தமிழகத்தில் 2026 தேர்தல் கூட்டணி விஜய் உள்பட எந்த கட்சியுடனும் அதிமுக பேசவில்லை: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

2 months ago 12

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: 16வது நிதி ஆணைய குழு தமிழகம் வந்து நேற்று அனைத்துக் கட்சிகளை அழைத்து ஆலோசனை நடத்தியது. அதிமுக சார்பில் கலந்து கொண்டு குழுவிடம் மனு அளித்துள்ளேன். ஒன்றிய அரசு, மாநிலம் மூலம் கிடைக்கும் வரி வருவாயை சமச்சீராக பங்கீடு செய்து தர வேண்டும். தமிழகத்திற்கு 41 சதவீதம் அளவிற்குதான் நிதி ஒதுக்கப்படுகிறது. மீதமுள்ள 59 சதவீத வரி வருவாயை ஒன்றிய அரசு நம்மிடம் இருந்து எடுத்துக் கொள்கிறது. ஒன்றிய அரசுக்கு பல்வேறு வகையில் வருமானம் வருகிறது. ஆனால் மாநில அரசுக்கு வரி பகிர்வை குறைவாகத் தான் கொடுக்கிறது. எனவே 41 சதவீதம் என்பதை 50 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும். உத்தரப்பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களுக்கு 17 சதவீதம் நிதி வழங்கப்படுகிறது.

ஆனால் தமிழ்நாட்டிற்கு 4.7 சதவீதம் மட்டுமே கொடுக்கப்படுகிறது. அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்று நேற்று விஜய் கட்சி சார்பில் கூறப்பட்டுள்ளது குறித்து கேட்கிறீர்கள். இதற்கு அதிமுக பொதுச்செயலாளர் ஏற்கனவே தெளிவாக ஒரு பதிலை கூறியுள்ளார். பாஜ அல்லாத ஒத்தக் கருத்துள்ள கட்சிகள், அதாவது திமுகவை வீழ்த்த வேண்டும் என்று நினைக்கும் கட்சிகள் அதிமுக கூட்டணிக்கு வரலாம். தேர்தல் அறிவித்த பிறகுதான் கூட்டணி பற்றி பேசப்படும். அதிமுக தலைமையிலான கூட்டணியை எந்த கட்சி ஏற்றுக் கொள்கிறதோ அந்த கட்சி எங்கள் கூட்டணிக்கு வரலாம். தமிழகத்தில் தேர்தல் கூட்டணி தொடர்பாக இதுவரை விஜய் உள்ளிட்ட எந்தக் கட்சிகளுடனும் அதிமுக பேசவில்லை. அப்படி ஒரு செய்தி வந்தது தவறான செய்தியாகும். இவ்வாறு அவர் கூறினார்.

 

The post தமிழகத்தில் 2026 தேர்தல் கூட்டணி விஜய் உள்பட எந்த கட்சியுடனும் அதிமுக பேசவில்லை: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி appeared first on Dinakaran.

Read Entire Article