சென்னை: தமிழகத்தில் நியாயவிலைக்கடை அரிசி கடத்தலால் 2022-23-ஆம் ஆண்டில் ரூ.1900 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்தக் கடத்தலைத் தடுக்க உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “பொது வினியோகத்திட்டத்தின் கீழ் வழங்கப்பட வேண்டிய அரிசி, கோதுமை உள்ளிட்ட உணவு தானியங்கள் உரியவர்களை சென்றடையாமல் கசிந்து செல்வதால் 2022-23ஆம் ஆண்டில் நாடு முழுவதும் ரூ.69,000 கோடி இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும், தமிழகத்தில் இலவசமாக வழங்கப்பட வேண்டிய அரிசி மக்களுக்கு வழங்கப்படாமல் வேறு வழிகளில் திருப்பி விடப்பட்டதன் மூலமாக மட்டும் ரூ.1900 கோடி தமிழக அரசுக்கு இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும் சர்வதேச பொருளாதார உறவுகளுக்கான இந்திய ஆராய்ச்சிக்குழு (Indian Council for Research on International Economic Relations) என்ற பொருளாதார அமைப்பு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.