அவர் தெரிவித்தார்.
The post தமிழ்நாடு மருத்துவத் துறையில் மிக உயரிய இடத்தில் இருக்கிறது: மலேசிய தமிழ்ச் சங்கத்தில் பேரவைத் தலைவர் அப்பாவு உரை appeared first on Dinakaran.