தமிழக அமைச்சரவையில் அனைத்து சமுதாயங்களுக்கும் பிரதிநிதித்துவம்: ராமதாஸ் புகாருக்கு ஆர்.எஸ்.பாரதி பதில்

3 months ago 20

திருவொற்றியூர்: தமிழக அமைச்சரவையில் அனைத்து சமுதாயங்களுக்கும் போதிய பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டுள்ளது, என பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சனத்துக்கு திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பதில் அளித்துள்ளார். திமுக முன்னாள் அமைச்சர் கே.பி.பி.சாமி மற்றும் தற்போதைய எம்எல்ஏ கே.பி.சங்கர் ஆகியோரின் தந்தை பரசுராமனின் 32வது நினைவு தினஅனுசரிப்பு திருவொற்றியூர் கே.வி.கே.குப்பத்தில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, பரசுராமனின் படத்திற்கு மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு தையல் இயந்திரம், அரிசி, அறுசுவை உணவு போன்ற நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பின்னர் அவர் பேசியதாவது: உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளதற்கு அண்ணாமலை, எச்.ராஜா, தமிழிசை, வானதி உள்ளிட்ட பாஜவினர் விமர்சனம் செய்து வருகின்றனர். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள அனைத்து மாநிலங்களிலும் பாஜவினர் வாரிசுகள் எந்தெந்த பதவியில் உள்ளனர் என்பது குறித்து ஏற்கனவே பட்டியல் வெளியிடப்பட்டுவிட்டது. அரசியல் சட்டத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள விதிகளின்படிதான் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சமுதாய அடிப்படையில் தமிழக அமைச்சரவையில் இட ஒதுக்கீடு அளிக்கப்படவில்லை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சனம் செய்துள்ளார். தற்போது 4 வன்னியர்களுக்கு அமைச்சரவையில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல அனைத்து சமுதாயத்தினருக்கும் போதிய அளவில் அமைச்சர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். சமுதாய அடிப்படையிலான ஒதுக்கீடு குறித்து பாஜ கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் பாமக, இதே கருத்தை பிரதமர் நரேந்திர மோடியிடம் வலியுறுத்தி அவரது மகன் அன்புமணியை அமைச்சராக்கலாம்.

அமைச்சர்களை நீக்குவதும், மீண்டும் சேர்ப்பதும் ஒரு முதலமைச்சரின் தனிப்பட்ட உரிமை. இதில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை. அமைச்சர் செந்தில்பாலாஜி மீதான புகார் குறித்த வழக்கு ஏற்கனவே முடித்து வைக்கப்பட்ட ஒன்று. அதனை மீண்டும் அமலாக்கத்துறை கையில் எடுத்து நீதிமன்றத்தில் வழக்கு நடத்தி வருகிறது. அவர் மீது அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கு திட்டமிட்டு பழிவாங்கும் நடவடிக்கை. மகாராஷ்டிரா மாநிலத்தைப் போல தமிழகத்திலும் ஒரு குழப்பத்தை ஏற்படுத்த செந்தில்பாலாஜியை பயன்படுத்த முயற்சித்தனர். ஆனால் அது தோல்வி அடைந்த நிலையில், தற்போது அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு அவர் பேசினார். எம்எல்ஏக்கள் மாதவரம் எஸ்.சுதர்சனம், கே.பி.சங்கர், கவுன்சிலர் கே.பி.சொக்கலிங்கம், நிர்வாகிகள் ராமநாதன், பத்மநாபன், ஆர்.டி.மதன்குமார், எஸ்.டி.சங்கர் உள்பட பலர் உடன் இருந்தனர்.

The post தமிழக அமைச்சரவையில் அனைத்து சமுதாயங்களுக்கும் பிரதிநிதித்துவம்: ராமதாஸ் புகாருக்கு ஆர்.எஸ்.பாரதி பதில் appeared first on Dinakaran.

Read Entire Article