சென்னை: தமிழக மின்வாரிய தலைவர் ராஜேஷ் லக்கானி உட்பட 17 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். துணை முதல்வரின் செயலராக உயர்கல்வித் துறை செயலர் பிரதீப் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து, தலைமைச் செயலர் நா.முருகானந்தம் வெளியிட்ட உத்தரவு: கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளத் துறை செயலர் கே.கோபால் உயர்கல்வித் துறை செயலராகவும் அப்பதவியில் இருந்த பிரதீப் யாதவ் துணை முதல்வரின் செயலராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். மின்வாரியம், தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத் தலைவர் ராஜேஷ்லக்கானி வருவாய் நிர்வாக ஆணையராகவும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை ஆணையர் இ.சுந்தரவல்லி கல்லூரிக் கல்வி ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுதவிர பொதுத் துறை இணை செயலராக இருந்த பி.விஷ்ணு சந்திரன் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.