*ஏழு பேரை டெல்லி அழைத்துச் சென்ற மதுரை பாஜ நிர்வாகிகள்
மதுரை : தமிழ்நாடு அரசின் தீர்மானம், எதிர்ப்பு, மக்களின் போராட்டம் உள்ளிட்ட காரணங்களால் அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை முழுமையாக ரத்து செய்ய ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக அரிட்டாபட்டி பகுதியைச் சேர்ந்த ஏழு பேரை, மதுரை பாஜ நிர்வாகிகள் விமானம் மூலம் டெல்லி அழைத்துச் சென்றுள்ளனர்.
மதுரை மாவட்டம், மேலூர் தாலுகா அரிட்டாபட்டி, வல்லாளபட்டி, புலிப்பட்டி, செட்டியார்பட்டி, எட்டிமங்கலம், மாங்குளம், நாயக்கர்பட்டி உள்ளிட்ட 11 கிராமங்கள் அடங்கிய நாயக்கர்பட்டி பிளாக் பகுதியில் சுமார் 5 ஆயிரம் ஏக்கரில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான ஒப்பந்தத்தை வேதாந்தா நிறுவனத்தின் துணை நிறுவனமான இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்திற்கு ஒன்றிய அரசு கடந்த நவ. 7ல் வழங்கியது.
இந்த திட்டத்தால், தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள அரிட்டாபட்டி பல்லுயிர் மரபுத்தளமும், பெரியாறு பாசன விவசாய நிலங்களும் தரிசாகும் சூழல் ஏற்பட்டது. இதோடு தமிழி எழுத்துக்களை கொண்ட மாங்குளம் கல்வெட்டு, சமணப் படுகைகள், பாண்டியர் கால குடவரைகள், பழமையான கோயில்கள், அழகர்கோவில் காப்புக் காடுகளுடன் நூற்றுக்கணக்கான நீர்நிலைகளும் அழியும் நிலை ஏற்பட்டது. இதனால், இப்பகுதி மக்கள் டங்ஸ்டன் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து பலகட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
கிராம சபைகளில் தீர்மானம்: அரிட்டாபட்டியில் நடந்த கிராமசபை கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் பி.மூர்த்தி, டங்ஸ்டன் திட்ட ஆய்விற்கு கூட தமிழ்நாடு அரசு அனுமதி தராது என உறுதியளித்திருந்தார். மேலூர் மற்றும் கொட்டாம்பட்டி பகுதியிலுள்ள பல்வேறு கிராமங்களில் நடந்த கிராம சபை கூட்டங்களில் டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கடந்த டிச. 9ம் தேதி நடந்த தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தில் அரிட்டாபட்டி டங்ஸ்டன் திட்டத்திற்கு எதிராக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கொண்டு வந்த தீர்மானம் அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டு, ஒன்றிய அரசிடம் வழங்கப்பட்டது.
தற்காலிகமாக நிறுத்தம்:தமிழ்நாடு அரசின் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியதை தொடர்ந்து ஒன்றிய அரசிற்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. இதையடுத்து அரிட்டாபட்டி டங்ஸ்டன் திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்து ஒன்றிய அரசு உத்தரவிட்டது. ஆனால், டங்ஸ்டன் திட்டத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்பதில் அரிட்டாபட்டி பகுதியினர் உறுதியாக இருந்தனர்.
தமிழ்நாடு அரசும், மதுரை மாவட்ட மக்களும் ஒன்றிய அரசிற்கு எதிராக இருப்பதால் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் திட்டத்தை கைவிட ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு முதல்கட்டமாக அரிட்டாபட்டி உள்ளிட்ட கிராமத்தின் முக்கிய நபர்களிடம் பாஜக நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், கிராமத்தினர் திட்டத்தை கைவிட வேண்டுமென உறுதியாக இருப்பதை உணர்ந்த கட்சியினர் அது தொடர்பாக கட்சி மேலிடத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
டெல்லி பயணம்: இதையடுத்து, மேலூர், அரிட்டாப்பட்டி கிடாரிப்பட்டி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த மகாமுனி அம்பலம், ஆனந்த், போஸ், முருகேசன், முத்துவீரணன், சாமிக்கண்ணு, ஆனந்த் ஆகியோரை பாஜக மாநில பொதுச்செயலாளர் ராம.சீனிவாசன், மதுரை மாவட்டத் தலைவர் மகா.சுசீந்திரன், புறநகர் மாவட்டத்தலைவர் ராஜசிம்மன் ஆகியோர் டெல்லிக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
இதற்காக நேற்று காலை மதுரை விமானநிலையத்தில் இருந்து அனைவரும் டெல்லி செல்லும் விமானத்தில் கிளம்பி சென்றனர். டெல்லியில் இன்று ஒன்றிய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சர் கிஷன் ரெட்டியை சந்தித்து பேசவுள்ளனர். இதன்பிறகு அரிட்டாபட்டி டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்வது தொடர்பான முக்கிய அறிவிப்பை ஒன்றிய அரசு தரப்பில் இருந்து வெளியிடலாம் எனத் தெரிகிறது.
‘டெல்லி சென்றவர்கள் விவசாயிகளே இல்லை’பெரியாறு பாசன ஒரு போக விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த அரிட்டாபட்டி கருப்பணன் கூறியதாவது: இதுவரையில் டங்ஸ்டன் எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொள்ளாதவர்களை பாஜகவினர் டெல்லி அழைத்து சென்றுள்ளனர். அவர்களுக்கும், விவசாயிகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எங்களது ஆலோசனையின்றி அவர்களை அழைத்து சென்றுள்ளனர். ஒன்றிய அரசு நல்ல முடிவை அறிவித்தால் ஏற்றுக் கொள்வோம்.
தவறான வழியில் எந்த தீர்வு கண்டாலும் அதை எதிர்கொள்ள எந்தவிதத்திலும் தயங்க மாட்டோம். விவசாயிகள் மட்டுமின்றி தமிழகம் எங்கும் போராட்டம் கொந்தளிக்கும். எங்களுக்கு எந்தவிதமான கருத்து வேறுபாடும் இல்லை. எங்களது உணர்வுப்பூர்வமான வெறியோடு தான் பேசுகிறோம். எங்களது ஊர் கூட்டத்தில் சொல்லுங்கள் அல்லது அறிக்கை விடுங்கள் எனத்தான் நாங்கள் கூறினோம்.
மழையும், தண்ணீரும் இல்லாமல் பிள்ளைகளோடு சிரமப்பட்டு, அரும்பாடுபட்டு ஏற்படுத்திய ஒற்றுமையை சீர்குலைக்கும் சதி செயலாக இருக்கும் என பயந்து தான் விமான நிலையம் வந்து பாஜகவினரிடம் கேள்வி கேட்கலாம் என வந்தோம்.
அவர்கள் அதற்குள் கிளம்பி விட்டனர். இதை மனப்பூர்வமாக நாங்கள் ஏற்கவில்லை. எதையும் சந்திக்க தயாராக உள்ளோம். ஒன்றிய அமைச்சரை சந்திப்பதற்காக அண்ணாமலை அழைத்தது தொடர்பாக நாங்கள் எந்த முடிவும் எடுக்கவில்லை.
தேவையில்லாமல் வெளியூர்களில் உள்ளவர்களை அழைத்து சென்றுள்ளனர். தவறான முடிவு வந்தால் கண்டிப்பாக விண்ணை முட்டும் அளவுக்கு போராடுவோம். பாஜ மாநில தலைவர் அண்ணாமலை வல்லாளபட்டி கூட்டத்தில் ஒருபோக விவசாயிகள் ஒருங்கிணைத்து 5 பேரை அனுப்புமாறு கூறினார். இதுவரை எந்த தகவலும் இல்லை.இவ்வாறு கூறினார்.
The post தமிழ்நாடு அரசின் நெருக்கடிக்கு பணிந்து டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை கைவிடுகிறதா ஒன்றிய அரசு? appeared first on Dinakaran.