தமிழகத்தில் மதுக்கடைகளை படிப்படியாக மூடுவது எப்போது ? டி.டி.வி.தினகரன் கேள்வி

2 months ago 13

சென்னை,

அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

பள்ளி, கல்லூரி மாணவர்களில் தொடங்கி இளைய சமுதாயத்தினர் பலர் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி தங்களின் எதிர்காலத்தை தொலைத்து வரும் நிலையில், வீதிகள் தோறும் மதுக்கடைகளை திறந்து அதன் விற்பனையை குறையவிடாமல் பார்த்துக் கொள்வது தான் திராவிட மாடல் அரசின் சாதனையா? என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர். தமிழகத்தில் நாள்தோறும் அரங்கேறும் கொலை, கொள்ளைச் சம்பவங்கள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் போன்ற சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளுக்கு மது மற்றும் போதைக் கலாச்சாரமே அடிப்படை காரணமாக அமைந்திருக்கிறது.

போதைப் பழக்கத்திற்கு அடிமையாகும் இளைஞர்கள் பலர் சில பல ஆயிரங்களுக்காக கூலிப்படைகளாக மாறி கொலைச் சம்பவங்களில் ஈடுபடக்கூடிய ஆபத்தான சூழலும் ஏற்பட்டுள்ளது. போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனை தொடர்பான செய்திகள் வராத நாட்களே இல்லை என சொல்லும் அளவிற்கு தமிழகத்தில் போதைப் பொருள் கலாச்சாரம் தலைவிரித்தாடுகிறது. கல்லூரி மாணவர்கள் தங்களின் வீட்டிலேயே போதைப் பொருளை தயாரிக்கும் அளவிற்கான அவலநிலை ஏற்பட்டுள்ளது. சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படும் போதைப் பொருட்களை ஒவ்வொரு முறையும் பறிமுதல் செய்யும் காவல்துறை, கடத்தலில் விநியோகஸ்தர்களையும், அவர்களை இயக்கும் பெரும்புள்ளிகளையும் இதுவரை கைது செய்ததாக தெரியவில்லை. இச்சூழலில் போதைப் பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையை எப்படி அடியோடு ஒழிக்க முடியும்? 

போதையின் பாதையில் யாரும் போகக் கூடாது மாணவர்களையும், இளைஞர்களையும் தந்தையாக மன்றாடிக் கேட்பதாக வீடியோ வெளியிடும் முதல்-அமைச்சர் அவர்களுக்கு, மதுக்கடைகளை மூட வலியுறுத்தி வீதிக்கு வந்து போராடிக் கொண்டிருக்கும் தாய்மார்களின் குமுறல் ஒலி கேட்கவில்லையா? மாணவ, மாணவியர்களுக்கு எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்துவதாக மேடையெங்கும் முழங்கும் முதல்-அமைச்சர் அவர்கள், அம்மாணவ, மாணவியர்களின் தந்தையையும், சகோதரர்களையும் போதைப் பழக்கத்திற்கு அடிமைப்படுத்தி வைத்திருப்பது எந்தவகையில் நியாயம்? தமிழகத்தின் பட்டிதொட்டியெங்கும் பரவியிருக்கும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனையையும், குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவர்களை குறிவைத்து விற்பனை செய்யப்படும் போதை மாத்திரைகள், போதை ஊசிகள், போதை சாக்லெட்டுகள் விற்பனையையும் நடுக்கவோ, அடியோடு ஒழிக்கவோ திமுக அரசும், காவல்துறையும் உறுதியான நடவடிக்கையை இதுவரை எடுத்ததாக தெரியவில்லை.

கல்வி நிலையங்களுக்கும், திருக்கோயில்களுக்கும் அருகில் இயங்கி வரக்கூடிய மதுக்கடைகளால் பொதுமக்கள் சந்திக்கும் சிரமங்களை பலமுறை எடுத்துச் சொல்லியும், குறைந்தபட்சமாக அந்த கடைகளைக் கூட மூட நடவடிக்கை எடுக்காத அரசு, எப்படி மக்கள் நலன் காக்கும் அரசாக இருக்க முடியும் என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் எழுவதை தவிர்க்க முடியவில்லை.

தனி மனிதனின் ஆரோக்கியத்தோடு ஒட்டுமொத்த சமுதாயத்தையும் சீரழிக்கும் மதுவை அடியோடு ஒழிக்க விருப்பமில்லை என்றாலும் கூட, தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியின்படி படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்தும் வகையில் மதுக்கடைகளின் எண்ணிக்கையையும், அவைகள் இயங்கும் நேசத்தையும் குறைப்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும் வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை தினங்களில் மதுபானக் கடைகளுக்கு விடுமுறை அளிப்பதும் மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்துவதற்கு வாய்ப்பாக அமையும். எனவே, மதுபானக்கடைகளை மூடுவதால் அரசுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுகட்டுவது எப்படி என்பது குறித்து ஆராய மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அடங்கிய குழுவை அமைத்து ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.என தெரிவித்துள்ளார்

Read Entire Article