சென்னை,
இலங்கையில் ஏற்பட்ட பலத்த அரசியல் சூறாவளிக்கு பிறகு கடந்த செப்டம்பர் மாதம் 21-ந்தேதி நடந்த அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கூட்டணி சார்பில் போட்டியிட்ட இடதுசாரி வேட்பாளர் அதாவது, மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு கொள்கைகளைக்கொண்ட ஜனதா விமுக்தி பெரமுனா கட்சியின் வேட்பாளர் அனுரா குமார திசநாயகா வெற்றி பெற்று அதிபரானார். அவர் அதிபராக வெற்றி பெற்று பதவியேற்ற நேரத்தில் அவரது தேசிய மக்கள் கூட்டணிக்கு 225 இடங்கள் கொண்ட நாடாளுமன்றத்தில் 3 எம்.பி.க்கள் மட்டுமே இருந்தனர்.
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இருந்தால்தான் எண்ணிய திட்டங்களை முழுமையாக நிறைவேற்ற முடியும் என்ற நோக்கில், திசநாயகா நாடாளுமன்றத்தை கடந்த செப்டம்பர் மாதம் 21-ந்தேதி கலைத்து விட்டார். இந்தநிலையில் கடந்த 14-ந் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் பல வரலாறுகள் படைக்கப்பட்டுள்ளன. இதில் இலங்கை அதிபர் திசநாயகா கட்சியின் தேசிய மக்கள் சக்தி கூட்டணி 159 இடங்களைக் கைப்பற்றி மகத்தான வெற்றியைப் பெற்றதோடு மட்டுமல்லாமல், 1978-ம் ஆண்டு புதிய அரசியல் சட்டம் வகுக்கப்பட்டதில் இருந்து நடந்த தேர்தல்களில் எந்த அரசியல் கட்சி கூட்டணியும் பெறாத மகத்தான வெற்றியை பெற்றுள்ளது.
மூன்றில் இரு மடங்கு உறுப்பினர்கள் ஆதரவு இருப்பதால் இனி திசநாயகா எந்த சட்டமும் கொண்டு வந்து யாருடைய ஆதரவும் இல்லாமலேயே நிறைவேற்றிக்காட்ட முடியும். இதில் பெரிய ஆச்சரியம் என்னவென்றால் சிங்கள பவுத்த கட்சியான திசநாயகாவின் ஜனதா விமுதி பெரமுனா கட்சி அதாவது, மக்கள் விடுதலை முன்னணி வேட்பாளர்கள், சிங்களவர் அதிகம் வாழும் பகுதிகளில் மட்டுமல்லாமல் தமிழர்கள், முஸ்லிம்கள், மலையக தமிழர்கள் வாழும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பெருவாரியான வெற்றியை பெற்றுள்ளனர்.
மட்டக்கிளப்பு மாவட்டத்தை தவிர, அனைத்து மாவட்டங்களிலும் அழுத்தமாக கால் பதித்து விட்டார். இந்த பகுதிகளிலெல்லாம் இலங்கை தமிழ் அரசு கட்சியின் செல்வாக்கு கொடி கட்டி பறந்த நிலையில், இப்போது ஆதரவு இல்லாத நிலையை தேர்தல் முடிவு காட்டியுள்ளது. தேர்தலுக்கு முன்பே திசநாயகா இலங்கையின் அரசியல் சட்டம் புதிதாக எழுதப்படும் என்றும், அதிபரிடம் குவிந்துள்ள அதிகாரத்தை பரவலாக்குவேன் என்றும் உறுதியளித்து இருந்தார். அதேபோல் தமிழர்களுக்கு அதிகார பகிர்வு என்பதற்கு ஆரம்பத்திலேயே எதிர்ப்பு காட்டி இருக்கிறார். அதே நேரத்தில், புதிய தொடக்கத்துக்கு சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் உள்பட அனைத்து இலங்கை வாழ் மக்களையும் ஒன்றிணைப்பேன் என்று உறுதியளித்ததை நிறைவேற்றி காட்டவேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.
இவர் இடது சாரி சிந்தனை உள்ளவர் என்பதால் சீனாவுக்கு நெருக்கமாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டாலும் இந்தியாவின் பாதுகாப்புக்கு எதிரான எந்தவித செயல்களையும் தங்கள் மண்ணில் அனுமதிக்க மாட்டேன் என்று சொன்னது அவர் மீது ஒரு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவுக்கு வருமாறு அவருக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்ததை அவரும் ஏற்றுக்கொண்டு இருக்கிறார். அவர் அதிபராக பதவியேற்றதில் இருந்து கடலில் மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களின் கைது படலம் அதிகமாக இருக்கிறது. இதற்கு அவர் ஒரு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்பதுதான் தமிழ்நாட்டின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.