கும்மிடிப்பூண்டி, மே 15: அதிக மாணவர்களை ஏற்றி சென்றால் பள்ளியின் வாகன தகுதிச்சான்று ரத்து செய்யப்படும் என வட்டார போக்குவரத்து அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தனியார் பள்ளி வாகனங்கள் விதிமுறைகளை முறையாக கடைபிடித்து இயக்குகின்றதா என்பதை ஆய்வு செய்ய வருவாய்த்துறை, காவல்துறை, கல்வித்துறை மற்றும் போக்குவரத்துதுறை அதிகாரிகள் கொண்ட குழுவினர் பள்ளிகள் திறப்பதற்கு முன்பாக கோடை விடுமுறையில் வாகனங்களை தணிக்கை செய்து வருகின்றனர். அதன்படி திருவள்ளூர் அடுத்த தச்சூரில் உள்ள மைதானத்தில் செங்குன்றம் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு உட்பட்ட பள்ளி வாகனங்களை சிறப்பு தணிக்கை குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர். பொன்னேரி சார் ஆட்சியர் ரவிக்குமார் தலைமையில் செங்குன்றம் வட்டார போக்குவரத்து அலுவலர் சிவாநந்தன், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் ராஜ்குமார், ரமேஷ் மாவட்ட கல்வி அலுவலர் தேன்மொழி உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் நேற்று பள்ளி வாகனங்களில் ஆய்வு செய்தனர்.
இதில், செங்குன்றம் பகுதியில் உள்ள 72 பள்ளிகளின் 292 வாகனங்கள், கும்மிடிப்பூண்டி வட்டார போக்குவரத்து அலுவலக கட்டுப்பாட்டில் உள்ள 23 பள்ளிகளின் 130 வாகனங்கள் என மொத்தம் 95 பள்ளிகளில் 422 வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அப்போது மாணவர்களின் பாதுகாப்புக்காக தமிழக அரசு அறிவித்துள்ள வேகக் கட்டுப்பாட்டுக் கருவிகள் பொருத்துதல், படிக்கட்டு வசதிகள், அவசர கால கதவுகள், முதலுதவி பெட்டிகள், ஜன்னல் பாதுகாப்பு வசதிகள், புத்தகங்கள் வைப்பதற்கான அலமாரி, வாகனங்களின் தரை உறுதித்தன்மை, தீயணைப்பு கருவி, கண்காணிப்பு கேமரா பொருத்துதல், ஜிபிஎஸ் கருவி பொருத்துதல் உள்ளிட்ட 21 அம்சங்கள் கடைபிடிக்கப்பட்டுள்ளதா என சோதனை செய்தனர். குறைபாடுகள் கண்டறியப்பட்ட வாகனங்களில் சரி செய்து மீண்டும் தணிக்கை குழுவினரிடம் சான்று பெறுமாறு அறிவுறுத்தப்பட்டு வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றன.
மேலும் பள்ளி வாகனங்களில் திடீரென தீப்பிடித்தால் அதனை எவ்வாறு கையாள்வது, தீயணைப்பு கருவியை பயன்படுத்துவது எப்படி என்பது போன்ற தத்ரூப ஒத்திகையை பொன்னேரி தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெயச்சந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் செய்து காண்பித்தனர். தொடர்ந்து தனியார் பள்ளி ஓட்டுநர்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது. ஓட்டுனர்கள் அனைவரும் மது அருந்தி விட்டோ, செல்போன் பேசிக்கொண்டோ கட்டாயம் வாகனத்தை இயக்கக்கூடாது என சார் ஆட்சியர் ஓட்டுனர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை தாண்டி அதிக மாணவர்களை வாகனத்தில் ஏற்றிச் சென்றால் வாகன தகுதிச் சான்று ரத்து செய்யப்படும் என வட்டார போக்குவரத்து அலுவலர் சிவாநந்தன் எச்சரித்தார்.
The post தனியார் பள்ளி, கல்லூரி வாகனங்களில் அதிக மாணவர்களை ஏற்றி சென்றால் தகுதிச்சான்று ரத்து: வட்டார போக்குவரத்து அதிகாரிகள் எச்சரிக்கை appeared first on Dinakaran.