சென்னை: தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வு வாரியம், காவல் சார்பு ஆய்வாளர்கள் (தாலுகா மற்றும் ஆயுதப்படை) பதவிகளுக்கான நேரடி தேர்வு 2025க்கு விண்ணப்பதாரர்களிடமிருந்து இணைய வழி விண்ணப்பங்கள் வரவேற்கிறது. ஊதிய விகிதம் ரூ.36,900 – 1,16,600 வரை. 1,299 சார்பு ஆய்வாளர்களுக்கான இணைய வழி விண்ணப்பங்கள் வரும் 7ம் தேதி தொடங்குகிறது. விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் 3.5.2025.
சார்பு ஆய்வாளர்களுக்கான எழுத்து தேர்வுக்கான பொது விண்ணப்பதாரர்கள் மற்றும் துறை விண்ணப்பதாரர்களுக்கு தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும்.காவல் சார்பு ஆய்வாளர் (தாலுகா) ஆண்கள் 654, பெண்கள் 279 என மொத்தம் 933 இடங்கள் உள்ளது. அதேபோல் காவல் சார்பு ஆய்வாளர் (ஆயுதப்படை) ஆண்கள் 255, பெண்கள் 111 என மொத்தம் 366 இடங்கள் உள்ளன. தாலுகா மற்றும் ஆயுதப்படை என மொத்தம் ஆண்கள் 909 இடங்களும் பெண்களுக்கு 390 இடங்கள் என மொத்தம் 1,299 இடங்கள் உள்ளது.
53 எஸ்சி மற்றும் எஸ்டி பற்றாக்குறை காலிபணியிடங்களின் விவரம் தகவல் சிற்றேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போதுள்ள விதிகளின்படி வகுப்புவாரி இடஒதுக்கீட்டின் சதவீதம் பற்றாக்குறை காலிபணியிடங்களை தவிர அனைத்து பதவிகளுக்கும் பொருந்தும். பல்வேறு பிரிவுகளை சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கான இடஒதுக்கீடு விவரங்கள் அறிவிக்கையில் விரிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சார்பு ஆய்வாளர் பணியிடங்களுக்கு குறைந்தபட்ச கல்வி தகுதியாக ஏதாவது ஒரு இளங்கலை பட்டம் இருந்தால் போதும், வயது வரம்பு 1.7.2025ன்படி 20 வயது நிறைவுற்றவராகவும், மற்றும் 30 வயது நிறைவடையாதவராகவும் இருக்க வேண்டும். (விண்ணப்பதாரர்களின் வயது உச்சவரம்பு வகுப்பு, பிரிவுகளுக்கு தக்கவாறு மாறுபடும். எனவே விண்ணப்பதாரர்கள் இணையவழி விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கும், மேற்கொண்டு தகவல் அறிவதற்கும் www.tnusrb.tn.gov.in என்ற இணையதளம் மூலம் தெரிவிந்து கொள்ளலாம்.
The post தமிழக காவல்துறையில் காலியாக உள்ள 1,299 சார்பு ஆய்வாளர்கள் பணியிடங்களுக்கு 7ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்: சீருடை பணியாளர் தேர்வு வாரியம் அறிவிப்பு appeared first on Dinakaran.