தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று முல்லை பெரியாறு அணை பராமரிப்பு பணிகளுக்கு கேரள அரசு அனுமதி

4 weeks ago 5

சென்னை: தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று, முல்லைப் பெரியாறு அணை பராமரிப்பு பணிக்களுக்காக கட்டுமான பொருட்கள் எடுத்துச் செல்ல கேரள அரசு அனுமதி அளித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டம் முல்லைப் பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள, வாகனங்கள் மூலம் கட்டுமான பொருட்களை எடுத்து செல்ல கேரள வனத்துறையிடம் முறையாக அனுமதி பெறப்பட்டுள்ளது.

தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களின் குடிநீர், பாசன ஆதாரமாக திகழும் முல்லைப்பெரியாறு அணை தமிழக-கேரள எல்லையில் உள்ளது. தமிழ்நாடு அரசு பொதுப்பணி துறையின் சார்பில், முல்லைப்பெரியாறு அணை பகுதியில் ஆண்டுதோறும் மராமத்து பணி மேற்கொள்ளப்படுவது வழக்கம். இந்நிலையில் பொதுப்பணித்துறையின் சார்பில் கடந்த 4ம் தேதி, தேனியில் இருந்து 2 தனியார் லாரிகளில் தளவாடப் பொருட்களை ஏற்றிக் கொண்டு, இடுக்கி மாவட்டம், குமுளி வட்டம் வல்லக்கடவு வழியாக முல்லைப் பெரியாறு அணைக்கு கொண்டு சென்றனர்.

சோதனைச் சாவடியில் முல்லைப் பெரியாறு அணைக்கு பொருட்கள் எடுத்துச் செல்ல கேரள வனத்துறையினரிடம் உரிய அனுமதி பெற்ற பின்னரே அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, தேனி மாவட்ட ஆட்சி தலைவர், தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமை செயலாளருக்கு (நீர்வளத்துறை) தகவல் தெரிவிக்கப்பட்டு, கேரள அரசின் மூலம் வல்லக்கடவு சோதனைச்சாவடி மற்றும் தேக்கடி படகு இறங்கு தளம் வழியாக முல்லை பெரியாறு அணை பகுதிக்கு கட்டுமான பொருட்களை கொண்டு செல்வதற்கு அனுமதி பெறப்பட்டுள்ளது என தேனி மாவட்ட ஆட்சி தலைவர் ஆர்.வி.ஷஜீவனா தெரிவித்துள்ளார்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று முல்லை பெரியாறு அணை பராமரிப்பு பணிகளுக்கு கேரள அரசு அனுமதி appeared first on Dinakaran.

Read Entire Article