சென்னை,
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
மக்களை சிந்திக்க விடாமல் போதையிலேயே வைத்திருந்தால் ஆண்டாண்டு காலம் நாமே ஆளலாம் என்ற நப்பாசையில் முதல்-அமைச்சர் ஸ்டாலினின் தி.மு.க. அரசு செயல்பட்டு வருகிறது என்று சமூக வலைதளங்களில் வரும் செய்திகள் உண்மையோ என்று எண்ணத் தோன்றுகிறது. யார் என்ன தொழில் செய்தாலும் பரவாயில்லை, தங்களின் சொந்த கஜானா நிரம்ப வேண்டும் என்ற குறிக்கோளோடு செயல்படுவதால் தமிழகமெங்கும் போதைப்பொருட்கள் ஆறாக பெருக்கெடுத்து ஓடுகிறது. பெரும்பாலான நிகழ்வுகளில் ஆளும் கட்சியினரே ஈடுபடுவதாக மக்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.
கஞ்சா, கள்ளச்சாராயம் மற்றும் போதைப்பொருட்கள் தடையின்றி கிடைக்கிறது என்றும், இதனால், சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து, குற்றங்கள் பெருகுகிறது என்று நான் பலமுறை சுட்டிக்காட்டியும், ஸ்டாலினின் தி.மு.க. அரசு இவற்றை கட்டுப்படுத்தவில்லை. நேர்மையாக செயல்படும் ஒரு சில காவல் துறையினரிடம் பிடிபடும் நபர்கள் ஆளும் கட்சியினராக இருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வருகின்றன. அதுபோன்ற சமயங்களில் கடமை உணர்வுடன் செயல்பட்டவர்களின் கரங்களை ஆட்சியாளர்கள் கட்டிப் போடுவதாக பாதிக்கப்படும் காவல் துறையினர் கொந்தளிக்கிறார்கள்.
ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசின் மெத்தனப் போக்கால், சென்னையில் உள்ள அரசின் வாழ்வியல் மேம்பாட்டு வாரியக் குடியிருப்புகள் எனப்படும் வீட்டு வசதி வாரியம் மற்றும் குடிசை மாற்று வாரியக் குடியிருப்புகளில் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் புழக்கம் அதிகரித்துள்ளதாக நாளிதழ்களில் செய்திகள் வந்துள்ளன.
குடிசைப் பகுதிகளை குறிவைத்து போதைப்பொருள் வியாபாரத்தை நடத்திய நாசகாரர்கள், தற்போது அடுக்குமாடி வாரியக் குடியிருப்புகளை தங்களின் வியாபாரக் கேந்திரமாக மாற்றியுள்ளது மிகவும் அபாயகரமானதாகும். இதுபோன்ற செயல்கள் அங்குள்ள குழந்தைகள், இளைஞர்களின் வாழ்க்கையை சீரழித்துவிடும். அதுமட்டுமல்லாமல், சென்ற மாதம் சென்னை புறநகர் பகுதிகளில், குறிப்பாக தனியார் கல்லூரிகள் இயங்கும் பகுதிகளில், மாணவர்கள் தங்கியுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் போதைப் பொருள்கள் சுதந்திரமாக கிடைப்பதாக வந்த தகவல்களை அடுத்து காவல் துறையினர் சோதனை நடத்தியதாகச் செய்திகள் ஊடகங்களிலும், நாளிதழ்களிலும் வெளிவந்தன.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேல் வீட்டு வசதி வாரியக் குடியிருப்புகள் உள்ளன. லட்சக்கணக்கானவர்கள் வசிக்கும் இந்த இடங்களைத் தேர்ந்தெடுத்து சமூக விரோதிகள் போதைப்பொருட்களை விற்பனை செய்வதாகவும் செய்திகள் வருகின்றன. இக்குடியிருப்புகளில் வசிப்பவர்கள் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் ஆவார்கள்.
குறிப்பாக சென்ற மாதம் ஒரு வழக்கில், சென்னை ஐகோர்ட்டு முதல் அமர்வால் நியமிக்கப்பட்ட அட்வகேட் கமிசன் தாக்கல் செய்த ஆய்வு அறிக்கையில், கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் சென்னையில் குறிப்பிட்ட பகுதியில் தாராளமாகக் கிடைப்பதாக குறிப்பிட்டுள்ளது. இதை சுட்டிக்காட்டிய சென்னை ஐகோர்ட்டு முதன்மை பெஞ்ச், 'போதுமான அளவு இதைத் தடுப்பதற்கான காவலர்கள் இல்லை' என்று கண்டித்ததுடன், 'ஐகோர்ட்டே போதைப் பொருளைக் கட்டுப்படுத்த சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் ஒப்படைக்க வேண்டியிருக்கும்' என்று எச்சரித்ததாகவும் நாளிதழ்கள் மற்றும் ஊடகங்களில் வந்த செய்தியினை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். தமிழகத்தில் அதிகரித்து வரும் போதைப்பொருட்கள் நடமாட்டத்தை எதிர்க்கட்சிகள், ஐகோர்ட்டு, நாளிதழ்கள் மற்றும் ஊடகங்கள் தொடர்ந்து சுட்டிக்காட்டியும் ஸ்டாலினின் தி.மு.க. அரசு, போதைப் பொருள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தாமல் வேடிக்கை பார்ப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது.
'பேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள்' எனும் வார்த்தைகளை நிரூபிக்கும் வகையில் செயல்படும் இந்த அரசை நம்பி பயன் இல்லை. காவல் துறையின் நேர்மையான அதிகாரிகள் மனது வைத்து செயல்பட்டால் மட்டுமே வாரியக் குடியிருப்புகளில் உள்ள இளைஞர்களை, குறிப்பாக மாணவ, மாணவிகளை அழிவில் இருந்து காக்க முடியும். பெற்றோர்கள் தங்களது மகன் மற்றும் மகள் என்ன செய்கிறார்கள் என்பதைக் கண்காணிக்க வேண்டும். தங்களது பிள்ளைச் செல்வங்களை போதை அரக்கர்களின் பிடியில் இருந்து காப்பாற்ற பெற்றோர்கள் முழு முயற்சி எடுக்க வேண்டும். அதிகார போதையில், தான் வைத்ததே சட்டம், எதையும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று செய்வேன், என்னைக் கேட்க யாருக்கும் உரிமை இல்லை என்று அகங்காரத்தோடு துக்ளக் தர்பார் நடத்தும் ஸ்டாலினின் தி.மு.க. அரசுக்கு தமிழக மக்கள் விரைவில் பாடம் புகட்டுவார்கள் என்று எச்சரிக்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.