
சென்னை,
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சென்னை மற்றும் புறநகர் பகுதியில் வசிக்கும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்வதற்காகவும், பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலை கிரிவலம் செல்வதற்காக நேற்று கிளாம்பாக்கம் புறநகர் பஸ் நிலையத்தில் ஏராளமான பயணிகள் குவிந்தனர்.
பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கும், தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களுக்கு அரசு சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இதனால் பொதுமக்கள் சிரமமின்றி பஸ்களில் ஏறி சென்றதை காண முடிந்தது.
பஸ் நிலையத்தில் கூட்டம் அலைமோதிய காரணத்தால் கூடுவாஞ்சேரி உதவி போலீஸ் கமிஷனர் ராஜு பிரின்ஸ் ஆரோன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
மேலும் பயணிகளின் வசதிக்காக பல்வேறு இடங்களில் ஒலிபெருக்கி மூலம் சிறப்பு பஸ்களின் வருகை குறித்து போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்து கொண்டிருந்தனர். ஏராளமானோர் தங்களது சொந்த ஊருக்கு சென்றதால், சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் அணிவகுத்து மெதுவாக ஊர்ந்து சென்றதை காண முடிந்தது.