சென்னை,
தமிழக சட்டசபை கூட்டம் நேற்று காலை தொடங்கியது. கேள்வி நேரம் முடிந்ததும் 2024-25-ம் நிதி ஆண்டில் ஏற்பட்ட கூடுதல் செலவுக்காக சட்டசபையில் ரூ.3 ஆயிரத்து 531 கோடிக்கு துணை பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். இதனை தொடர்ந்து மதுரை `டங்ஸ்டன்' சுரங்க அனுமதியை ரத்து செய்யக்கோரும் தீர்மானம் சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
இந்த நிலையில், தமிழக சட்டசபையின் 2-ம் நாள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலில் கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மோகன் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.
கல்வி நிறுவனங்களில் நிகழ்ச்சிகளுக்கு 10 சதவீதம் கேளிக்கை வரி விதிக்கும் மசோதா நிறைவேற்றப்பட உள்ளது. மேலும் திமுக ஆட்சி அமைந்த பிறகு முதல் சி.ஏ.ஜி. அறிக்கை இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்படுகிறது. இன்றைய சட்டசபை நிகழ்வின்போது 110 விதியின் கீழ் பல்வேறு அறிவிப்புகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.