சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 15-ம் தேதி வாக்கில் தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை கேரளாவில் கடந்த ஆக.30-ம் தேதி தொடங்கியது. தொடக்கத்தில் பருவமழை தீவிரமடையவில்லை. ஜூன், ஜூலை மாதங்களில் மேட்டூர் அணை நீர்மட்டம் வெகுவாக குறைந்திருந்தது. ஆண்டுதோறும் வழக்கமாக வேளாண் பாசனத்துக்காக ஜூன் 12-ம் தேதி அணையிலிருந்து நீர் திறக்கப்பட்டு வந்த நிலையில், இந்த ஆண்டு திறக்கப்படவில்லை. இதனால் டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடி பாதிக்கப்பட்டது. ஆழ்துளை கிணறுகளை நம்பி பயிரிட்டவர்களின் பயிர்களும் போதிய நீரின்றி காய்ந்தது. தமிழக அரசு சார்பில் காவிரி நீரை திறக்கக்கோரி கர்நாடக அரசு, மத்திய அரசு, காவிரி நீர் மேலாண்மை ஆணையம், உச்சநீதிமன்றம் என தட்டாத கதவுகள் இல்லை.