சென்னை: தமிழ் வழியில் படித்தாக போலியான சான்றிதழ்களை டிஎன்பிஎஸ்சியில் சமர்ப்பித்து குரூப் -1 தேர்வு மூலம் 20% இட ஒதுக்கீட்டில் அரசு அதிகாரிகளாக பதவிபெற்ற 4 பேர் மற்றும் மோசடிக்கு உடந்தையாக இருந்த மதுரை காமராஜ் பல்கலைக்கழக நிர்வாகிகள் உட்பட 9 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை 8 சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில், கடந்த 2016-2019ம் ஆண்டில் குரூப்-1 சர்வீசஸ் தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடுக்கப்பட்டது.
மோசடி தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்புத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி மதுரை மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் குரூப்-1 தேர்வில் நடந்த முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தினர். அப்போது, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் 2016-19ம் ஆண்டில் நடந்த தேர்வில் தமிழ் வழியில் படித்த, ரெகுலர் கல்லூரியில் படித்தவர்கள், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி இயக்குநரகத்தின் மூலமாகவும் படித்த 22 பேர் மீது விசாரணை நடத்தப்பட்டது.
அதில் 2012-2019 ஆண்டில் சமர்பித்த 22 பேரின் ‘பிஎஸ்டிஎம்’ சான்றிதழ்களில் (தமிழ் வழியில் படித்ததாக வழங்கப்படும் சான்றிதழ்) 4 பேர் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி இயக்குநரகம் மூலம் படித்தவர்கள் என தெரியவந்தது. அதில் ஸ்வப்னா, சங்கீதா, சதீஷ்குமார், நமசிவாயம் உட்பட 34 பேர் மதுரை காமராஜர் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி இயக்குனரகம் மூலமாகவும் தேர்வர்களின் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர். அவர்களில் கலைவாணியின் பெயரும் இடம் பெற்றுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஆனால் பல்கலைக்கழக சேர்க்கையின் போது பதிவுக் கட்டணம் செலுத்திய நமச்சிவாயம் தவிர, கலைவாணி, ஸ்வப்னா, சதீஷ்குமார், சங்கீதா ஆகிய 4 பேர் முறையாக மதுரை காமராஜர் பல்கலைக்கழக தொலை தூரக்கல்வியின் நுழைவுக் கட்டணத்தைச் செலுத்தவில்லை என தெரியவந்தது. இவர்கள் 4 பேரும் அந்தந்த காலத்தில் தேர்ச்சி பெறவில்லை. மொத்தமாக ஒரே நேரத்தில் அனைத்து பாடப் பிரிவுகளிலும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தின் தொலைதூரக் கல்வி இயக்குநரகம் மூலம் படித்து, தமிழ் வழியில் படித்தவர்களுக்கான ஒதுக்கீட்டின் கீழ் குரூப்-1 பணியிடங்களைத் தேர்வு செய்த ஸ்வப்னா, சங்கீதா, சதீஷ்குமார், கலைவாணி ஆகியோர் மதுரை காமராஜர் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி இயக்குனரகத்தின் தேர்வு கட்டணத்தில் சேர்க்கைக் கட்டணம் வரவு வைக்கப்படவில்லை எனவும் தெரியவந்தது.
எனவே இந்த 4 பேரும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப்-1 தேர்வில் சமர்ப்பிக்கப்பட்ட பிஎஸ்டிஎம் சான்றிதழ்கள் போலியானது என தெரியவந்தது. குறிப்பாக, மதுரை திருப்பரகுன்றம் (மாநில டாக்ஸ்) உதவி கமிஷனராக பணியாற்றி வரும் திருநங்கை ஸ்வப்னா(34) என்பவர், தமிழ் வழி ஒதுக்கீட்டின் 20 சதவீதம் இடஒதுக்கீட்டின் கீழ் மதுரை காமராஜ் பல்கலைக்கழக தொலைதூர கல்வி இயக்ககம் மூத்த கண்காணிப்பாளர் சத்தியமூர்த்தி மற்றும் இளநிலை கண்காணிப்பாளர் புருஷோத்தமன், பல்கலைக்கழக படிப்பு மைய ஒருங்கிணைப்பாளர் உதவியோடு, பி.ஏ. தமிழ் படித்ததாக பொய்யான மற்றும் போலிச் சான்றிதழைப் பெற்றுள்ளார்.
அதேபோல், கோயம்புத்தூர் மாவட்டம், மாவட்ட ஆட்சியரின் தனி உதவியாளராக (பொது) தற்போது பணிபுரிந்து வரும் சங்கீதா தமிழ்நாடு அரசுப் பணிகளில் தமிழ் வழி ஒதுக்கீட்டின் கீழ் 6.1.2020 அன்று துணை ஆட்சியராக நியமனம் பெற்றார். அவர், பி.ஏ.(வரலாறு), தமிழ் வழியில் படித்தார். கடந்த 30.6.2014 அன்று தேனியில் உள்ள லைப் கல்வி அறக்கட்டளை நிர்வாகிகள் முரளி, நாராயண பிரபு மூலம் போலியான ஆவணம் பெற்றுள்ளார். குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்ற சதீஷ்குமார் தற்போது சேலம் மாவட்டம் ஆத்தூர் சப்-டிவிஷனில் டிஎஸ்பியாக பணியாற்றி வருகிறார்.
இவர், சேலம் மாவட்டம், பி.ஏ. (வரலாறு) தமிழ் வழியில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி இயக்குநரகத்தில் 30.12.2015 அன்று ஜெயம் நிறுவனம், திருநெல்வேலி மூலம் விண்ணப்ப விண்ணப்பித்துள்ளார். அதற்காக கட்டணமாக ரூ.5,200 செலுத்தப்பட்டதாகவும் சான்றிதழில் காட்டப்பட்டுள்ளது. ஆனால் சான்றிதழ் சரிபார்ப்பில், மதுரை காமராஜர் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி இயக்குனரகத்தின் நிதி மற்றும் கணக்குப் பிரிவில் அத்தகைய கட்டணம் எதுவும் சதீஷ்குமார் பெயரில் வரவு வைக்கப்படவில்லை என விசாரணையில் உறுதியானது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் போலியான சான்றிதழை அளித்த சதீஷ்குமார் டிஎஸ்பியாக பணியாற்றி வருவது தெரியவந்தது. கலைவாணி என்பவர் தற்போது காஞ்சிபுரம் வருவாய் கோட்ட அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். இவர் பிஎஸ்டிஎம் ஒதுக்கீட்டின் கீழ் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் 29.7.2022 அன்று பி.காம். (வணிகம்) தமிழ் வழியில் தொலைதூரக் கல்வி இயக்குநரகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் 17 தாள்களை ஒரே அமர்வில் தேர்ச்சி பெற்றதாக கூறப்படுகிறது.
பல்கலைக்கழகத்தில் சேர்க்கை அட்டையில் உள்ள பதிவு தவறானது மற்றும் போலியானது என தெரியவந்தது. எனவே குற்றம்சாட்டப்பட்ட திருநங்கையான ஸ்வப்னா(34), சங்கீதா(40), சதீஷ்குமார்(40), கலைவாணி(37) ஆகியோர் 1ஆம் ஆண்டு முதல் 3ஆம் ஆண்டு வரை தமிழ் வழி மூலம் நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதியாக, சேர்க்கை நடைமுறைகளைப் பின்பற்றாமல், சேர்க்கை, பதிவுக் கட்டணம், கல்விக் கட்டணங்கள் ஆகியவற்றைச் செலுத்தாமல், அந்தச் சான்றிதழ்களை போலியாக தயாரித்து, அவை உண்மை போன்று தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தில் போலி சான்றிதழ்களை சமர்ப்பித்து விரும்பிய பதவியை 4 பேரும் பெற்றது விசாரணையின் மூலம் உறுதியானது.
போலி சான்றிதழ்களை தயாரித்து கொடுக்க அரசு பதவியை தவறாக பயன்படுத்திய மதுரை காமராஜ் பல்கலைக்கழக தொலைதூர கல்வி முன்னாள் சீனியர் கண்காணிப்பாளர் சத்தியமூர்த்தி(62), மதுரை காமராஜ் பல்கலைக்கழக தொலைதூர இளநிலை கல்வி கண்காணிப்பாளர் புருஷோத்தமன்(59) மற்றும் மோசடிக்கு உடந்தையாக இருந்த தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் உள்ள லைப் கல்வி அறக்கட்டளை நிர்வாகி முரளி(40), நாராயண பிரபு(41) மற்றும் கோவையில் இயங்கும் சேதுபதி இன்ஸ்டிடியூட் ஆப் ஹையர் ஸ்டடீஸ் நிறவனத்தின் ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன் ஆகியோர் இருந்தது தெரியவந்தது.
அதைதொடர்ந்து மதுரை லஞ்ச ஒழிப்புத்துறை, தமிழ் வழியில் படித்ததாக போலியான ஆவணங்கள் தயாரித்தது அதன் மூலம் தமிழ் வழியில் படித்தவர்களுக்கான 20 சதவீத ஒதுக்கீட்டில் தமிழ்நாடு அரசு தேர்வாணையம் நடத்திய குரூப்-1 தேர்வு மூலம் வெற்றி பெற்று அரசு அதிகாரிகளாக பணியாற்றி வரும் ஸ்வப்னா, சங்கீதா, சதீஷ்குமார், கலைவாணி மற்றும் மதுரை காமராஜ் பல்கலைக்கழக தொலைதூர கல்வி நிறுவன அதிகாரிகள் 2 பேர் உட்பட 9 பேர் மீது பிஎன்எஸ் சட்டப்பிரிவு 120(பி), 420, 465, 467, 468, 167, 471, மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மோசடியில் ஈடுபட்ட 4 அரசு அதிகாரிகள் உட்பட 9 பேரை கைது செய்யவும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
The post தமிழ் வழியில் படித்ததாக போலி சான்று சமர்ப்பித்து குரூப்-1 தேர்வு மூலம் பதவி பெற்ற 4 அரசு அதிகாரிகள் மீது வழக்கு: உடந்தையாக இருந்த 5 பேர் மீதும் லஞ்ச ஒழிப்பு துறை நடவடிக்கை; 20 சதவீத ஒதுக்கீட்டை பெற நடந்த மோசடி அம்பலம் appeared first on Dinakaran.