தமிழில் பெயர்ப்பலகை வைக்காத கடைகள் மற்றும் நிறுவனத்திற்கு ரூ.2000 அபராதம் விதிக்க பரிந்துரை

3 weeks ago 5

சென்னை: சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் தமிழில் பெயர்ப்பலகைகள் வைப்பது தொடர்பாக தொழிலாளர் துறை மற்றும் சென்னை மாநகராட்சி இணைந்து நடத்திய வணிகர் சங்கப் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் தொழிலாளர் துறை ஆணையாளர் ராமன், தலைமையில் நேற்று ரிப்பன் கட்டட வளாகக் கூட்டரங்கில் நடைபெற்றது. தமிழில் பெயர்ப்பலகைகள் அமையப் பெறுவதை உறுதி செய்வதற்காக அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியரின் தலைமையில் மாவட்ட அளவிலான குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக் குழுவின் மூலம், தமிழில் பெயர்ப்பலகை வைப்பதை உறுதி செய்வதற்கான உத்திகளை வகுத்தல், பெயர்ப்பலகைகள் வைப்பது தொடர்பான சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான வழிமுறைகளை உருவாக்குதல், துண்டுபிரசுரங்களை வழங்குவதன் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்ற செயல்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டன.

உள்ளாட்சி அமைப்புகளில் தமிழில் பெயர்ப்பலகைகள் வைக்காத கடைகள் மற்றும் நிறுவனத்திற்கு தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் விதிகள், 1948 இன் விதி 18 (அபராதம்) இன் கீழ் ரூ.2000 அபராதம் விதிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மேலும், கேட்டரிங் நிறுவனங்களில் தமிழில் பெயர்ப்பலகைகள் வைக்கப்படாவிட்டால், தமிழ்நாடு கேட்டரிங் நிறுவனங்கள் சட்டம், 1958 இன் பிரிவு 23 (அபராதங்கள்) இன் கீழ் ரூ.500 வரை அபராதம் விதிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில், துணை ஆணையாளர் (வருவாய் (ம) நிதி) பிரதிவிராஜ், தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநர் கார்த்திகேயன், மாநகர வருவாய் அலுவலர் பானுசந்தர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ஹஸ்ரத்பேகம், தொழிலாளர் துறை இணை ஆணையாளர்கள் விமலநாதன், ரமேஷ், அலுவலர்கள் மற்றும் வணிகர் சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

 

The post தமிழில் பெயர்ப்பலகை வைக்காத கடைகள் மற்றும் நிறுவனத்திற்கு ரூ.2000 அபராதம் விதிக்க பரிந்துரை appeared first on Dinakaran.

Read Entire Article