தமிழக பாஜ தலைவர் பதவிக்கு போட்டியிட 10 ஆண்டு உறுப்பினர் மட்டுமே விருப்ப மனு அளிக்கலாம்: திடீர் நிபந்தனையால் அண்ணாமலை, நயினார் நாகேந்திரனுக்கு சிக்கல்

1 week ago 3

சென்னை: தமிழக பாஜ தலைவர் பதவிக்கு போட்டியிட இன்று மாலை 4 மணி வரை விருப்ப மனு அளிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் தலைவர் பதவிக்கு போட்டியிட விரும்புகிறவர்கள் 10 ஆண்டுக்குமேல் உறுப்பினராக இருக்க வேண்டும் என்று தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் அண்ணாமலை, நயினார் நாகேந்திரனுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தமிழக பாஜவின் அமைப்பு தேர்தல் கடந்த ஆண்டு தொடங்கி நடைபெற்று வந்தது. இதில் பாஜவின் கிளை ெதாடங்கி மாவட்ட தலைவர், பொதுக்குழு உறுப்பினர்கள் வரை தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இறுதியாக மாநில தலைவர், தேசிய பொதுக்குழு உறுப்பினர்களை மட்டுமே தேர்வு செய்யப்பட வேண்டியது. தலைவர் பதவியில் நான் போட்டியில்லை. கடைக்கோடி தொண்டனாக கடைசி வரை செயல்படுவேன் என்று தற்போதைய தலைவர் அண்ணாமலை ஏற்கனவே அறிவித்து விட்டார். புதிய தலைவர் யார் என்பதை மேலிடம் முடிவு செய்யும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதையடுத்து பாஜ தலைவர் பதவியை பிடிக்க கடும் போட்டி நிலவி வருகிறது. இதற்காக டெல்லி மேலிடம் தலைவர்களையும் சந்தித்து ஆதரவு கேட்டு வருகின்றனர். தலைவர் பதவிக்கான பட்டியலில் சட்டமன்ற பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன், தென்காசி ஆனந்தன் மற்றும் வானதி சீனிவாசன், தமிழிசை சவுந்தரராஜன், பொன்ராதாகிருஷ்ணன் ஆகியோர் இருந்து வருகின்றனர்.

அதேநேரத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைக்க பாஜ முடிவு செய்துள்ளது. இதனால், அதிமுகவோடு இணக்கமாக செல்பவரை தலைவராக நியமிக்கலாம் என்று கூறப்படுகிறது. அந்த ரேஸில் நயினார் நாகேந்திரன் இருந்து வந்தார். இதற்காக அவர் டெல்லிக்கும் அண்மையில் சென்று வந்தார். அங்கு அவர் முக்கிய தலைவர்களை சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் பாஜ தலைவர் பதவிக்கு போட்டியிட விரும்புகிறவர்கள் இன்று பிற்பகல் முதல் விண்ணப்பங்களை இன்று மதியம் 2 மணி முதல் 4 மணிக்குள் வழங்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக பாஜ துணை தலைவரும், மாநில தேர்தல் அதிகாரியுமான எம்.சக்ரவர்த்தி வெளியிட்ட அறிவிப்பில், நமது கட்சியின் மாநிலத் தலைவர் மற்றும் தேசிய பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்தலுக்கான விருப்ப மனுக்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கான விருப்ப மனுக்களை கட்சியின் இணையதளத்தில் (www.bjptn.com) இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 11ம் தேதி (இன்று) மதியம் 2 மணி முதல் மாலை 4 மணி வரை போட்டியிட விருப்பமுள்ளவர்கள் விருப்ப மனுவை மாநிலத் தலைமை அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். மாநில தலைவருக்கான தேர்தலில் போட்டியிடுபவர் குறைந்த பட்சம் 10 வருடங்கள் அடிப்படை உறுப்பினராக இருக்க வேண்டும் என்றார்.

தலைவர் பதவிக்கு போட்டியிடுபவர் 10 ஆண்டு உறுப்பினராக இருக்க வேண்டும் என்று தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளதால், நயினார் நாகேந்திரனுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. நயினார் நாகேந்திரன் அதிமுகவில் இருந்து விலகி 2017ம் ஆண்டு தான் பாஜவில் இணைந்தார். அவர் பாஜவில் இணைந்து 8 ஆண்டுகள்தான் ஆகின்றன. அதேபோல அண்ணாமலையும் கட்சியில் இணைந்து 5 வருடங்கள்தான் ஆகிறது. அதனால், அவரும் போட்டியிட முடியுமா? என்பதில் சிக்கல் நீடிக்கிறது. ஒருவேளை அண்ணாமலை தலைவராக இருப்பதால் அவர் மனு தாக்கல் செய்தால் மேலிடம் அதை ஏற்றுக் கொள்ளவும் வாய்ப்பு உள்ளது.

அதேநேரத்தில் பாஜகவில் 10 ஆண்டுகளுக்கு மேலாக உறுப்பினர்களாக பொன்ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, எல்.முருகன், தமிழிசை சவுந்தரராஜன், வானதி சீனிவாசன், எஸ்.ஆர்.சேகர் உள்ளிட்ட தலைவர்கள்தான் தலைவர் பதவிக்கு போட்டியிட முடியும் எனத் தெரிகிறது. தமிழக பாஜ தலைவர் பதவிக்கு போட்டி இருக்கும் பட்சத்தில் நாளை (12ம் தேதி) தேர்தல் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

அண்ணாமலைக்கு பொருந்தாதா?
தமிழக பாஜ தலைவராக நியமிக்கப்பட்டிருந்த அண்ணாமலை, முறைப்படி தேர்தல் நடத்தி தேர்ந்தெடுக்கப்படவில்லை. ஏற்கனவே தலைவராக இருந்த எல். முருகன் பதவி விலகியதால் அண்ணாமலை தலைவராக நியமிக்கப்பட்டார். கட்சியில் 10 ஆண்டுகள் தீவிர உறுப்பினராக இருந்தவரால் மட்டுமே தலைவராக முடியும் என்ற நிலை இருப்பதால் அந்த விதியை மீறித்தான் அண்ணாமலை நியமிக்கப்பட்டார். இதனால் கட்சியின் விதியை மேலிட தலைவர்களே மீறியுள்ளது தெரிய வந்துள்ளது. தங்களுக்கு வேண்டியவர்களுக்காக கட்சியின் விதிகளை எப்படி வேண்டுமானாலும் வளைக்கலாம் என்ற நிலை தமிழக பாஜவில் இருப்பதாக தொண்டர்கள் விரக்தியுடன் தெரிவித்தனர்.

The post தமிழக பாஜ தலைவர் பதவிக்கு போட்டியிட 10 ஆண்டு உறுப்பினர் மட்டுமே விருப்ப மனு அளிக்கலாம்: திடீர் நிபந்தனையால் அண்ணாமலை, நயினார் நாகேந்திரனுக்கு சிக்கல் appeared first on Dinakaran.

Read Entire Article