சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில், நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின் கீழ் செயல்படும் தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் சார்பில் உருவாக்கப்பட்டுள்ள கலைஞர் கருவூலம் சிறப்பு இணையப் பக்கத்தை (https://www.tamildigitallibrary.in/kalaignar) முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து, சங்கத்தமிழ் நாள்காட்டியினை வெளியிட்டார்.
கலைஞர் நடத்திய தமிழிணையம்-99 மாநாட்டின் விளைவாக, தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவச் செய்திட தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின் கீழ் தமிழ் இணையக் கல்விக்கழகம் கடந்த 2001ம் ஆண்டு பிப்.17ம் தேதி உருவாக்கப்பட்டது. தமிழ் இணையக் கல்விக்கழகத்தால் உருவாக்கப்பட்டுள்ள ‘கலைஞர் கருவூலம்’ என்ற சிறப்பு இணையப் பக்கத்தை (https://tamildigitallibrary.in/kalaignar) முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.
இப்பக்கத்தில் இலக்கியம், இதழியல், உரைகள், திரைப்படங்கள், காலப்பேழை, கலைஞர் குறித்து எனும் தலைப்புகளின் கீழ், 17 கலைஞரின் நாவல்கள், 36 சிறுகதைகள், 17 நாடகங்கள், 62 கவிதைகள், 18 கட்டுரைகள், 6 தன்வரலாறு, 7 இலக்கிய உரைகள், 322 கலைஞர் நடத்திய இதழ்களின் பிரதிகள், 18 ஆண்டு மலர்கள், 73 கடிதங்கள், 3 கேலிச்சித்திரங்கள், 36 சட்டமன்ற உரைகள், 89 சொற்பொழிவுகள், ஓர் நேர்காணல், 11 திரைக்கதை வசனங்கள், 2 பாடல்களின் தொகுப்புகள், 126 புகைப்படங்கள், 19 ஒலிப்பேழைகள், 9 காணொலிகள், 82 கலைஞர் குறித்த நூல்கள் மற்றும் 2 கலைஞர் குறித்த கட்டுரைகள், என மொத்தம் 955 அரிய உள்ளடக்கங்கள் இடம்பெற்றுள்ளன.
பண்பாட்டையும், நாகரிகத்தையும் அள்ளித்தரும் அரிய களஞ்சியமான சங்க இலக்கியங்கள் தமிழர்களின் வாழ்வியலைப் படம்பிடித்துக் காட்டுகின்றன. எனவே, சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டிலும் எட்டுத்தொகையிலும் உள்ள அறிவுச் செல்வங்களை இன்றைய தலைமுறை பெறுவது அவசியம். நம் பண்பாட்டில் தலைசிறந்து விளங்கும் அக வாழ்க்கையை எடுத்துரைக்கும் 211 பாடல்களும், தமிழர்களின் வீரம், கொடை, புகழ், கடமைகள், கல்விச் சிறப்பு முதலானவற்றை எடுத்தியம்பும் 141 புறப்பாடல்களும், அகமும் புறமும் சார்ந்து 14 பாடல்களும், என 366 பாடல்களைத் தேர்ந்தெடுத்து ஓவியங்களாக வரைந்து, விளக்கவுரை மற்றும் ஆங்கில மொழிபெயர்ப்புடன் தயாரிக்கப்பட்டுள்ள சங்கத்தமிழ் நாள்காட்டியினை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
இப்பாடல்களுக்கான ஓவியங்கள் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் ஓவியர்களால் வரையப்பட்டன. இச்சங்கத்தமிழ் நாள்காட்டி எல்லா ஆண்டுகளிலும் பயன்படுத்துவதற்கு ஏற்ற வகையில் (Infinity Calendar), ஆங்கிலத் தேதிகளை மட்டும் குறிப்பிட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. தமிழ்ச் சமூகத்தின் ஒப்பற்ற மரபினை நினைவூட்டும் இச்சங்கத்தமிழ் நாள்காட்டி, தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் மற்றும் தமிழ்நாடு மாநில தொழில் மேம்பாட்டுக் கழகத்தின் நிதி நல்கையுடன் தமிழ் இணையக் கல்விக்கழகத்தால் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தலைமைச் செயலாளர் முருகானந்தம், தமிழ் இணையக் கல்விக்கழக இயக்குநர் காந்தி, இணை இயக்குநர் கோமகன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
* பண்பாட்டையும், நாகரிகத்தையும் அள்ளித்தரும் அரிய களஞ்சியமான சங்க இலக்கியங்கள் தமிழர்களின் வாழ்வியலைப் படம்பிடித்துக் காட்டுகின்றன. எனவே, சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டிலும் எட்டுத்தொகையிலும் உள்ள அறிவுச் செல்வங்களை இன்றைய தலைமுறை பெறுவது அவசியம்.
The post தமிழ் இணைய கல்விக்கழகம் உருவாக்கியுள்ள கலைஞர் கருவூலம் சிறப்பு இணைய பக்கம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.