தமிழகத்துக்கு நியாயமான நிதி ஒதுக்கீடு வேண்டும்: நிதி குழுவிடம் தமிழக காங்கிரஸ் வலியுறுத்தல்

2 months ago 9

சென்னை: ஒன்றிய அரசின் 16வது நிதி ஆணையக் குழு நேற்று முன்தினம் தமிழ்நாடு அரசு அதிகாரிகளுடன் சென்னையில் ஆலோசனை நடத்தியது. இதில் தமிழ்நாடு அரசு சார்பில் நிதி பங்கீடு தொடர்பாக அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில், தமிழக காங்கிரஸ் சார்பில் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ், காங்கிரஸ் ஊடக பிரிவு தலைவர் ஆனந்த் சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டு, தமிழக காங்கிரஸ் சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கைகளை மனுவாக அளித்தனர்.

அதில் கூறியிருப்பதாவது: 16வது நிதி ஆணையம் மாநிலங்களுக்கு வழங்க பரிந்துரை செய்யும் நிதி முழுமையும் சேதமின்றி முழு நிதி தொகுப்பையும் மாநிலங்களுக்கு கிடைக்கின்ற வகையில் தகுந்த ஏற்பாடுகளை செய்து தர வேண்டும்.மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய நிதி தொகுப்பை மொத்த தொகுப்பில் 50 சதவீதமாக கூட்ட வேண்டும்.

மக்களுடைய அடிப்படை தேவைகளான உணவு, சுகாதாரம், மருத்துவ வசதிகள், கல்வி, தொழில் வளர்ச்சி, சட்டம் ஒழுங்கு பராமரிப்பு போன்ற அனைத்து பணிகளையும் மாநில அரசுகளே செய்வதால் மாநில அரசுகள் ஒன்றிய நிதி தொகுப்பிற்கு தரும் ஒவ்வொரு ரூபாய்க்கும் குறைந்தது ரூ.0.75 மாநிலங்களுக்கு கிடைப்பதை ஆணையம் உறுதி செய்யவேண்டும்.

தென் மாநிலங்களுக்கு பகிரப்பட்ட நிதி குறைந்ததற்கான காரணங்களை 16வது நிதி ஆணையம் ஆராய்ந்து தென் மாநிலங்களுக்கும் குறிப்பாக தமிழ்நாட்டுக்கும் இழைக்கப்பட்டுள்ள அநீதிகளை களைந்து நீதி வழங்க வேண்டும். தமிழ்நாட்டிலிருந்து ஒன்றிய நிதி தொகுப்புக்கு வழங்கும் நிதிக்கு ஏற்ப நியாயமான நிதி ஒதுக்கீடு வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post தமிழகத்துக்கு நியாயமான நிதி ஒதுக்கீடு வேண்டும்: நிதி குழுவிடம் தமிழக காங்கிரஸ் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Read Entire Article