தமிழர்களை புறக்கணிக்கும் மோடி

1 month ago 6

இலங்கைக்கு மூன்று நாள் பயணமாக இந்திய பிரதமர் மோடி சென்றார். அந்நாட்டு அதிபர் அனுர குமாரதிசநாயகவுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை கண்டிக்கும் வகையில் ேமாடி அரசு அழுத்தம் கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஏமாற்றமே மிஞ்சியது. இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்பது மட்டும் வலியுறுத்தப்பட்டது. ஆனால், தமிழக மீனவர்கள் கைது நடவடிக்கையை தடுக்கும் வகையில் இரு நாட்டை சேர்ந்த குழு அமைப்பது அல்லது இரு நாட்டு மீனவ சங்கங்கள் மூலம் இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்ற நோக்கத்தில் மோடி அரசு பேச்சுவார்த்தை நடத்தாதது மீனவர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

கடந்த 6 ஆண்டுகளில் மட்டும் 1200க்கும் மேற்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். 2020 முதல் 2025 ஜனவரி மாதம் வரையிலான காலகட்டத்தில் எல்லை தாண்டி மீன் பிடித்த குற்றச்சாட்டில் இலங்கை கடற்படையினரால் 1,247 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை கடற்படையுடன் கடலில் நடந்த மோதல்களில் 7 பேர் வரை இறந்து உள்ளனர் என்ற அதிர்ச்சி தகவலை மோடி அரசு கண்டு கொள்ளவில்லை என்பது தான் தமிழர்களுக்கு கவலையை ஏற்படுத்தி உள்ளது.

2014ம் ஆண்டு இலங்கை மீனவர் சங்க பிரதிநிதிகள், தமிழக மீனவர் பிரதிநிதிகள், இந்திய அரசு அதிகாரிகள் இடையே முத்தரப்புப் பேச்சு வார்த்தை நடந்தது. ஆனால், நிரந்தரத் தீர்வு எட்டப்படவில்லை. இந்நிலையில், இரு தரப்பு மீனவர்களுக்கும் இடையில் மீண்டும் பேச்சுவார்த்தையை தொடர செய்வதற்காக ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த மீனவ சங்க பிரதிநிதிகள் 5 பேர் கடந்த மார்ச் 25ம் தேதி இலங்கை சென்று பேச்சு நடத்தினர். பிரதமர் மோடி இலங்கைக்கு வரும்போது, அவரிடம் இது குறித்துப் பேச தங்களுடைய அதிபருக்கு கோரிக்கை விடுக்க உள்ளோம். இதன்மூலம் இப்பிரச்னைக்கு தீர்வு எட்டப்படும் என இலங்கை பிரதிநிதிகள் தெரிவித்தனர். எதுவும் நடக்கவில்லை.

இந்நிலையில் நேற்று நடந்த சட்டசபை கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆதங்கத்தோடு பேசினார். அதில், இலங்கை கடற்படையால் தொடர்ந்து மீனவர்கள் கைது செய்யப்படுவது வருத்தமாக உள்ளது. தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவதை தடுக்க பேரவையில் தீர்மானம் நிறைவேற்றினோம். ஆனால், இலங்கை சென்ற பிரதமர் மோடி மீனவர் பிரச்னை, கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக எந்த முன்னெடுப்பும் எடுத்ததாக தெரியவில்லை. 97 மீனவர்களும் அவர்களின் படகுகளும் மீண்டும் தாயகம் திரும்பும் என்ற எதிர்பார்ப்பு நிறைவேறாதது ஏமாற்றம் அளிக்கிறது. ஒன்றிய அரசுக்கு நாம் தொடர்ந்து அழுத்தம் கொடுத்த போதிலும் மீனவர்கள் கைது, படகுகள் பறிமுதல் தொடர்கிறது. ஒன்றிய அரசு எப்படி நடந்து கொண்டாலும் நாம் மீனவர்களுடன் இருப்போம் எனக்கூறி அவர்களது வாழ்வாதாரத்ைத மேம்படுத்த ரூ.217 கோடி செலவிடப்படும் என அறிவித்துள்ளார்.

இஸ்ரேல், அமெரிக்கா போன்ற நாடுகள் தங்களது நாட்டினரை தாக்கினால் அந்நாட்டின் மீது கடும் நடவடிக்கை எடுக்க தவறாது. அதுபோன்றுகூட வேண்டாம். தமிழக மீனவர்களும் இந்திய பிரஜை எனக்கருதி மோடி, இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுத்து பேச்சுவார்த்தை மூலம் நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுத்து இருக்க வேண்டும். தமிழர்களின் பிரச்னைகளை மோடி அரசு தொடர்ந்து புறக்கணிப்பதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.

The post தமிழர்களை புறக்கணிக்கும் மோடி appeared first on Dinakaran.

Read Entire Article