தமிழக மக்களை பாதுகாக்கும் பொறுப்பு திராவிட மாடல் அரசிடம்தான் உள்ளது: அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சு

1 month ago 6

பெரம்பூர்: ஒட்டுமொத்த தமிழக மக்களை பாதுகாக்கின்ற பொறுப்பு திராவிட மாடல் அரசிடம்தான் உள்ளது என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேசினார். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, திருவிக. நகர் தொகுதியில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்ற மாபெரும் சிலம்பம் போட்டி பரிசளிப்பு விழா தாயகம் கவி எம்எல்ஏ ஏற்பாட்டில் புளியந்தோப்பில் உள்ள தனியார் தொழிற் கல்லூரியில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளர்களாக அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, அன்பில் மகேஷ் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினர். இதன்பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பேசியதாவது; திராவிட மாடல் அரசு, ஒவ்வொரு நாளும் சுழன்று பணியாற்றும் முதலமைச்சரை பெற்றிருக்கிறது.

திட்டங்கள் என்று வரும்போது தன்னுடைய முழுமையான கவனத்தை எந்த துறை மீது செலுத்துகிறார் என்றால் அது நம் பள்ளி கல்வி துறை மீதுதான். சட்டமன்ற வரலாற்றில் இல்லாத அளவுக்கு பல்லாயிரம் கோடியை இந்த துறைக்கு ஒதுக்குகிறார்கள் என்றால் அந்த அளவுக்கு பள்ளி கல்வி துறை மீது வைத்த அன்பு. அவர் உங்களை பாவிப்பது நாட்டின் முதலமைச்சராக அல்லாமல், உங்கள் குடும்பத்தின் ஒருவராக இருந்து தந்தை ஸ்தானத்தில். தாய், சகோதரர் ஸ்தானத்தில் இருந்து உங்களுக்காக உதவக்கூடிய முதல் ஆளாக நான் இருப்பேன் என்று சொல்லக்கூடிய முதலமைச்சரை பெற்றிருக்கிறோம். நமது முதலமைச்சரை வலுப்படுத்தும் வகையில் செயல்பட்டுவரும் துணை முதலமைச்சரின் பிறந்தநாளை தான் எழுச்சியோடு கொண்டாடுகிறோம். தமிழ்நாட்டில் துணை முதலமைச்சர், விளையாட்டு துறை அமைச்சராகவும் இருக்கிறார்.

இட ஒதுக்கீட்டில் சிலம்பம் சேராமல் இருந்தது. இன்றைக்கு சிலம்பத்தையும் இட ஒதுக்கீட்டில் சேர்ந்துவிட்டது. இந்த இட ஒதுக்கீடு மூலம் 100 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி உள்ளனர். வகுப்பறை கல்வியும் மதிப்பெண்ணும் அவசியம் தான். இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் வெறும் மதிப்பெண் மட்டும் இல்லாமல் கூடுதலாக உங்கள் தனித் திறமையையும் வளர்த்து கொள்ளுங்கள். உங்கள் தலைமை பண்பையும் வளர்த்து கொள்ளவேண்டும். ஒட்டுமொத்த தமிழ் மக்களை காக்கும் பொறுப்பு திராவிட மாடல் அரசுக்கு இருக்கிறது. இவ்வாறு பேசினார். விழாவில், சென்னை மேயர் பிரியா, மண்டல குழு தலைவர் சரிதா மகேஷ்குமார், பகுதி செயலாளர்கள் சாமிக்கண்ணு, தமிழ்வேந்தன், மாமன்ற உறுப்பினர் சரவணன் கலந்துகொண்டனர்.

The post தமிழக மக்களை பாதுகாக்கும் பொறுப்பு திராவிட மாடல் அரசிடம்தான் உள்ளது: அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சு appeared first on Dinakaran.

Read Entire Article