தனிநபர் வாழ்வாதார நிதியாக மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.9.62 கோடியும், தொழில் மேம்பாட்டு நிதியாக சிறப்பு சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 6.92 கோடியும் வழங்கப்பட்டது

1 month ago 7

சென்னை: தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மாற்றுத் திறனாளி சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன் இணைப்புகள் தமிழ்நாட்டில் ஊரக மற்றும் நகர்ப்புறங்களில் வசிக்கும் பெண்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றி, பொருளாதார ரீதியாக மேம்படுத்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் துவக்கி வைக்கப்பட்ட மகளிர் சுய உதவிக் குழு இயக்கமானது சிறப்பான வளர்ச்சியைப் பெற்றுள்ளது. இந்த இயக்கத்தின் வாயிலாக இலட்சக்கணக்கான மகளிர் பொருளாதார சுயசார்பு பெற்றதுடன், தொழில் முனைவோர்களாகவும் முன்னேற்றம் அடைந்துள்ளனர்.

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலில், மகளிர் சுய உதவிக் குழு இயக்கத்தை முன்னெடுத்துச் செல்லும் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனமானது, சுய உதவிக் குழுக்கள் துவங்க ஊக்குவித்து, சுழல் நிதி, மானியத்துடன் கடன் வழங்கி, தொடர் வழிகாட்டுதல்களை மேற்கொண்டு வருகிறது. ஆண்டுதோறும் ஊரக மற்றும் நகர்ப்புறங்களில் மாற்றுத் திறனாளிகள், முதியோர், நலிவுற்றோர் மற்றும் திருநங்கையரை உறுப்பினர்களாகக் கொண்ட சிறப்பு சுய உதவிக் குழுக்கள் துவக்கப்படுகின்றன. 2021ஆம் ஆண்டு முதல் நாளது வரை மாற்றுத் திறனாளிகளை உறுப்பினர்களாக கொண்ட 8,336 சிறப்பு சுய உதவிக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 3,274 குழுக்களுக்கு ரூ. 59.32 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.

மாற்றுத் திறனாளிகளுக்கு நலிவுற்றோர் மேம்பாட்டு நிதியாக ரூ.10,000 முதல் ரூ.25,000 வரை தனி நபர் கடனாக வழங்கப்பட்டு வருகிறது. தனிநபர் வாழ்வாதார நிதியாக 2,410 மாற்றுத் திறனாளிகளுக்கு 9.62 கோடி ரூபாயும், தொழில் மேம்பாட்டு நிதியாக 1,552 சிறப்பு சுய உதவிக் குழுக்களுக்கு 6.92 கோடி ரூபாயும் வழங்கப்பட்டுள்ளது. சிறப்பு சுய உதவிக் குழுக்களில் உறுப்பினர்களாக உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் நிதியானது, அவர்களின் உணவு பாதுகாப்பிற்கும், வாழ்வாதார செயல்பாடுகளுக்கும், உடல் நலக் குறைவு அல்லது எதிர்பாரா மருத்துவ செலவினங்களுக்கும் மற்றும் இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்டோரின் மறுவாழ்விற்கும் பயன்படுத்தப்படுகிறது. சிறப்பு சுய உதவிக் குழுக்களில் உறுப்பினர்களாக உள்ள மாற்றுத் திறனாளிகள், தங்களின் பொருளாதார முன்னேற்றத்திற்காக தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் வழிகாட்டுதலில் வழங்கப்படும் நிதி இணைப்புகளை முறையாகப் பயன்படுத்தி, வாழ்வில் வளம் பெற்றிட வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

 

The post தனிநபர் வாழ்வாதார நிதியாக மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.9.62 கோடியும், தொழில் மேம்பாட்டு நிதியாக சிறப்பு சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 6.92 கோடியும் வழங்கப்பட்டது appeared first on Dinakaran.

Read Entire Article