சென்னை,
த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டைச் சேர்ந்த 8 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தது மிகவும் கண்டிக்கத்தக்கது. மத்திய மாநில அரசுகள் தமிழக மீனவர்களின் மீன்பிடித் தொழிலுக்கு முழுப்பாதுகாப்பு கொடுக்க தொடர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தமிழ்நாட்டைச் சேர்ந்த 8 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தது மிகவும் கண்டிக்கத்தக்கது. நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 8 மீனவர்களையும் கைது செய்த இலங்கை கடற்படையினர், அவர்கள் பயன்படுத்திய 2 விசை படகுகளையும் பறிமுதல் செய்தனர். எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்ட 8 மீனவர்களும் ராமேஸ்வரத்தைச் சேர்ந்தவர்களாவர். இச்சம்பவம் தமிழக மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த பல ஆண்டுகளாக இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை கைது செய்வதும், படகுகளை பறிமுதல் செய்வதும், அச்சுறுத்துவதும், மீன்பிடிச்சாதனங்களை சேதப்படுத்துவதும் வாடிக்கையாகிவிட்டது.
இதனால் தமிழக மீனவர்களின் மீன்பிடித் தொழில் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இப்புதிய ஆண்டின் தொடக்கத்தில் கடந்த 9 ஆம் தேதியன்று தமிழக மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்து, ஒரு விசைப்படகையும் பறிமுதல் செய்தனர். இதனைத் தொடர்ந்து தற்போது மேலும் 8 தமிழர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இப்புதிய ஆண்டில் பொங்கல் பண்டிகையை ஒட்டி தமிழக மீனவர்கள் மீன்பிடித்து வாழ்வாதாரத்தை புதிய பொலிவுடன் தொடர நினைத்து மீன்பிடிக்கச் சென்றால் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இது தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்குகிறது.
இனிமேலும் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படக்கூடாது, படகுகள் பறிமுதல் செய்யப்படக்கூடாது என்பதற்காக மத்திய மாநில அரசுகள் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதாவது தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் சம்பவத்திற்கு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும் என மீனவர்கள் நீண்ட காலமாக தொடர்ந்து போராடி வருகின்றனர். ஆனால், அதற்கான தீர்வு இதுவரை கிடைத்தபாடில்லை. கைது நடவடிக்கை தொடர்ந்து நடந்து வருவது மீனவர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசு உடனடியாக இலங்கை அரசுடன் பேசி கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும், படகுகளையும் மீட்டு மீனவர்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாட உதவிட வேண்டும். மேலும் மத்திய அரசு இலங்கை அரசிடம் கண்டிப்போடு பேசி இனிமேல் இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதை தெரிவித்து தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும் என்று தமிழ்மாநிலகாங்கிரஸ்(மூ) சார்பில் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.