தமிழகத்தை உலுக்கிய 13 ஏகாதசி கொலைகள்..! வேட்டையனாய் துப்பறிந்த டி.எஸ்பி..! ஒரு நிஜ கிரைம் திரில்லர்

3 months ago 21
தமிழகத்தில் மேற்கு மண்டலத்தை உலுக்கிய ஏகாதசி கொலை சம்பவங்களில் 12 பேரை கைது செய்து 46 சவரன் நகைகளை மீட்டுள்ளதாக போலீசார் அறிவித்துள்ளனர். மேற்கு மண்டலத்திற்கு உட்பட்ட ஈரோடு மாவட்டம் சென்னிமலை, அரச்சலூர், திருப்பூர் மாவட்டம் காங்கேயம் உள்ளிட்ட பகுதிகளில் தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்த முதியவர்கள், மூதாட்டிகள் தொடர்ச்சியாக கொடூரமாக அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தை உலுக்கியது. கடந்த 2020 ஆம் ஆண்டு தொடங்கி 2023 ஆம் ஆண்டு வரை அரங்கேறிய இந்த கொலை சம்பவங்கள் நடந்த இடத்தில் இருந்து நகை பணம் கொள்ளை போயிருந்தது. இந்த கொலைகள் அனைத்தும் மாதந்தோறும் இருள் சூழ்ந்த ஏகாதசி நாளிலோ அதனையொட்டிய நாட்களிலோ அரங்கேற்றப் பட்டதால் ஏகாதசி கொலைகள் என்றழைக்கப்பட்டன. இந்த கொலை சம்பவங்களில் கொலையாளிகளை கண்டுபிடிக்க அமைக்கப்பட்ட தனிப்படைகள் சோர்ந்து போன நிலையில் அரச்சலூர் பகுதிக்கு புதிதாக டி.எஸ்.பி யாக பொறுப்பேற்ற கோகுல கிருஷ்ணன் தலைமையிலான போலீசார் திறம்பட துப்பறிந்து 12 பேரை கைது செய்துள்ளதாகவும், அவர்களிடம் இருந்து 46 சவரன் நகைகளை பறிமுதல் செய்ததாகவும் அறிவித்துள்ளனர். இந்த 12 பேரும் ஒரு குறிப்பிட்ட சமுதாய குழுவை சேர்ந்தவர்கள் என்று கூறப்படும் நிலையில் ஒரு பகுதிக்கு திருட செல்வதற்கு முன்பாக அம்மி கொத்தும் நபர் போலவோ, டாடா ஏஸ் வாகனத்தில் அம்மிக் கல் விற்பது போலவோ சென்று வீடுகளை நோட்டமிட்டுள்ளனர். இன்னும் சிலர் பாம்பு பிடிப்பவர் போலவும், எலி பிடிப்பவர்கள் மற்றும் வேட்டையாடும் நபர்களைப் போல ஊருக்குள் சுற்றி முதியவர்கள் தனியாக வசிக்கும் வீடுகளை அடையாளம் கண்டுள்ளனர். இருள் சூழ்ந்த ஏகாதசி நாளில் சட்டை மற்றும் கைலியை கழற்றி , இடுப்பில் கயிறு போல சுருட்டி கட்டிக் கொண்டு தோட்டத்து வீட்டுக்குள் நுழைந்து ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த முதியவர்களை இரும்பு ராடால் கொடூரமாக தாக்கி கொலை செய்து நகைகளை கொள்ளையடித்ததாக பிடிபட்ட 12 பேரும் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர். வீட்டில் இருந்து நகைகளை கொள்ளையடித்து விட்டு காட்டு பாதையாக நடந்தே தப்பி உள்ளனர். சிசிடிவி, கைரேகை, உள்ளிட்ட பெரிய துப்பும் ஏதும் கிடைக்காத நிலையில் இதே போன்ற 1000 சம்பவங்கள் தொடர்பாக வழக்கு விவரங்களை படித்த டி.எஸ்.பி கோகுல கிருஷ்ணன் ஏற்கனவே கைதான குற்றவாளிகள் பயன்படுத்திய செல்போன் நம்பரை ஆய்வு செய்துள்ளார். பலர் தங்கள் சிம்கார்டுகளை சாமர்த்தியமாக மாற்றி இருந்தாலும், அவர்கள் பயன்படுத்திய செல்போனில் ஐ.எம். இ.ஐ நம்பரை வைத்து துப்பு துலக்கியதாக தெரிவித்தார். குற்ற சம்பவத்தில் தொடர்புடையவர்களின் செல்போன் எண்கள், சம்பவ இடத்தை சுற்றி இருந்ததை உறுதிப்படுத்தி அதன் மூலமாக ஒவ்வொருவராக பிடித்து விசாரித்து அவர்களிடம் இருந்து, கொலை நடந்த வீடுகளில் கொள்ளை யடிக்கப்பட்ட நகைகளை மீட்டதாக டி.எஸ்.பி கோகுல கிருஷ்ணன் தெரிவித்தார். நீண்ட நாட்கள் துப்பு துலங்காமல் இருந்த 13 கொலை சம்பவங்களில் சிறப்பாக துப்பு துலக்கிய டி.எஸ்.பிக்கு காவல் உயர் அதிகாரிகள் பாராட்டு தெரிவித்து உள்ளனர்.
Read Entire Article