தமிழகத்தில் தொழிற்சங்கங்கள் மறியல் போராட்டம்; பஸ்,ஆட்டோ, ரயில்கள் வழக்கம் போல் இயங்கின: போராட்டம் நடத்திய ஆயிரக்கணக்கானோர் கைது

3 hours ago 1

சென்னை: தொழிற்சங்கங்கள் சார்பில் இன்று நாடு தழுவிய பொது வேலை நிறுத்தம் நடந்தது. இருப்பினும் தமிழகத்தில் பஸ்கள், ஆட்டோக்கள், ரயில்கள் வழக்கம்போல் ஓடின. மாநிலத்தில் போராட்டம் நடத்திய ஆயிரக்கணக்கான ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர். பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் திட்டத்தை ஒன்றிய அரசு கைவிட வேண்டும், மோட்டார் வாகன திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும், ஒன்றிய தொழிலாளர் விரோத சட்டங்களை முழுமையாக ரத்து செய்ய வேண்டும், விலைவாசி உயர்வை குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் இன்று நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. தமிழ்நாட்டில் தொமுச, சிஐடியு, ஐஎன்டியுசி, எச்.எம்.எஸ்., விடுதலை சிறுத்தைகள் கட்சி, ஏஐடியுசி, மதிமுக உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்தன.

அதன்படி இன்று காலை 6 மணிக்கு வேலை நிறுத்த போராட்டம் தொடங்கியது. அதிமுகவின் அண்ணா தொழிற்சங்கம் உள்ளிட்ட சில சங்கங்கள் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்கவில்லை. தமிழகம் முழுவதும் வழக்கம் போல பஸ்கள், ஆட்டோக்கள், ரயில்கள் இயங்கின. சென்னையில் மாநகர பஸ்கள் அனைத்தும் இயக்கப்பட்டன. அரசு அலுவலகங்கள் முழுமையாக இயங்கின. போராட்டத்தில் ஊழியர்கள் ஈடுபட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு எச்சரித்திருந்தது. இதனால் ஊழியர்கள் அனைவரும் பணிக்கு வந்திருந்தனர். ஆனால் ஒன்றிய அரசு அலுவலகங்களில் பெரும்பாலான ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக பொதுத்துறை நிறுவன ஊழியர்கள் போராட்டத்தில் பங்கேற்றனர். அண்ணாசாலை தாராப்பூர் டவர் அருகே ஒன்றிய தொழிற்சங்கத் தலைவர்கள் மற்றும் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டனர்.

அதேபோல, கிண்டி பேருந்து நிலையத்தில் ஆட்டோ, பேருந்து ஓட்டுநர்கள், மின் வாரிய ஊழியர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டனர். வேலூர் மாவட்டத்திலும் இன்று காலை வேலை நிறுத்த போராட்டம் தொடங்கியது. அரசு பஸ்கள், ஆட்ேடாக்கள் வழக்கம் போல் இயங்கின. ரயில்களும் இயங்கியது. இதையொட்டி, பஸ் நிலையங்கள், ரயில் நிலையங்கள், முக்கிய சந்திப்புகள் மற்றும் அரசு போக்குவரத்து கழக பணிமனைகள், ஒன்றிய, மாநில அரசு அலுவலகங்களிலும் போலீசார் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. கடைகள் அனைத்தும் வழக்கம் போல் திறந்திருந்தன. இந்த போராட்டத்தின் ஒரு கட்டமாக வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் போராட்டமும், வேலூர் தலைமை தபால் நிலையம் முன்பு தொழிற்சங்கத்தினர் சாலை மறியல் போராட்டமும் நடந்தது.

வேலூர் பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு ஓய்வூதியர் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்கு குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் அரசு பஸ்கள், ஆட்டோக்கள் வழக்கம் போல இயங்கின. தொழிற்சங்கத்தை சேர்ந்த ஊழியர்கள் சிலர் பணிக்கு வராத நிலையிலும், ஒப்பந்த அடிப்படையிலான ஓட்டுநர்கள் மூலம் பஸ்களை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டது. நெல்லை புதிய பஸ்நிலையத்தில் இருந்து தென்காசி, நாகர்கோவில், தூத்துக்குடிக்கு எவ்வித சிரமமும் இன்றி பஸ்கள் இயங்கின. நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் உள்ள அனைத்து டிப்போக்கள் முன்பும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. வண்ணார்பேட்டை செல்லபாண்டியன் சிலை அருகே ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். நெல்லை சந்திப்பில் மறியல் போராட்டமும் நடந்தது. பாளை தலைமை தபால் நிலையம் அருகே ஓய்வூதியர்கள் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். வங்கிகள் மற்றும் அஞ்சலகங்களும் வழக்கம்போல் இயங்கின.

குமரி மாவட்டத்தில் அரசு பஸ்கள் இன்று காலை முதல் வழக்கம் போல் இயங்கின. ஒன்றிய, மாநில அரசு அலுவலகங்கள் முன்பு போலீசார் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் பஸ்கள், களியக்காவிளை வரை மட்டுமே இயக்கப்பட்டன. திருவனந்தபுரத்தில் இருந்து பஸ்கள், நாகர்கோவில் வரவில்லை. இதனால் நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் சென்ற ரயில்களில் கூட்டம் அதிகமாக இருந்தது. கடைகள் அனைத்தும் வழக்கம் போல் திறந்திருந்தன. இந்த போராட்டத்தின் ஒரு கட்டமாக நாகர்கோவில், பறக்கை, திங்கள்நகர், குலசேகரம், தக்கலை, மேல்புறம், மார்த்தாண்டம், கொல்லங்கோடு, கருங்கல் ஆகிய 9 இடங்களில் மறியல் நடந்தது. நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பு, வடசேரியில் உள்ள தலைமை தபால் நிலையம், நாகர்கோவில் வெட்டூணிமடத்தில் உள்ள எல்.ஐ.சி. அலுவலகம், நாகர்கோவில் பால்பண்ணை சந்திப்பில் உள்ள எல்.ஐ.சி. அலுவலகம், குளச்சல் பஸ் நிலையம் ஆகிய இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

டெல்டா மாவட்டங்களிலும் அரசு பஸ்கள் வழக்கம்போல் இயங்கின. சிஐடியுவில் ஆட்டோ தொழிலாளர்கள் அதிகளவில் அங்கம் வகிக்கின்றனர். இதனால் பெரும்பாலான ஆட்டோக்கள் ஓடவில்லை. அரசு அலுவலகங்கள், வங்கிகள் வழக்கம் போல் இயங்கின. நாகையில் ஸ்டேட் வங்கி கிளை முன் நடந்த ஆர்ப்பாட்டத்தில் திரளானோர் கலந்துகொண்டனர். மயிலாடுதுறையில் குறைந்த எண்ணிக்கையிலான பஸ்கள், ஆட்டோக்கள் இயங்கின. பெரம்பலூரில் புதிய பஸ்நிலையத்தில் சாலை மறியல் நடந்தது. தஞ்சையில் 250க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் ஓடவில்லை. தஞ்சை பழைய பேருந்து நிலையம் அனைத்து தொழிற்சங்கத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுக்கோட்டையில் அனைத்து பஸ்களும் இயங்கின. பெரும்பாலான ஆட்டோக்கள் ஓடவில்லை. புதுக்கோட்டை அண்ணா சிலை அருகே போராாட்டம் நடந்தது. அரியலூர், திருச்சியில் பெரும்பாலான ஆட்டோக்கள் ஓடவில்லை. அரசு அலுவலகங்கள், வங்கிகள் வழக்கம்போல் இயங்கின. முதல்வர், துணை முதல்வர் வருகையொட்டி திருவாரூர், கரூரில் போராட்டம் நடக்கவில்லை.

கோவை மாவட்டத்தில் பஸ்கள், ஆட்டோக்கள் வழக்கம்போல ஓடியது. கடைகளும், வணிக நிறுவனங்களும் வழக்கம்போல் செயல்பட்டது. கேரளாவில் முழு அடைப்பு காரணமாக கோவையில் இருந்து செல்லும் பஸ்கள் நிறுத்தப்பட்டன. இதனால் ரயில் மூலம் பயணிகள் சென்றனர். நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி உட்பட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் அரசு பஸ்கள், ஆட்டோக்கள் வழக்கம்போல் இயங்கின. கேரளாவில் இருந்து கூடலூருக்கு பேருந்துகள் இயக்கப்படவில்லை. தமிழ்நாடு அரசு பேருந்துகள் கூடலூர் கிளையில் இருந்து தமிழக எல்லை வரை மட்டும் இயக்கப்பட்டன. ஈரோட்டில் அரசு-தனியார் பஸ்கள், ஆட்ேடாக்கள் இயங்கின. ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் ஆதரவு தெரிவித்து, அந்த அமைப்பில் உள்ள அரசு ஊழியர்கள், அரசு ஆசிரியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் பஸ்கள் வழக்கம்போல் இயங்கின. சில இடங்களில் தனியார் பஸ்கள் இயங்கவில்லை. பனியன் நிறுவன தொழிலாளர்கள் பணிக்கு வராததால் பல இடங்களில் பனியன் நிறுவனங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.

திருப்பூர் மாநகரில் ரயில் நிலையம், புதிய பஸ் நிலையம், தபால் நிலையம் உள்பட மாவட்டம் முழுவதும் 12 இடங்களில் மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தையொட்டி திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தேனி மாவட்டத்தில் குமுளி, கம்பமெட்டு, போடி மெட்டு வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் கேரளாவுக்கு சென்று வருவது வழக்கம். தோட்ட தொழிலாளர்களும் கேரளாவுக்கு சென்று வருவார்கள். வேலை நிறுத்தம் காரணமாக வாகன போக்குவரத்து இல்லாததாலும் தோட்ட ெதாழிலாளர்கள் பணிக்கு செல்லவில்லை. குமுளியில் எல்லை பகுதி வரை மட்டுமே வாகனங்கள் இயங்கின. கம்பத்தில் இருந்து கேரளாவில் உள்ள கட்டப்பணை, நெடுங்கண்டம் ஆகிய பகுதிகளுக்கு கேரள, தமிழக அரசு பேருந்துகள் இயக்கப்படவில்லை. போடி மெட்டு வழியாக மூணாறு உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்கப்படும் பேருந்துகள் இன்று இயங்கவில்லை.

சேலம்: சேலம் பழைய, புதிய பஸ் நிலையத்தில் இருந்து அரசு பஸ்கள் முழுமையாக இயக்கப்பட்டது. போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர். வேலைநிறுத்தம் காரணமாக பாலாறு வழியாக தமிழகத்தில் இருந்து கர்நாடகா மாநிலத்திற்கு செல்லும் பஸ்கள் இயக்கப்படவில்லை. அதேபோல் கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் பஸ்களும் இயக்கப்படவில்லை. தமிழகத்தில் இருந்து கர்நாடகாவுக்கும், அங்கிருந்து தமிழகத்துக்கும் இயக்கப்படும் அரசு பஸ்கள் வழக்கம்போல் இயக்கப்பட்டது. குறிப்பாக சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர், திருவண்ணாமலை, சென்னை, வேலூர், திருப்பத்தூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து வழக்கம்போல் பெங்களூருக்கு பஸ்கள் சென்று வந்தது. இதேபோல் நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் வழக்கம்போல் அரசு பஸ்கள் இயக்கப்பட்டது. கிருஷ்ணகிரி, தர்மபுரி, நாமக்கல்லில் வழக்கம் போல் அரசு பேருந்துகள், தனியார் பேருந்துகள், ஆட்டோக்கள் இயக்கப்பட்டது. அரசு அலுவலகங்களும் வழக்கம் போல் செயல்பட்டன.

The post தமிழகத்தில் தொழிற்சங்கங்கள் மறியல் போராட்டம்; பஸ்,ஆட்டோ, ரயில்கள் வழக்கம் போல் இயங்கின: போராட்டம் நடத்திய ஆயிரக்கணக்கானோர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article