தமிழக பாஜவில் நீண்ட இழுபறிக்கு மத்தியில் 33 மாவட்டங்களுக்கான புதிய மாவட்ட தலைவர் பட்டியல் வெளியானது

3 hours ago 2

* முறையாக தேர்தல் நடைபெறவில்லை என பல்வேறு மாவட்ட நிர்வாகிகள் கூண்டோடு விலகல்

* முக்கிய தலைவர்கள் தங்களது ஆதரவாளர்களுக்கு பதவியை வாங்கி கொடுத்துள்ளதாக குற்றச்சாட்டு, பாஜவில் மீண்டும் வெடித்தது உட்கட்சிப் பூசல்

சென்னை: தமிழக பாஜவில் நீண்ட இழுபறிக்கு மத்தியில் 33 மாவட்டங்களுக்கான புதிய மாவட்ட தலைவர் பட்டியல் நேற்று இரவு வெளியானது. தமிழக பாஜ கட்சி அமைப்பு ரீதியாக 67 மாவட்டங்களாக செயல்படுகிறது. பாஜவில் உறுப்பினர் சேர்க்கை கடந்த ஆண்டு அக்டோபரில் தொடங்கியது. அதைத் தொடர்ந்து நவம்பரில், உட்கட்சி தேர்தல் தொடங்கியது. முதல் கட்டமாக கிளை அளவில் தேர்தல் நடத்தி, பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். அடுத்து, மண்டல தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்தப்பட்டு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.

தொடர்ந்து, மாவட்ட தலைவர் பதவிக்கு தேர்தல் நடந்தது. அதில், தேர்தல் நடத்திய நிர்வாகிகள் ஒரு மாவட்டத்துக்கு 3 பேரை தேர்வு செய்து அவர்களிடம் இருந்து வேட்பு மனு மற்றும் வாபஸ் பெறும் மனுக்களையும் வாங்கினர். தேர்தலில் தேர்வு செய்யப்பட்ட 3 பேரில் ஒருவரை தேசிய தலைமை அறிவிக்கும். மற்ற 2 பேரிடம் வாபஸ் பெற்றதாக அறிவிக்க திட்டமிட்டிருந்தனர். அவ்வாறு மாவட்டத்துக்கு 3 பேரிடம் எழுதி வாங்கியதால், முறையாக தேர்தல் நடைபெறவில்லை என்ற குற்றச்சாட்டு கட்சிக்குள் எழுந்தது.

அதில் பலர் தங்களது கோபத்தை மாநில தலைமையிடம் தெரிவித்தனர். தலைமை மீது அதிருப்தியை தெரிவிக்கும் வகையில் பல மாவட்ட தலைவர்கள் புதிய பட்டியல் வெளியாவதற்கு முன்னர் மாவட்ட தலைவர்கள் பதவியில் இருந்து விலகினர். மேலும் மாவட்ட நிர்வாகிகளும் கூண்டோடு அந்த பதவியில் இருந்து விலகினர். இதன் ஒரு பகுதியாக நெல்லை மாவட்டத் தலைவர் தயா சங்கர் தனது பதவியை மட்டுமல்லாமல் கட்சி உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.

இதேபோல நேற்று வேலூர் மாவட்ட தலைவர் மனோகரன் தனது பதவியில் இருந்து விலகினார். இதே போல அந்த மாவட்ட நிர்வாகிகளும் கூண்டோடு விலகினர். பாஜ முக்கிய நிர்வாகிகள் தங்களது ஆதரவாளர்களுக்கு பதவியை வாங்கி கொடுத்துள்ளனர். இதனால் மாவட்ட தலைவர்கள் கடும் அதிருப்தியில் இருந்து வருகின்றனர். மாவட்ட தலைவர்கள் புதிய மாவட்ட தலைவர் பட்டியல் வெளியாவதற்கு முன்னதாக தங்களது பதவியில் இருந்து விலக தொடங்கினர். இது பாஜவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பரபரப்புக்கு மத்தியில் தமிழக பாஜகவில் 33 மாவட்ட தலைவர்கள் பட்டியல் நேற்று வெளியானது.

* புதிய மாவட்ட தலைவர்கள் விவரம்…
திருச்சி மாநகர் மாவட்ட தலைவராக ஒண்டிமுத்து தேர்வு செய்யப்பட்டுள்ளார். கன்னியாகுமரி கிழக்கு- கே.கோபகுமார், கன்னியாகுமரி மேற்கு- ஆர்.டி.சுரேஷ், கோவை தெற்கு-சந்திரசேகர், புதுக்கோட்டை கிழக்கு-ஜெகதீசன், காஞ்சிபுரம்- தாமரை ஜெகதீசன், தென்காசி-ஆனந்தன் அய்யாசாமி, தேனி-ராஜபாண்டி, திருநெல்வேலி வடக்கு-முத்து பழவேசம், திருநெல்வேலி தெற்கு-தமிழ் செல்வன், திருப்பத்தூர்-தண்டயுதபாணி, சிவகங்கை- பாண்டிதுரை, மயிலாடுதுறை-நாஞ்சில் பாலு, மதுரை கிழக்கு-ராஜசிம்மன்,

மதுரை மேற்கு-சிவலிங்கம், திண்டுக்கல் கிழக்கு-முத்துராமலிங்கம், கள்ளக்குறிச்சி-பாலசுந்தரம், வேலூர்-தசரதன், நீலகிரி-தருமன், நாமக்கல் மேற்கு- ராஜேஸ் குமார், நாமக்கல் கிழக்கு- சரவணன், விருதுநகர் கிழக்கு- ஜி.பாண்டுரங்கன், அரியலூர்- டாக்டர் பரமேஸ்வரி, கடலூர் மேற்கு- முன்னாள் எம்எல்ஏ தமிழழகன், திருச்சி புறநகர்-அஞ்சாநெஞ்சன், கடலூர் கிழக்கு- அக்னி கிருஷ்ணமூர்த்தி, திருவள்ளூர் கிழக்கு- சுந்தரம், செங்கல்பட்டு வடக்கு-ரகுராமன்,

செங்கல்பட்டு தெற்கு- பிரவீன்குமார் சேலம் நகர்- சசிகுமார், தஞ்சாவூர் வடக்கு-தங்க கென்னடி, திருவாரூர்- செல்வமகன், திருச்சி நகர்- ஒண்டிமுத்து, தூத்துக்குடி வடக்கு – சரவண கிருஷ்ணன் உள்பட 33 பேர் பட்டியல் அந்தந்த மாவட்டங்களில் வெளியிடப்பட்டுள்ளது. பட்டியல் வெளியான மறுநிமிடமே புதிய மாவட்ட தலைவர்கள் பொறுப்பும் ஏற்றுக்கொண்டனர். ஏதாவது பிரச்னை வந்து விடக்கூடாது என்பதற்காக அவசரம், அவசரமாக பதவியேற்று கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

* புதிய மாநில தலைவர் யார்..?
கட்சியின் விதிகளின்படி 33 மாவட்டச் செயலாளர்கள் பதவிகளில் இருந்தால் மாநில தலைவர் தேர்தலை நடத்தலாம் என்ற அடிப்படையில் இந்த பட்டியல் வெளியிடப்பட்டது. மீதியுள்ள 34 மாவட்ட தலைவர் பட்டியல் அடுத்து யார் தலைவராக வரப்போகிறாரோ அவர் அறிவிப்பார். புதிய தலைவர் தேர்தல் இன்று அல்லது நாளை நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தலைவர் தேர்தலை நடத்த ஒன்றிய அமைச்சர் கிஷன் ரெட்டி வர உள்ளார். மாநில தலைவர் தேர்தல் பெயருக்கு நடத்தப்பட்டாலும், தேசிய தலைமை யாரை மாநில தலைவராக நியமிக்கலாம் என்று முடிவு செய்துள்ளதோ அவர்களைத்தான் நியமிக்க முடியும். தற்போது மாநிலத் தலைவர்களுக்கான ரேசில் அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பிரமுகர்கள் உள்ளனர். இவர்களில் ஒருவர் நியமிக்கப்படுவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

The post தமிழக பாஜவில் நீண்ட இழுபறிக்கு மத்தியில் 33 மாவட்டங்களுக்கான புதிய மாவட்ட தலைவர் பட்டியல் வெளியானது appeared first on Dinakaran.

Read Entire Article