தனித்துவமான தீர்மானம்

2 hours ago 1

நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் நாளை (25ம் தேதி) தொடங்குகிறது. வரும் டிசம்பர் 20ம் தேதி வரை கூட்டம் நடக்கிறது.தமிழ்நாட்டு மக்களின் ஒட்டு மொத்த குரலாக நாடாளுமன்றத்தில் முழங்க ஆயத்தமாகி உள்ளனர் திமுகவின் எம்.பி.,க்கள். இந்த கூட்டத்தொடரில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயல்பாடுகள் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து ஆலோசனை நடத்தி அறிவுரைகளை வழங்கியுள்ளார் திமுக தலைவரான தமிழ்நாட்டின் முதல்வர் மு.க.ஸ்டாலின். ‘‘நிதி உரிமைகளை பெறும் வகையில் உறுப்பினர்களின் பேச்சு இருக்க வேண்டும்.

நமது மாநிலத்தின் உரிமைக்கான குரல் என்பது மென்மையாக ஒலிக்கக்கூடாது. அதற்கு பதில் கடுமையாக சுட்டிக்காட்டி பேச வேண்டும்,’’ என்பது முதல்வர் வழங்கியுள்ள முக்கிய அறிவுரை. மேலும் இது தொடர்பாக முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு தீர்மானங்களும் ஆலோசனைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதில் முக்கியமாக ‘ஜிஎஸ்டி சட்டத்தால் மாநிலத்திற்கு ஏற்படும் இழப்பீட்டை நிறுத்தி விட்டதால் தமிழ்நாட்டிற்கு ரூ.20 ஆயிரம் கோடி இழப்பீடு ஏற்பட்டுள்ளது. புதிய தேசிய கல்விக்கொள்கையின் முரண்பாடான கருத்துகளை எதிர்ப்பதால் ‘சமக்ர சிக்க்ஷா’ திட்ட நிதியை தமிழ்நாட்டிற்கு வழங்காமல் ஒன்றிய அரசு நிறுத்தி வைத்துள்ளது.

ரயில்வே திட்டங்களிலும் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் சட்டப்பூர்வ கடன் பெறும் உரிமையை ஒன்றிய அரசு நிராகரித்து வருகிறது. இதனால் மாநில நிதி நிலைமைக்கு பெருத்த நெருக்கடி உருவாகி இருக்கிறது,’’ என்பதை மீண்டும் ஒரு முறை மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டியுள்ளார் முதல்வர். நிதிநெருக்கடிக்கான தீர்மானம் பிரதானம்தான். அதே நேரத்தில் சமூக நீதிக்கு எதிரான திட்டங்களை செயல்படுத்த முனைப்பு காட்டும் ஒன்றிய அரசின் முகத்திரையை அகற்றவும் அறிவுறுத்தி இருப்பதுதான் தமிழ்நிலத்தின் தனித்துவம்.

சிறுபான்மையினரின் உரிமைகளை பறிக்கும் வக்பு வாரிய திருத்தச்சட்டம், கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரான ஒரேநாடு, ஒரே தேர்தல் என்ற அபாயம், அவசர கதியில் கொண்டு வந்த 3 குற்றவியல் சட்டங்கள் போன்றவற்றுக்கு எதிராகவும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் குரல் ஓங்கி ஒலிக்க வேண்டும் என்பதுதான் இங்கே முக்கியத்துவம் வாய்ந்தது. கடும் நிதி நெருக்கடியிலும் மக்களுக்கான அரிய திட்டங்களை செம்மையுடன் செயல்படுத்தி வருகிறது தமிழ்நாடு அரசு. ஒன்றிய அரசு போதிய நிதியை ஒதுக்க தொடர்ந்து மறுத்து வருகிறது. அதன் பாராமுகத்தை மக்கள் மன்றத்தில் பதிவு செய்வதும், நமக்கான உரிமையை பெறுவது மிகவும் முக்கியம். அதை கேட்பது பிரதானமாக இருந்தாலும் எளிய மக்களுக்கான சமூகநீதி என்பது ஏற்றம் பெறுவது அதைவிட முக்கியம் என்பதையே இந்த தீர்மானம் பறைசாற்றுகிறது. இது தமிழ்நிலத்தின் தனித்துவத்தை மட்டுமல்ல, நமது முதல்வரின் தனித்துவத்தையும் உணர்த்தும் தீர்மானம் என்பதே நிதர்சனம்.

The post தனித்துவமான தீர்மானம் appeared first on Dinakaran.

Read Entire Article