காஷ்மீரின் பஹல்காம் பள்ளத்தாக்கில் கடந்த மே மாதம் 22ம் தேதி பாகிஸ்தான் பயங்கரவாதிகள், கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர். இதில் இந்திய மக்கள் 26 பேர் கொடூரமாக கொல்லப்பட்டனர். சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்திற்கு பாகிஸ்தானை மையமாக கொண்டு செயல்படும் லஸ்கர்-இ-தொய்பா என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இதையடுத்து பாகிஸ்தானின் எல்லைமீறிய ஆணவத்துக்கு உரிய பதிலடி கொடுக்க இந்தியா தயாரானது.
முதற்கட்டமாக சிந்து நதிநீர் பயன்பாட்டுக்கு தடை, எல்லைப்பகுதிகள் அடைப்பு, வான்வெளி மூடல், வர்த்தகத்திற்கு தடை என்று பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை இந்தியா எடுத்தது. ஆனால் பாகிஸ்தானின் அத்துமீறல் அடங்கவில்லை. இதன் காரணமாக ‘ஆபரேஷன் சிந்தூர்’ என பெயரிடப்பட்ட துல்லிய தாக்குதலை இந்தியா தொடங்கியது. இதனால் நிலைதடுமாறிய பாகிஸ்தான், ஒரு கட்டத்தில் போர் குறித்து பல்வேறு வதந்திகளை பரப்ப ஆரம்பித்தது. இதற்கும் உரிய ஆதாரங்களுடன் இந்தியா பதிலடி கொடுத்தது. இதன் பிறகு திடீர் திருப்பமாக, ஒரு கட்டத்தில் போர்நிறுத்தம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை இருநாடுகளும் வெளியிட்டன.
பதற்றம் நிறைந்த போர்ச்சூழல் காலகட்டத்தில் அமெரிக்காவின் தலையீடும் சீனா, துருக்கி போன்ற நாடுகளின் மறைமுக ஆதரவும் பாகிஸ்தானுக்கு இருப்பது வெட்டவௌிச்சமானது. தற்போது இது ஆதாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் ராணுவம் தொடர்பான நிகழ்ச்சி ஒன்று நடந்தது. இதில் பங்கேற்று பேசிய இந்திய துணை ராணுவ தலைமை தளபதி ராகுல் ஆர்.சிங் பேசினார்.
அப்போது ‘ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது வான் பாதுகாப்பு அமைப்புகள் எப்படி செயல்பட்டது என்பது மிகவும் முக்கியம். நமக்கு எல்லை ஒன்றுதான். ஆனால் எதிரிகள் மூன்று பேர் இருந்தனர். தான் தயாரிக்கும் ஆயுதங்களை சோதனை செய்து பார்க்கும் களமாக பாகிஸ்தானை சீனா பயன்படுத்துகிறது. பாகிஸ்தான் நாட்டின் மொத்த ஆயுதங்களில் 81 சதவீதம் சீனா வழங்கியது. துருக்கியும் பாகிஸ்தானுக்கு ஆதரவு வழங்குவதில் முக்கிய பங்கு வகித்தது. அந்நாட்டு டிரோன்கள் இந்த தாக்குதலில் முக்கிய பங்கு வகித்தது,’’ என்று ெதரிவித்துள்ளார். இது பாகிஸ்தான், சீனா, துருக்கியின் கூட்டுச்சதியை உலகிற்கே உணர்த்தியுள்ளது.
இதுமட்டுமன்றி ‘நமது ராணுவம் ேபாரில் ஒரு இலக்கை அடையும்போது, அதை நிறுத்துவதற்கு முயற்சிக்க வேண்டும். போரை தொடங்குவது எளிது. ஆனால் அதை கட்டுப்படுத்துவது மிகவும் கடினம். ஆபரேஷன் சிந்தூரை பொறுத்தவரை அது ஒரு திறமையான தாக்குதல் என்றே கூற வேண்டும். சரியான நேரத்தில் போரை நிறுத்த வேண்டும் என்பதை இந்திய ராணுவம் இலக்காக கொண்டிருந்தது. அதேநேரத்தில் இந்திய ராணுவம் அனைத்து வழிமுறைகளிலும் போரை எதிர்கொள்ள தயாராக வேண்டும்’ என்று வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
மக்களை பாதிக்கும் வகையில் போர்க்களங்கள் எதுவும் இருக்க கூடாது என்பதில் இந்திய ராணுவம் பல்லாண்டுகளாக உறுதியான நிலைப்பாட்டில் இருந்து வருகிறது. அதேநேரத்தில் நம் மீது அத்துமீறி தாக்குதல் நடத்துபவர்களிடம் அதிரடி காட்ட எப்போதும் தயங்கியது இல்லை. எதிரணியில் நிற்கும் நாடுகளின் சூழ்ச்சிகளை முறியடித்து உலக அரங்கில் அவர்களை வெளிச்சம் போட்டு காட்டவும் பயந்தது இல்லை. இதுதான், இந்திய ராணுவத்தின் இணையற்ற தனித்துவம் என்கின்றனர் சர்வதேச பார்வையாளர்கள்.
The post தனித்துவம் appeared first on Dinakaran.