சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஒருவர் ஈடுபடும்போது, அதற்கான தண்டனையை தரும் அதிகாரம் நீதிமன்றத்திற்கு மட்டுமே உள்ளது. அவர்கள் குற்றவாளிகளா, இல்லையா என்பதை நீதிமன்றங்களே உறுதி செய்து தண்டனையை அறிவிக்கின்றன. இதுதான் உலகில் உள்ள பெரும்பாலான நாடுகளில் கடைப்பிடிக்கப்படும் நீதி முறையாகும். குற்றவாளிகளின் வீடுகளை இடிப்பதை எதிர்த்த வழக்கில், இதனை மீண்டுமொரு முறை சுப்ரீம் கோர்ட் ஆணித்தரமாக எடுத்துரைத்துள்ளது.
பொதுவாக, குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் ஒருவரின் வங்கிக் கணக்குகளை முடக்குதல், சொத்து களை பறிமுதல் செய்தல் போன்ற நடவடிக்கைகள் ஒன்றிய, மாநில அரசின் சட்டம், ஒழுங்கு பாதுகாப்பு தொடர்பான துறைகள் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம் போன்ற சில மாநில அரசுகள் குற்றச் செயலில் ஈடுபடுவர்களுக்கு தரும் தண்டனை கொடூரமானது. அவர்களது வீடுகளை புல்டோசர் மூலம் அம்மாநில அரசுகளே இடித்து தள்ளி விடுகின்றன. ‘இதன்மூலம் அவர் மீண்டும் குற்றச்செயலில் ஈடுபட மாட்டார்; மற்றவர்களுக்கு பாடம் கற்பிக்கும் செயல்’ என்ற தவறான முன்னுதாரணத்தை சமூகத்திற்குச் சொல்கின்றன.
ஒருவர் குற்றம் செய்கிறார் என வைத்துக் கொள்வோம். அவரோடு தொடர்புடைய பெற்றோர், மனைவி, பிள்ளைகள், உடன்பிறந்தோர், குடும்பத்தினர் எப்படி அவரது குற்றச் செயல்களுக்கு பொறுப்பாக முடியும்? சில நேரங்களில் வாடகை வீடு மற்றும் மாடி குடியிருப்புகளை கூட விட்டு வைக்காமல் இடித்து தள்ளி விடும் செயல் மேற்கண்ட மாநிலங்களில் தொடர்கதையாக இருந்துள்ளது. ஒருவர் செய்யும் குற்றத்திற்காக, குடும்பத்தினர் வசிக்கும் வீட்டை இடித்து தள்ளுவது, தனிமனித உரிமையை மீறும் செயல் என சுப்ரீம் கோர்ட் தனது தீர்ப்பின் மூலம் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளை குட்டி உள்ளது.
இந்த நடவடிக்கைகளை எதிர்த்த சில மனுக்கள், விசாரணைக்கு வந்தபோது சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் பி.ஆர்.கவாய், கே.வி.விஸ்வநாதன் அமர்வு கூறியுள்ள தீர்ப்பில் உள்ள கருத்துக்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை.
* வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் என்பதற்காக, அவரது வீட்டை இடிப்பதா?
* குற்றம் சாட்டப்பட்டவர் வசிக்கும் இடத்தை ஒருபோதும் பறிக்கக்கூடாது.
* குடிமக்களைப் பாதுகாப்பது ஒரு அரசின் முக்கிய பொறுப்பு.
* தன்னிச்சை நடவடிக்கையிலிருந்து தனிநபரை பாதுகாப்பது மிகவும் அவசியம்.
* அரசு, நீதிபதியாக மாறி குற்றம் சாட்டப்பட்டவரின் வீட்டை இடிக்க முடியாது.
– உள்ளிட்ட கருத்துக்களை முன்வைத்து, புல்டோசரை கொண்டு வீடுகளை இடிக்கும் மாநில அரசின் நடவடிக்கைக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. உத்தரவை மீறி வீடுகளை இடித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் எச்சரித்துள்ளது.
இந்த தீர்ப்பின் மூலம் குற்றவாளி என்றாலும், ஒருவரின் தனிமனித சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும். சட்டத்தை மீறுபவர்களிடமிருந்து மாநிலத்தை பாதுகாக்கும் நடவடிக்கை எடுப்பது மட்டும் ஒரு அரசின் செயல் அல்ல… குற்றச் செயல்களை மேற்கொள்ளாமல் தடுத்து அவர்களை பாதுகாக்கவும் வேண்டுமென மேற்கண்ட மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
ஒரு மாநில அரசு, நீதிமன்றமாக செயல்பட்டு நடவடிக்கை எடுக்கக் கூடாது; அலசி ஆராய்ந்தே ஒரு குற்றவாளிக்கு உரிய தண்டனை நீதிமன்றங்களால் வழங்கப்படுகிறது என்பதை முன்வைத்து வழங்கிய, சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்பை உ.பி, ராஜஸ்தான், ம.பி மாநில மக்கள், எதிர்க்கட்சியினர், சமூக ஆர்வலர்கள் வரவேற்றுள்ளனர்.
The post தனிமனித சுதந்திரம் appeared first on Dinakaran.