தமிழகத்தில் காசநோய் ஒழிப்பு திட்டத்தை தீவிரமாக செயல்படுத்த வேண்டும் என்று அனைத்து மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கும் பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் அறிவுறுத்தியுள்ளார்.
இந்தியாவில் காசநோயை முழுமையாக ஒழிக்கும் நோக்கில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. குறிப்பாக, 2025-ம் ஆண்டுக்குள் அந்நோயை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்ற இலக்குடன் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் நோயாளிகளைக் கண்டறிதல், கூட்டு மருந்து சிகிச்சைகளை அளித்தல், தொடர் கண்காணிப்பு நடவடிக்கைகள் எடுத்தல் என காசநோய் ஒழிப்புத் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. தமிழகம் முழுவதும் காச நோயாளிகளுக்கு தேவைப்படும் மருந்துகள் களப்பணியாளர்கள் மூலம் அவர்களின் வீடுகளுக்கே சென்று வழங்கப்பட்டு வருகிறது. சிகிச்சை நெறிமுறைகளின்படி அவர்களது வீட்டிலேயே சளி மாதிரி எடுத்து, தேவைப்படுபவர்களுக்கு நடமாடும் ஊடுகதிர் கருவிகளை அவர்களின் இருப்பிடங்களுக்கே அனுப்பி ஊடுகதிர் படம் எடுக்கப்பட்டும் வருகிறது.