தனியார் மயத்துக்கு எதிர்ப்பால் பணிந்தது ஒன்றிய அரசு; 13 ஆண்டுகளுக்கு பின் சேலம் இரும்பாலையை விரிவாக்கம் செய்ய திட்டம்

3 months ago 14

* வல்லுநர்கள் குழு அமைத்து ஆய்வு செய்ய ஏற்பாடு

மலைகள் சூழ்ந்த மாவட்டமான சேலத்தின் மையப்பகுதியில், இரும்பு தாதுகள் நிறைந்த கஞ்சமலை அமைந்திருக்கிறது. இம்மலையின் இரும்பு தாதுவை எடுத்து உருக்கி ஆயுதங்களாக மன்னர் ஆட்சி காலத்தில் பயன்படுத்தியிருக்கின்றனர். 18ம் நூற்றாண்டில் சேலம் நகரில் வாழ்ந்த பல வல்லுநர்கள், இங்குள்ள இரும்பினை உருக்கி நல்ல எக்கு தயாரித்துள்ளனர். இதில் மிகவும் பெயர் பெற்று விளங்கியவர், அருணாச்சல ஆசாரி ஆவார். சேலம் இரும்பில் தரமான எக்கு தயாரிக்க முடியும் என ெவளிக்கொண்டு வந்தவரே அவர் தான். ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் சேலம் இரும்பு, இங்கிலாந்து சென்றது. நாடு சுதந்திரம் பெற்றபின், காங்கிரஸ் ஆட்சியில் சேலத்தில் இரும்பாலையை தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. பிறகு பேரறிஞர் அண்ணா, அக்கோரிக்கையை நிறைவேற்றித் தர ஒன்றிய அரசை வற்புறுத்தினார். 1969ம் ஆண்டில் முதல்வராக கருணாநிதி வந்தார்.

அவரும் சேலத்தில் எக்கு உருக்காலையை உருவாக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். நான்காவது திட்ட கமிஷன் தொடர்பான மாநில முதல்வர்கள் கூட்டம் 1970ம் ஆண்டு மார்ச் 21ம் தேதி டெல்லியில் நடந்தது. அந்த கூட்டத்தில் கலந்துகொள்ள முதல்வராக கருணாநிதி சென்றார். அந்த நேரத்தில், சேலத்தில் உருக்காலை தொடங்குவது தொடர்பாக அறிவிப்பு ஏதும் வெளிடப்படாததால், கூட்டத்தை புறக்கணிக்கும் வகையில் டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்திலேயே கருணாநிதி இருந்து கொண்டார். கூட்டம் தொடங்குவதற்கு முன் தமிழ்நாடு முதல்வர் கருணாநிதி வரவில்லை என்ற தகவல் பிரதமர் இந்திராகாந்திக்கு சென்றது. உடனே அவர், கருணாநிதியிடம், நீங்கள் கூட்டத்தில் கலந்துகொள்ளுங்கள். இந்த நான்காவது ஐந்தாண்டு திட்டத்தில் சேலம் உருக்காலை சேர்க்கப்படும் என உறுதியளித்தார். பிரதமரின் உறுதியை ஏற்றபின்னே அக்கூட்டத்தில் முதல்வர் கருணாநிதி பங்கேற்றார்.

கலைஞர் கருணாநிதியின் தொடர் அழுத்தத்தால் 1970ம் ஆண்டு ஏப்ரல் 17ம் தேதி நடந்த பாராளுமன்ற கூட்டத்தில் பிரதமர் இந்திராகாந்தி, சேலத்தில் உருக்காலை தொடங்கப்படும் என அறிவித்தார். சேலம் கஞ்சமலையில் இருந்து இரும்பு தாதுவை எடுத்து தரமான இரும்பு எக்கு பொருட்களை தயாரிக்கும் ஆலையை ஏற்படுத்த இடம் தேர்வு செய்யப்பட்டது. இதற்காக கஞ்சமலை பகுதியில் உள்ள கரிச்சிப்பட்டி என்ற இடம், இரும்புத்தொழிற்சாலை அமைப்பதற்கு சரியாக இருக்கும் என முடிவாகி, அங்கிருந்த 25 கிராமங்களை காலி செய்ய வைத்து, 4 ஆயிரம் ஏக்கர் இடத்தை கையகப்படுத்தி உருக்காலை கட்ட ஏற்பாடு செய்யப்பட்டது. சேலம் உருக்காலை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா, 1970ம் ஆண்டு செப்டம்பர் 16ந்தேதி நடந்தது. பிரதமர் இந்திராகாந்தி, தமிழ்நாடு ஆளுநர் உஜ்ஜல்சிங், முதல்வர் கருணாநிதி பங்கேற்று ஆலைக்கான அடிக்கல்லை நட்டனர்.

கட்டுமான பணிகள் 10 ஆண்டுகள் நடந்தன. 1981ம் ஆண்டு அப்பணி நிறைவடைந்து சேலம் இரும்பாலை செயல்பாட்டுக்கு வந்தது. உருக்காலைக்கு தேவையான இரும்பு கஞ்சமலையில் இருந்து எடுத்து பயன்படுத்துவதாகவே முதலில் திட்டமிடப்பட்டது. ஆனால், ஆலை தொடங்கப்படும்போது, சேலம் இரும்பு உருக்காலையை விசேஷ ஆலையாக ஒன்றிய அரசு அறிவித்தது. அதன்படி இங்கு, ஸ்டெயின்லஸ் ஸ்டீல் சீட்ஸ் (எவர்சில்வர் சீட்ஸ்) மற்றும் நாணய வில்லைகள் தயாரிக்க முடிவாகி, அதற்காக குளிரூட்டாலை இயங்க ஆரம்பித்தது. இதன்மூலம் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு கிட்டியது. இப்படி மிகப்பெரிய போராட்டத்திற்கிடையே உருவான சேலம் இரும்பாலையை விரிவாக்கம் செய்யும் பணி கடந்த 2010ம் ஆண்டு அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங்கால் தொடங்கி வைக்கப்பட்டது.

தற்போது, சேலம் இரும்பாலையில் ஸ்டெயின்லஸ் ஸ்டீல் பாலங்கள், ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் சுருள்கள், ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் தகடுகள், கார்பன் ஸ்டீஸ் சுருள்கள், ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் நாணயங்கள் என 5 வகையான பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆலையில் நிரந்தர பணியாளர்களாக 810 பேர் (640 தொழிலாளர்கள், 170 அதிகாரிகள்) பணியாற்றுகின்றனர். இதுபோக ஒப்பந்த அடிப்படையில் கூட்டுறவு சங்கம் மூலம் 300 தொழிலாளர்களும், இதர ஒப்பந்த தொழிலாளர்கள் 500 பேரும் வேலை பார்க்கின்றனர். இரும்பாலையின் நேரடி வேலைவாய்ப்பை 1,600 பேரும், மறைமுக வேலைவாய்ப்பை சுமார் 2,500 ஆயிரம் பேரும் பெற்று வருகின்றனர். ஆனால், தற்போது இருக்கும் உற்பத்தி அலகுகளில் 650 பணியிடம் காலியாக இருக்கிறது. அதாவது, கடந்த 2010ம் ஆண்டு ஆலையின் செயில் திட்ட ஆலோசகர், சேலம் உருக்காலையில் 450 புதிய பணியிடத்தை தோற்றுவித்து நிரப்ப வேண்டும் என பரிந்துரை செய்தார்.

அதுபோக கடந்த 10 ஆண்டுகளில் ஓய்வு பெற்ற 200 பேரின் பணியிடம் இன்னும் நிரப்பப்படாமல் இருக்கிறது. மேற்குவங்கம், ஒடிசா, ஜார்கண்ட், சட்டீஸ்கர் ஆகிய இடங்களில் உள்ள இரும்பாலைகளில் காலிப்பணியிடத்தை நிரப்பும் செயில் நிர்வாகம், சேலம் இரும்பாலையில் மட்டும் காலிப்பணியிடத்தை நிரப்பாமல் வைத்துள்ளது. இதற்கு காரணம், சேலம் இரும்பாலையை தனியாருக்கு விற்க ஒன்றிய அரசு எடுத்த முடிவே ஆகும். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இருந்தும், ஒன்றிய அரசு உலகளாவிய டெண்டர் கோரியநிலையில், எந்த நிறுவனமும் எடுக்க முன்வரவில்லை. அதேநேரத்தில் 10 ஆண்டுகளுக்கு மேல் நஷ்டத்தில் இயங்கிய சேலம் இரும்பாலை கடந்த 3 ஆண்டுகளாக லாபத்தில் இயங்குகிறது. கடனுக்கான வட்டி தொகையை செலுத்தியது போக லாபத்தை ஈட்டுகிறது. சேலம் இரும்பாலையில் உற்பத்தியாகும் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல்கள், இங்கிலாந்து, மலேசியா, சிங்கப்பூர், சுவிட்சர்லாந்து உள்ளிட்ட 37 நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது. ஆண்டுக்கு ரூ3 ஆயிரம் கோடி வர்த்தகத்தை மேற்கொண்டு வருகிறது.

இப்படி லாபகரமான நிலைக்கு திரும்பியிருக்கும் சேலம் இரும்பாலையை தனியார் மயமாக்கும் முடிவை கைவிட இருப்பதாக புதிதாக பொறுப்பேற்ற ஒன்றிய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அத்துடன் தென்மாநிலங்களான ஆந்திர மாநிலம் விசாகப்பட்டிணத்தில் உள்ள இரும்பாலை, கர்நாடகாவில் உள்ள இரும்பாலை, தமிழகத்தில் சேலத்தில் உள்ள இரும்பாலை ஆகிய மூன்றையும் விரிவாக்கம் செய்ய சிறப்பு திட்டத்தை வகுக்க இருப்பதாக ஒன்றிய கனரக தொழில்கள் மற்றும் எக்குத்துறை அமைச்சர் எச்.டி.குமாரசாமி தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் சேலம் இரும்பாலைக்கு வந்த ஒன்றிய அமைச்சர் எச்.டி.குமாரசாமி ஆலை முழுவதையும் சுற்றிப் பார்த்து ஆய்வு செய்தார். அப்போது அவருடன் செயில் நிறுவன உயர் அதிகாரிகள் குழுவும் வந்திருந்தது. இங்கு உற்பத்தியாகும் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் குறித்தும், அதன் சர்வதேச மார்க்கெட் குறித்தும் விரிவாக ஆய்வு செய்தனர்.

அப்போது, சேலம் இரும்பாலையில் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் உற்பத்தியை அதிகரிக்க கூடுதல் அலகுகள் தொடங்குவது குறித்தும், ஸ்டெயின்லெஸ் குழாய் உற்பத்தி மேற்கொள்ள புதிய உற்பத்தி அலகை தொடங்குவது பற்றியும் ஆலோசித்துள்ளனர். சேலம் இரும்பாலையை கடந்த 2010ம் ஆண்டுக்கு பின், அதாவது 13 ஆண்டுகள் கழித்து விரிவாக்கம் செய்திட ஒன்றிய அரசு முன்வந்திருக்கிறது. எத்தகைய வகையில் விரிவாக்கம் செய்வது, அதற்கு எவ்வளவு நிதி தேவைப்படும், நிதி திரட்ட என்னென்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தொடர்பாக விரிவாக ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வல்லுர் குழுவை அமைக்கவுள்ளனர். அதற்கான ஏற்பாடுகளை ஒன்றிய எக்குத்துறை அமைச்சகமும், செயில் நிர்வாகமும் செய்து வருகிறது. இதனால், மிக விரைவில், வல்லுநர் குழு அமைக்கப்பட்டு, விரிவாக்கத்திற்கான ஆயத்தப்பணிகள் நடக்கும் என்ற நம்பிக்கை தொழிலாளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

ராணுவ தளவாடங்கள் உற்பத்திக்கான ‘காரிடர்’
ேசலம் இரும்பாலை வளாகத்தில் காலியாக இருக்கும் இடத்தில் ராணுவ தளவாடங்கள் உற்பத்தி செய்யும் காரிடர் அமைக்கவுள்ளனர். அதற்கான அறிவிப்பை ஒன்றிய அரசு ஏற்கனவே வெளியிட்டிருக்கிறது. இந்த காரிடர் அமைந்தால் பல்வேறு உதிரிபாக தொழிற்சாலைகள் உருவாகும். விமான தயாரிப்பிற்கு தேவையான உதிரிபாகங்கள் மட்டுமின்றி துப்பாக்கி உள்ளிட்ட ஆயுத உற்பத்திக்கு தேவையான தொழில் நிறுவனங்களும் இங்கு அமையும். இதன்மூலம் ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வெளிநாடுகளுக்கு நாணய வில்லைகள்
சேலம் இரும்பாலையில் உற்பத்தியாகும் நாணய வில்லைகள், இங்கிருந்து நாசிக் கொண்டு செல்லப்பட்டு 1, 2, 5, 10 ரூபாய் நாணயங்களாக அச்சிடப்படுகிறது. நம் நாட்டின் தேவைக்கு போக, வெளிநாடுகளுக்கும் சேலம் இரும்பாலையில் இருந்து நாணயவில்லைகள் ஏற்றுமதியாகிறது. மலேசியா, இந்தோனிஷியா போன்ற நாடுகள் ஆர்டர் கொடுத்து நாணயங்களை வாங்கிக் கொள்கின்றன. மேலும், பிளேடு தயாரிக்கும் ஸ்டெயின்லெஸ் சீட் (இழை போன்றது) சேலம் இரும்பாலையில் தான் உற்பத்தி செய்யப்படுகிறது. இதனை பல வெளிநாட்டு நிறுவனங்கள் வாங்கி, பிளேடு தயாரித்து சந்தையில் விற்கிறது.

நிதி அமைச்சகத்துடன்
விரைவில் ஆலோசனை
சேலம் இரும்பாலையை விரிவாக்கம் செய்வது தொடர்பாக ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் மற்றும் நிதி அமைச்சக அதிகாரிகள், எக்கு அமைச்சக அதிகாரிகள், செயில் நிர்வாக அதிகாரிகள் விரைவில் ஆலோசிக்கவுள்ளனர். இந்த ஆலோசனை கூட்டத்தை விரைந்து நடத்தி, பிரதமர் மோடியின் கவனத்திற்கு கொண்டு சென்று மேல் நடவடிக்கை எடுக்க இருப்பதாக ஒன்றிய கனரக தொழில்கள் மற்றும் எக்குத்துறை அமைச்சர் எச்.டி.குமாரசாமி தெரிவித்தார்.

The post தனியார் மயத்துக்கு எதிர்ப்பால் பணிந்தது ஒன்றிய அரசு; 13 ஆண்டுகளுக்கு பின் சேலம் இரும்பாலையை விரிவாக்கம் செய்ய திட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article