
கோவில்பட்டி,
பொன்னு விளைகிற பூமி என்று விவசாயிகள் விளை நிலத்தை உயிராக மதிப்பர். அவர்கள் மண்ணைப் பொன்னாகக் கருதுவர். அப்படிப் பொன்னாகக் கருதும் நிலத்தில், விவசாயப் பருவ காலத் தொடக்க நாளான சித்திரை முதல்நாள் அன்று கலப்பைகளுக்கு மஞ்சள் பூசி, பூ கட்டி வணங்கிவிட்டு விவசாயிகள் ஒன்று சேர்ந்து ஊர்ப் பொது நிலத்தில் உழுவர்.
இந்த நிகழ்வுக்குத்தான் பொன் ஏர் பூட்டுதல் என்று பெயர். கால ஓட்டத்தில், மாடு பூட்டி ஏர் உழும் வழக்கம் குறைந்து, டிராக்டர் மூலம் உழுது விவசாயம் செய்யும் காலம் வந்துவிட்டது. இருந்தபோதிலும் மரபு பேணப்பட வேண்டும் என்ற எண்ணத்தில் பொன் ஏர் பூட்டும் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, தமிழ் புத்தாண்டையொட்டி கோவில்பட்டி அருகே உள்ள சிங்கலிபட்டி கிராமத்தில் பொன் ஏா் பூட்டும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. விவசாயிகள் தங்கள் வீடுகளில் வளர்க்கப்படும் கால்நடைகளான பசுக்கள், காளை மாடுகளை ஊருணிகளில் குளிப்பாட்டி கொம்புகளுக்கு மஞ்சள் பூசி, குங்குமமிட்டு, டிராக்டர்களை கழுவி மஞ்சள் பூசி, ரிப்பன் பலூன் கட்டி வீடுகளில் இருந்து பூஜை பொருட்கள், விதை, வித்துக்கள் எடுத்து வந்தனர்.
தொடர்ந்து விநாயகர் கோவிலில் பூஜை செய்து வருகிற பருவ ஆண்டில் பயிர்களுக்கு ஏற்ற மழை பெய்து நல்ல மகசூல் கிடைக்கவும், நிலங்களில் பணிபுரியும் போது விஷ ஜந்துக்கள், மற்றும் இயற்கை இடர்பாடுகளால் பாதிப்பு ஏற்படாமல் இருக்கவும் வீடுகளில் இருந்து உழவு மாடுகள், அதனை தொடர்ந்து டிராக்டர்கள் புடைசூழ ஊர் பொது நிலத்தில் வடக்கில் இருந்து தெற்காக ஏர் பூட்டி உழவு செய்தனர்.
இந்த நிகழ்ச்சியில் கோவில்பட்டி உதவி கலெக்டர் மகாலட்சுமி கலந்து கொண்டு விதைகளை தூவி பொன் ஏர் உழவு பணியை தொடங்கி வைத்தார். உழவு முடிந்து வீடு திரும்பிய விவசாயிகளுக்கு வீடுகளில் தாய்மார்கள் பாதம் கழுவி, மஞ்சள் மற்றும் குங்குமமிட்டு பூஜை செய்து, ஆரத்தி எடுத்தும் முறை மாமன்கள் மீது மஞ்சள் நீர் ஊற்றி கொண்டாடி வரவேற்றனர். பின்னர் சம்பிரதாய வழக்கப்படி களைப்பாக வந்த விவசாயிகளுக்கு பானக்காரம் எனப்படும் புளிக்கரைசல் மற்றும் வெல்லம் கலந்த பானம் வழங்கினர்.
இதேபோல் ஓட்டப்பிடாரம் அருகே மேலமீனாட்சிபுரம் கிராமத்தில் உள்ள மக்கள் தங்கள் வீடுகளில் வளர்த்து வரும் காளை மாடுகளை குளிப்பாட்டி அதன் மீது சந்தனம், குங்குமம் பூசி, கொம்பில் மலர்களைக் கொண்டு காளைகளை அலங்கரித்தனர். பின்னர் விவசாய நிலத்தில் சிறப்பு பூஜைகளுடன் உழவு செய்தனர். விவசாயிகள் தங்களது குடும்பத்துடன் பங்கேற்று பாரம்பரிய மிக்க விதைகளை பயிரிட்டு பொன் ஏர் திருவிழாவை தொடங்கி வைத்தனர்.
இதையடுத்து ஏர் கலப்பை பூட்டிய மாடுகளை வைத்து விவசாயிகள் நிலத்தை உழுதனர். இதேபோன்று எப்போதும்வென்றான் கிராமத்தில் விவசாயிகள் டிராக்டர் மூலம் பொன் ஏர் பூட்டி விவசாய பணிகளை தொடங்கினார்.