தமிழக அரசியல்வாதிகள், ஏன் இந்தியை எதிர்க்கிறார்கள்..? - பவன் கல்யாண் கேள்வி

3 hours ago 2

ஆந்திரா,

தமிழகத்தில் மும்மொழி கொள்கைக்கு அரசியல் கட்சி தலைவர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மும்மொழி கொள்கை மூலம் மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சிப்பதாக தி.மு.க., அதன் கூட்டணி கட்சிகள், அ.தி.மு.க., நடிகர் விஜய்யின் த.வெ.க., பா.ம.க. உள்பட பல கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இதனால் மும்மொழி கொள்கை விஷயத்தில் தமிழகத்தில் பா.ஜ..க மட்டுமே ஆதரித்து வருகிறது. பிற பெரும்பான்மையான கட்சிகள் அதனை எதிர்த்து வருகின்றன

இந்நிலையில் லாப நோக்கத்துக்காக தமிழ் படங்களை இந்தியில் டப்பிங் செய்வதை மட்டும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகள், ஏன் அனுமதிக்கிறார்கள்? என்று ஜனசேனா கட்சியின் தலைவரும், ஆந்திர துணை முதல்-மந்திரியுமான பவன் கல்யாண் கேள்வி எழுப்பி உள்ளார்.

இதுதொடர்பாக நேற்று தனது கட்சியான ஜனசேனா கட்சி உருவானதன் 12வது ஆண்டு விழாவில் பேசிய அவர், "இந்தியாவுக்கு தமிழ் உள்பட பல மொழிகள் தேவையாக உள்ளது. இருமொழிகள் மட்டுமே போதாது. நம் நாட்டில் ஒருமைப்பாட்டை பேணுவதற்கு மட்டுமின்றி மக்களிடையே அன்பையும், ஒற்றுமையையும் வளர்க்க பன்முகதன்மை அடிப்படையில் பல மொழிகளை ஏற்க வேண்டும்.

அதேபோல் சமஸ்கிருதத்தை சிலர் ஏன் விமர்சிக்கின்றனர்? என்பது எனக்கு புரியவில்லை. மேலும் தமிழ்நாடு அரசியல்வாதிகள் தங்களின் திரைப்படங்களை பணத்துக்காக இந்தியில் டப் செய்ய கூறிவிட்டு இந்தியை எதிர்ப்பது ஏன்? என்று எனக்கு புரியவில்லை. பாலிவுட்டில் இருந்து பணத்தை விரும்பும் அவர்கள் ஏன் இந்தியை ஏற்க மறுக்கின்றனர்? இது எந்த மாதிரியான லாஜிக்?..

உத்தரப்பிரதேசம், பீகார், சத்தீஸ்கர் போன்ற இந்தி பேசும் மாநிலங்களில் இருந்து பணமும் தேடுகிறார்கள். மேலும், பீகாரிலிருந்து தொழிலாளர்களையும் நம்பியிருக்கிறார்கள். இப்படியான விஷயங்கள் இருந்தும் இந்தியை வெறுக்கிறோம் எனக் கூறுகிறார்கள். இது எப்படி நியாயமானதாக இருக்கும். இந்தியா என்பது கோபப்படும்போது பிரிக்கப்படக்கூடிய கேக் துண்டா? இந்தியாவின் ஒருமைப்பாட்டை குறைக்க முயற்சிப்பவர்களை எதிர்க்க என்னைப் போன்ற கோடிக்கணக்கான மக்கள் எழுந்து நிற்போம்.

நான் செல்லும் பாதையில் இருக்கும் இருள், குழிகளை பற்றி பயப்படமாட்டேன். வெளிச்சம் இல்லாவிட்டாலும் கூட அச்சமின்றி நடந்து செல்வேன். 2014ல் கட்சி தொடங்கி படிப்படியாக முன்னேறி உள்ளோம். இந்த வேளையில் தமிழ்நாட்டு மக்களுக்கும் நான் நன்றி கூற விரும்புகிறேன். அங்கு நான் அதிக நேரம் செலவழிக்காவிட்டாலும் கூட அவர்களின் சப்போர்ட்டும் எனக்கு இருக்கிறது" என்று பவன் கல்யாண் கூறினார். 

Read Entire Article