தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் பணிபுரியும் 50 வயது கடந்த ஆசிரியர்களுக்கு முழு உடல் பரிசோதனை: மாவட்டத்திற்கு தலா 150 பேரை தேர்வு செய்ய உத்தரவு

2 months ago 5

சேலம்: தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் பணிபுரியும் 50 வயதுக்கு மேற்பட்ட ஆசிரியர்களுக்கு முழு உடல் பரிசோதனை செய்யும் திட்டத்திற்கு, வரும் 28ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை செய்வதற்கான அரசாணை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, முதற்கட்டமாக 50 வயதிற்கு மேல் உள்ள ஆசிரியர்களுக்கு மட்டும், மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தலா ரூ.1.50 லட்சம் என 38 மாவட்டத்திற்கும், ரூ.57 லட்சம் தேசிய ஆசிரியர் நல நிதியிலிருந்து வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் ஆசிரியர்களுக்கு மேமோகிராம், இஎஸ்ஆர் சிறுநீர் பகுப்பாய்வு, ரத்தத்தில் சர்க்கரை பரிசோதனை, கொலஸ்ட்ரால், சிறுநீரக பரிசோதனை, இசிஜி, எக்ஸ்ரே உள்ளிட்ட 16 வகையான மருத்துவ பரிசோதனை செய்யப்பட உள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறையின் இயக்குனர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: ஒவ்வொரு மாவட்டத்திலும் 50 வயதினை கடந்தவர்களில், வயது மூப்பு அடிப்படையில் 150 ஆசிரியர்களை முழு உடல் பரிசோதனை செய்யும் திட்டத்தில் பயன்பெற தேர்வு செய்ய வேண்டும். 50 வயதினை கடந்த ஆசிரியர்களிடமிருந்து பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியர் பரிந்துரையுடன், வரும் 28ம் தேதிக்குள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும்.

பெறப்பட்ட விண்ணப்பங்களை மார்ச் 7ம் தேதிக்குள் முதன்மை கல்வி அலுவலர்கள் பரிசீலனை செய்து, 150 ஆசிரியர்களை தேர்வு செய்ய வேண்டும். மேலும், தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்கள் விவரங்களை மாவட்ட அளவிலான மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அலுவலருக்கு சமர்ப்பிக்க வேண்டும். உடல் நல பரிசோதனைக்கான கால அட்டவணையை தயாரித்து, அதன் தகவல்களை சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும் என அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் பணிபுரியும் 50 வயது கடந்த ஆசிரியர்களுக்கு முழு உடல் பரிசோதனை: மாவட்டத்திற்கு தலா 150 பேரை தேர்வு செய்ய உத்தரவு appeared first on Dinakaran.

Read Entire Article