
ஈரோடு,
நடிகர் விஜய் தொடங்கி உள்ள தமிழக வெற்றிக்கழக முதல் மாநில மாநாடு அடுத்த மாதம் (அக்டோபர்) 27-ந்தேதி விக்கிரவாண்டியில் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு தமிழகம் முழுவதும் கட்சிக்கொடியை ஏற்றி நல உதவிகளை கட்சியினர் வழங்கி வருகின்றனர். ஈரோடு ராஜாஜிபுரத்தில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தமிழக வெற்றிக்கழகம் சார்பில் கொடிக்கம்பம் நடப்பட்டது. கட்சிக்கொடி ஏற்றுவதற்காக ஈரோடு மாநகராட்சியில் கட்சி நிர்வாகிகள் அனுமதி கடிதம் கொடுத்து உள்ளனர்.
இந்த நிலையில் கட்சி கொடியேற்று விழாவை நேற்று நடத்துவதற்கு முன்னேற்பாடுகளை கட்சியினர் செய்து வந்தனர். இதுகுறித்த தகவல் கிடைத்ததும் போலீசார் நேற்று முன்தினம் இரவு அங்கு சென்று கட்சியினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
கட்சி கொடியை ஏற்றுவதற்கு உரிய அனுமதி பெற்றிருக்க வேண்டும் என்று தெரிவித்த போலீசார், உரிய அனுமதி இல்லாததால் கொடியேற்று விழாவை நடத்துவதற்கு தடை விதித்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த கட்சி நிர்வாகிகள், தாங்கள் ஏற்கனவே மாநகராட்சி அலுவலகத்தில் கடிதம் கொடுத்துவிட்டதாக தெரிவித்தனர். இதனால் போலீசாருக்கும், கட்சி நிர்வாகிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆனால் அனுமதி கடிதம் இருந்தால் மட்டுமே கட்சிக்கொடியை ஏற்ற முடியும் என்று போலீசார் உறுதியாக கூறினார்கள். இதையடுத்து நேற்று நடக்க இருந்த விழாவை தமிழக வெற்றிக்கழகத்தினர் ஒத்திவைத்தனர்.
எனினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இரவு முழுவதும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.