தமிழ்நாடு மக்களிடம் ஒன்றிய அமைச்சர் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கவேண்டும்: செல்வப்பெருந்தகை

5 hours ago 2

பெரம்பூர்: தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களையும், தமிழக மக்களையும் இழிவுபடுத்தி பேசிய ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை கண்டித்து தமிழக முழுவதும் பல்வேறு கட்சியினர், அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக நேற்று மாலை வடசென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில், பெரம்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட எம்கேபிநகர் பேருந்து நிறுத்தம் அருகே மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வடசென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் டில்லிபாபு தலைமை வகித்தார். தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வ பெருந்தகை சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார். நிகழ்ச்சியில், மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள் என பலரும் ஒன்றிய அமைச்சருக்கு எதிராக கண்டனத்தை பதிவு செய்தனர்.

ஆர்ப்பாட்ட முடிவில் செய்தியாளர்களை சந்தித்து காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறியதாவது: நாடாளுமன்றத்தில் மும்மொழி கொள்கைபற்றி கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான்பேசும்போது, தமிழ்நாட்டை சார்ந்தவர்கள் நாகரிகமற்றவர்கள் என கூறியுள்ளார். நம்முடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெகுண்டு எழுந்து கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார்கள். உலகம் முழுவதும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்த எதிர்ப்பை தாங்க முடியாமல் தர்மமே இல்லாத பிரதான் தர்ம பிரதான் வருத்தம் தெரிவித்ததாக தெரிவித்துள்ளார். தமிழ்நாடு மக்கள் ஒவ்வொருவரிடமும் நிபந்தனை அற்ற மன்னிப்பு கேட்கவேண்டும். எப்போதெல்லாம் தர்மேந்திர பிரதான் தமிழ்நாட்டிற்கு வருகிறாரோ அப்போதெல்லாம் தமிழக காங்கிரஸ் பேரியக்கம் அவர் செல்கின்ற இடங்களில் எல்லாம் கருப்புக்கொடி காட்டும்.

உலகத்திலேயே மூத்த குடி தமிழ்குடி என்பதை ஆதாரப்பூர்வமாக நிரூபித்துள்ளோம். 3500 ஆண்டு பெருமை வாய்ந்த தமிழர்களை நாகரீகமற்றவர்கள் என எப்படி சொல்லலாம். தமிழ் இனத்தை கொச்சைப்படுத்திய ஒன்றிய அமைச்சரை அண்ணாமலை ஏன் கண்டிக்கவில்லை. தமிழ்நாட்டு ஆட்சிக்கு தொந்தரவு கொடுப்பதும், தமிழக முதலமைச்சரை பார்த்தால் பயப்படுவதும், இதே வேலையாக இருந்தால் இதற்கு பெயர் ஒன்றிய அரசா? என மக்கள் கேட்கிறார்கள். தமிழ்நாடு மக்களின் வரிப்பணத்தை எங்கெங்கோ எடுத்து செல்கிறார்கள். ஜிஎஸ்டி பணத்தை எடுத்து வேறு மாநிலத்திற்கு தருகிறார்கள். இது எந்த வகையில் நியாயம். 2026 சட்டமன்ற தேர்தலில் பாஜகவை எல்லா தொகுதியிலும் நோட்டாவுக்கு கீழே வாக்குபெறுகின்ற கட்சியாக தமிழக மக்கள் உருவாக்குவார்கள்.

எங்களது குழந்தைகள் என்ன படிக்க வேண்டும் என்பதை அவர்களே முடிவு செய்வார்கள். பாஜகவின் கொள்கை, கோட்பாடு மனிதநேயத்திற்கு எதிரானது. இவ்வாறு கூறியுள்ளார். நிகழ்ச்சியில், மாவட்ட தலைவர்கள் முத்தழகன், அண்ணாதுரை, மாநில அமைப்பு செயலாளர் ராம்மோகன், இமையா கக்கன், மாநில பொதுச்செயலாளர் தளபதி பாஸ்கர், பெரும்புதூர் தொகுதி பொறுப்பாளர் தாம்பரம் நாராயணன், டி.செல்வம், அருள் பெத்தையா, துரை சந்திரசேகர், விஜயன் மற்றும் மாவட்ட, மாநில, சர்க்கிள் தலைவர்கள் என 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

 

The post தமிழ்நாடு மக்களிடம் ஒன்றிய அமைச்சர் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கவேண்டும்: செல்வப்பெருந்தகை appeared first on Dinakaran.

Read Entire Article