* ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்பு, அரசு மரியாதையுடன் பிரியாவிடை அளிக்கப்பட்டது
சென்னை: தமிழக காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் எம்எல்ஏ உடல் நேற்று சென்னையில் தகனம் செய்யப்பட்டது. இளங்கோவன் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இறுதி அஞ்சலி செலுத்தினார். இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர். அரசு மரியாதையுடன் பிரியாவிடை அளிக்கப்பட்டது. தமிழ்நாடு காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவுமான ஈவிகேஎஸ்.இளங்கோவன் நுரையீரலில் ஏற்பட்ட தொற்று காரணமாக மணப்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலன் இன்றி நேற்று முன்தினம் காலை அவர் மரணம் அடைந்தார்.
இதையடுத்து அவரது உடல் மணப்பாக்கத்தில் உள்ள இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு நேற்று முன்தினம் முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் அஞ்சலி செலுத்தினர். மேலும் காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், பொதுமக்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து நேற்றும் அவரது இல்லத்தில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உடலுக்கு அரசியல் கட்சியினர், பொதுமக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.
மேலும் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் உடலுக்கு நேற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வந்தார். அவரது உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலை வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினார். இளங்கோவன் குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறினார். அப்போது பொன்முடி, முத்துசாமி, தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை ஆகியோர் உடன் இருந்தனர்.
மேலும் திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி, புதுச்சேரி முன்னாள் முதல்வர் ரங்கசாமி, தமாகா தலைவர் ஜி.கே.வாசன், பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி, பாஜ மூத்த தலைவர் எச்.ராஜா, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், இந்திய ஹஜ் அசோசியேஷன் தலைவர் பிரசிடெண்ட் அபூபக்கர் உள்ளிட்டோரும் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
இதே போல காங்கிரஸ் சார்பில் கார்த்தி சிதம்பரம் எம்பி, அசன் மவுலானா எம்எல்ஏ, நாசே ராமச்சந்திரன், மாநில துணை தலைவர்கள் கோபண்ணா, சொர்ணா சேதுராமன், மாநில பொதுச் செயலாளர்கள் தளபதி பாஸ்கர், பி.வி.தமிழ்செல்வன், ரங்கபாஷ்யம், இலக்கிய பிரிவு தலைவர் பி.எஸ்.புத்தன், மாவட்ட தலைவர்கள் எம்.எஸ்.திரவியம், சிவராஜசேகரன், முத்தழகன், ஆர்டிஐ பிரிவு துணை தலைவர் மயிலை தரணி, திருவான்மியூர் மனோகரன் மற்றும் நிர்வாகிகள் சூளை ராஜேந்திரன், பா.சந்திரசேகர், மா.வே.மலையராஜா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று அஞ்சலி செலுத்தினர்.
இதைத் தொடர்ந்து, அவரது உடல் நேற்று மாலை 4.40 மணியளவில் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. உடல் வைக்கப்பட்டிருந்த வாகனத்தில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் குடும்பத்தினர் அமர்ந்து இருந்தனர். வாகனத்தின் முன்னேயும், பின்னேயும் காங்கிரஸ் தலைவர்கள், தொண்டர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர், பொதுமக்கள் என ஏராளமானோர் அணிவகுத்து சென்றனர்.
அதன் பிறகு முகலிவாக்கத்தில் உள்ள குன்றுமேடு மயான பூமியில் போலீசார் 48 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உடல் தகனம் செய்யப்பட்டது. தொடர்ந்து இரங்கல் கூட்டம் நடந்தது. இதில் அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன், காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை, பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு பேசினர்.
* தமிழக அரசு சார்பில் இரங்கல் அறிக்கை
பெரியார் ஈ.வெ.ராமசாமியின் அண்ணன் ஈ.வெ.கிருஷ்ணசாமியின் பேரனும், ஈ.வெ.கி.சம்பத்-சுலோசனா சம்பத் மகனும், ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவுமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நேற்று முன்தினம் இயற்கை எய்தினார். கடந்த 21.12.1948ல் ஈரோட்டில் பிறந்த இவர், இந்திய தேசிய காங்கிரஸ் பேரியக்கத்தின் தமிழ்நாடு மாநில தலைவராக 1996 முதல் 2002 வரை பணியாற்றினார்.
2004ல் எம்பியாக கோபிச்செட்டிப்பாளையம் மக்களவை தொகுதியிலிருந்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், ஒன்றிய அரசில் ஜவுளித்துறை இணை அமைச்சராகப் பொறுப்பேற்று சிறப்பான முறையில் பணியாற்றினார். தமிழ்நாட்டு அரசியல் மட்டுமல்லாது இந்திய அரசியலிலும் சிறப்பாக மக்கள் பணியாற்றினார். அரசியல், மக்கள் பணி, பொது வாழ்வு என அனைத்து தளங்களிலும் நீண்ட அனுபவம் கொண்டவர். தன் சிந்தனைக்குச் சரியாகப் பட்டதை துணிவுடன் வெளிப்படுத்தியவர்.
அவரை இழந்து வாடும் குடும்ப உறுப்பினர்களுக்கும், காங்கிரஸ் கட்சியின் தொண்டர்களுக்கும், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி மக்களுக்கும் தமிழ்நாடு அரசின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். அவரது பொதுவாழ்வைப் போற்றும் விதமாக அவரது திருவுடலுக்கு அரசு மரியாதையுடன் பிரியாவிடை அளிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post தமிழக காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ். இளங்கோவன் எம்எல்ஏ உடல் தகனம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் இறுதி அஞ்சலி appeared first on Dinakaran.