சென்னை,
விஜயதசமியை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த ஆர்.எஸ்.எஸ். அமைப்பு முடிவு செய்தது. இதற்கு போலீசார் அனுமதி வழங்காததால், 58 இடங்களில் ஊர்வலம் நடத்த அனுமதிக்கும்படி போலீசாருக்கு உத்தரவிட கோரி சென்னை ஐகோர்ட்டில் ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ஒரு குறிப்பிட்ட மதத்தினர் வாழும் பகுதி, எதிர்கொள்கை நிலைபாடு கொண்ட மக்கள் வாழும் பகுதி என்று கூறி ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு அனுமதி வழங்க மறுக்கக்கூடாது என்று தெரிவித்தார். மேலும் காவல்துறை ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு அனுமதி வழங்கவேண்டும் என்றும், எதிர்காலத்தில் அனுமதி மறுக்கவோ, புதிய நிபந்தனைகளை விதிக்கவோ கூடாது என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
இதன்படி போலீஸ் பாதுகாப்புடன் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடைபெற்றது. கோவையில் சிவானந்தா காலனி முதல் அம்ருதா காலனி வரை பேரணி நடைபெற்றது. தென்காசியில் சுமார் 3 கி.மீ. தூரம் நடைபெற்ற பேரணியில் 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். சென்னை எழும்பூரில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். பேரணியில் மத்திய இணை மந்திரி எல்.முருகன் பங்கேற்றார்.