காலத்துக்கு ஏற்ப மொழி முன்னேற வேண்டும் என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார். தகவல் தொழில்நுட்பத் துறையின் தமிழ் இணையக் கல்விக்கழகம் மற்றும் எத்திராஜ் மகளிர் கல்லூரி சார்பில் கணித்தமிழ் சொற்பொழிவு நிகழ்ச்சி எழும்பூரில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வை தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.
‘செயற்கை நுண்ணறிவும் கலைகளும்’ என்ற தலைப்பில் முனைவர் மதன் கார்க்கி பேசும்போது, ‘‘“ஒரு கலையின் முக்கியமான பணி உணர்வை கடத்துவதுதான். சிற்பங்கள், ஓவியங்கள் நம்மிடம் பேச வேண்டும். பாடல்கள் நம்முடன் கலந்திட வேண்டும். இதெல்லாம் செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்டால், அதே உணர்வை நமக்கு தருமா? இதில் சரி எது, தவறு எது என்பதில்லை. ஆனால் அந்த கேள்வி அவசியம். எதிர்காலத்தில் கருவிகளுடன் நாம் போட்டிபோடப் போகிறோம். அதற்கு தயாராகி கொள்ள வேண்டும்” என்றார்.