தமிழக அரசின் கோரிக்கையை ஏற்றது ஒன்றிய அரசு பயிர் காப்பீடு தேதி நவ.30 வரை நீட்டிப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி

1 month ago 5

சென்னை: தமிழகத்தில் பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் நெற்பயிர்களை காப்பீடு செய்வதற்கான காலக்கெடு கடந்த 15ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று பயிர் காப்பீட்டிற்கான தேதியை வரும் 30ம்தேதி வரை நீட்டித்து ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தில் செப்டம்பர் 15ம்தேதி முதல் நவம்பர் 15ம்தேதி வரை நெற்பயிர்களை காப்பீடு செய்வதற்கு, விவசாயிகள் விஏஓக்களிடம் அடங்கல் பெற்று, இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு பிரீமிய தொகையை கட்ட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. இதில், ஏக்கருக்கு ரூ.30,120 இழப்பீடு தொகையாக வழங்கப்பட உள்ளது. இதற்கான பிரீமியமாக ஏக்கருக்கு ரூ.451.80 வீதம் செலுத்த வேண்டும். ஆனால், அந்த தொகையை அனைவராலும் செலுத்த முடியவில்லை. ஏனென்றால், தீபாவளி, ஆயுதபூஜை விடுமுறைகள் தொடர்ந்து வந்ததால் அலுவலகங்கள், தேசிய மற்றும் தொடக்க கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பிரீமியம் தொகையை செலுத்த முடியாத நிலைமை ஏற்பட்டது. பிரீமியம் தொகை செலுத்த கால அவகாசம் வழங்க வேண்டும் என்று விஏஓ மற்றும் விவசாயிகள் சங்கம், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை விடுத்திருந்தது.

இந்த கோரிக்கையையடுத்து, மாநில அரசு, ஒன்றிய அரசிடம் ஆலோசனை செய்து, அவகாசம் வழங்குவது குறித்து முடிவு செய்யும் என்று, வேளாண்மை துறை அதிகாரிகள் தரப்பிலும் நம்பிக்கை தரப்பட்டிருந்தது. மேலும் இதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டுமென ஒன்றிய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியிருந்தது. இந்நிலையில், இந்த கடிதத்துக்கு தற்போது ஒன்றிய அரசு பதிலளித்திருக்கிறது. இதையடுத்து, பயிர் காப்பீடு செய்வதற்கான காலக்கெடுவை வரும் 30ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. இதற்கான உத்தரவை, ஒன்றிய வேளாண் துறை பயிர் காப்பீட்டு பிரிவு கூடுதல் ஆணையர் காம்னா ஆர் சர்மா பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவை பின்பற்றும்படி, தமிழகத்தில் பயிர் காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்தும் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழக அரசு எடுத்த முயற்சி காரணமாக கால அவகாச நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. தமிழக அரசுக்கு விவசாயிகளும், கிராம நிர்வாக சங்கத்தினரும் நன்றி தெரிவித்துள்ளனர். எனவே, பயிர்க் காப்பீடு செய்வதற்கான இணைய இணைப்பு மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளது.

 

The post தமிழக அரசின் கோரிக்கையை ஏற்றது ஒன்றிய அரசு பயிர் காப்பீடு தேதி நவ.30 வரை நீட்டிப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Read Entire Article