சென்னை: மழை பெய்துவரும் நிலையில் தமிழக அரசு உறங்கவில்லை விழித்துக் கொண்டு கண்காணிக்கிறது என வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைதுறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையானது இயல்பை விட அதிகமாக பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. பருவமழையை எதிர்கொள்ள அனைத்து துறை அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
இந்த நிலையில், மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் பேட்டியளித்த அமைச்சர், மரங்கள் விழுந்தால் உடனுக்குடன் அகற்ற அதிகாரிகள், ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மழை நீர் தேங்கும் இடங்களில் நீரை வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது. தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் மையங்களில் தங்க வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
குழந்தைகளுக்கு பால் பற்றாக்குறை இல்லாத சூழலை உருவாக்கி உள்ளோம். கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்களை சரியான இடத்தில் தங்கவைக்கப்படும் நிலையை முதலமைச்சர் அறிவுறுத்தினார். உணவு தட்டுப்பாடு இல்லாமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் அந்தந்த மாவட்ட ஆட்சி தலைவர்கள், அமைச்சர்கள் பணியை செய்து வருகின்றனர். துணை முதலமைச்சர் நீர் தேங்கிய இடங்களை சரிபார்த்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
தாழ்வான இடங்களில் படகுகள் நிறுத்திவைப்பு
சென்னையில் மழையால் பாதிக்கப்படும் தாழ்வான இடங்களில்
படகுகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் முன்கூட்டியே தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனர்.
அத்தியாவசியப் பொருட்களை முண்டியத்து வாங்க வேண்டாம்
அத்தியாவசியப் பொருட்களை சிலர் அதிகளவில் வாங்கிச்செல்வதால் மற்றவர்களுக்கு கிடைப்பதில்லை என அமைச்சர் அறிவுறுத்தினார். தேவையான பொருட்களை மட்டுமே வாங்க வேண்டும்; அளவுக்கு அதிகமாக வாங்க வேண்டாம். மக்களுக்கு உணவு அளிக்க அந்தந்த பகுதிகளில் உள்ள நிவாரண முகாம்கள் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
The post தமிழக அரசு உறங்கவில்லை; விழித்துக் கொண்டு கண்காணிக்கிறது: அமைச்சர் ராமச்சந்திரன் பேட்டி appeared first on Dinakaran.