சென்னை: ஜனவரி 26-ம் தேதி நடைபெற உள்ள குடியரசு தின விழாவுக்கான முன்னேற்பாடுகளை தமிழக பொதுப்பணி துறை தொடங்கியுள்ளது. குடியரசு தின விழா ஜனவரி 26-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. சென்னையில் மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் உழைப்பாளர் சிலை அருகே விழா நடைபெறும். போக்குவரத்து காவல் படையினரின் வாகன அணிவகுப்புடன் முதல்வரும், அவரை தொடர்ந்து ராணுவ வாகன அணிவகுப்புடன் ஆளுநரும் விழா நடைபெறும் இடத்துக்கு வருவார்கள்.
இதையடுத்து, தேசியக் கொடியை ஆளுநர் ஏற்றிவைத்து மரியாதை செலுத்துவார். அப்போது தேசிய கீதம் இசைக்க, ஹெலிகாப்டரில் இருந்து மலர்கள் தூவப்படும். பின்னர், அணிவகுப்பு மரியாதையை ஆளுநர் ஏற்றுக் கொள்வார்.