தமிழகம் முழுவதும் களைகட்டிய தீபாவளி கொண்டாட்டம்: புத்தாடை அணிந்து பட்டாசு வெடித்து மக்கள் உற்சாகம்

2 weeks ago 6

சென்னை,

நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாப்படும் பண்டிகைகளில் மிக மிக முக்கியமானது தீபாவளி பண்டிகை ஆகும். பொதுமக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த தீபாவளி பண்டிகை இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டிலும் தீபாவளி பண்டிகை மிகச்சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம் ஆகும். தமிழ்நாட்டில் தீபாவளி பண்டிகைக்கு உடலில் எண்ணெய் தேய்த்து குளிப்பது வழக்கம் ஆகும். இதையடுத்து, பொதுமக்கள் காலையிலே உடல் முழுவதும் எண்ணெய் தேய்த்து குளித்து புத்தாடைகள் அணிந்து தீபாவளியை பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர். உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் செல்போன் மூலம் குறுஞ்செய்தி அனுப்பியும் தொலைபேசியில் தொடர்பு கொண்டும் தங்களது தீபாவளி வாழ்துகளை பறிமாறிக்கொண்டனர். அக்கம்பக்கத்தில் வசிக்கும் மக்கள் ஒருவொருக்கொருவர் தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டு இனிப்பு,காரம்,முருக்கு,அதிரசம் வகைகளை பறிமாறிக்கொண்டனர். பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை புத்தாடை அணிந்து பட்டாசு வெடித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

கடந்த சில நாட்களாகவே தீபாவளி கொண்டாட்டத்தை முன்னிட்டு சிறுவர்களும், இளைஞர்களும் ஆர்வத்துடன் பட்டாசு வெடித்து வந்தனர். இன்று தீபாவளி பண்டிகை என்பதால் காலை முதலே பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். விழாக்காலங்களுக்கு பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வது வழக்கம் ஆகும்.

கடந்த 3 நாட்களில் மட்டும் தமிழ்நாடு முழுவதும் இருந்து சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். சென்னையில் இருந்து மட்டும் சுமார் 11 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்பட்டது. அதன் மூலம் சுமார் 3 லட்சம் பயணிகள் சொந்த ஊர்களுக்குச் சென்றனர். கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் கடந்த 3 நாட்களாக பயணிகள் கூட்டம் அலைமோதி வந்தது. பேருந்துகள் மட்டுமின்றி ரயில்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. பொதுமக்களின் வசதிக்காக தெற்கு ரயில்வே சார்பில் தீபாவளிக்காக சிறப்பு ரெயில்களும் இயக்கப்பட்டது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், நெல்லை என பெருநகரங்கள் மட்டுமின்றி தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் புத்தாடைகள் விற்பனை சிறப்பாக நடைபெற்றது. தமிழ்நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கான கோடியில் புத்தாடைகளின் விற்பனை ஜோராக நடைபெற்றுள்ளது.

தீபாவளி என்றால் பட்டாசுகள் இல்லாமல் நிறைவடையாது என்பதால் பட்டாசுகளின் விற்பனையும் சிறப்பாகவே நடைபெற்றது. ஆனால், கடந்தாண்டுடன் ஒப்பிடும்போது பட்டாசு விற்பனை மந்தமாக நடைபெற்று வருவதாக பட்டாசு வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். பொதுமக்கள் தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க 2 மணி நேரம் கட்டுப்பாடு விதித்துள்ள நிலையில், அரசு விதித்த நேரக்கட்டுப்பாட்டை பின்பற்றி பட்டாசுகள் வெடித்து வருகின்றனர். திருமணமான புதுமணத்தம்பதிகள் தலை தீபாவளியை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

மருத்துவமனைகளிலும் மருத்துவக்குழு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் காவல்துறை சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. சென்னையின் பிரதான சாலைகள் காலை முதலே புகை மூட்டமாக தென்படும் காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது. சேலம் மாநகராட்சியில் தூய்மை பணியாளர்களுடன் அப்பகுதி மக்கள் இணைந்து பட்டாசு வெடித்தும், மத்தாப்பு கொளுத்தியும் கோலாகலமாக கொண்டாடினர். தமிழகம் முழுவதும் தீபாவளி பண்டிகை களைக்கட்டி உள்ளது.

Read Entire Article