தனித்து நின்றாலும் 40 தொகுதிகளில் வெற்றி பெற இலக்கு; சட்டமன்ற தேர்தலில் பாமக கூட்டணி வைப்பது நிச்சயம்: ராமதாஸ் திட்டவட்டம்!

3 hours ago 1

விழுப்புரம்: ராமதாஸ் கூட்டிய பாமக மாவட்ட தலைவர், செயலாளர்கள் கூட்டத்தை பெரும்பான்மையான நிர்வாகிகள் புறக்கணித்துள்ளனர். மேலும், பா.ம.க. தலைவர் அன்புமணியும் ராமதாஸ் கூட்டிய கூட்டத்தில் பங்கேற்கவில்லை. பாமக மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைவர்கள் ஆலோசனை கூட்டம் இன்று தைலாபுரம் தோட்டத்தில் நடைபெறும். இதில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று சமூக வலைதளத்தில் ராமதாஸ் பதிவு செய்தார். அதன்படி இன்று தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. மாவட்ட செயலாளர்கள், தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது.

பாமக-வுக்கு 92 மாவட்ட செயலாளர்கள் உள்ளனர். ஆனால் இந்த ஆலோசனை கூட்டத்தில் கிருஷ்ணகிரி, கோவை, திருப்பூர் உள்பட 10 மாவட்ட முக்கிய தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள் மட்டும் கலந்து கொண்டு உள்ளனர். மற்ற மாவட்ட தலைவர்கள் தற்போது வரை கூட்டத்திற்கு வரவில்லை. கூட்டத்தில் அன்புமணி ராமதாசும் கலந்து கொள்ளவில்லை. இது பாமக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியதாவது;

சிங்கத்தின் கால்கள் பழுதுபட்டாலும் சீற்றம் குறையாது: ராமதாஸ்
களைப்போடு இருப்பதால் சிலர் கூட்டத்துக்கு வரவில்லை. சிங்கத்தின் கால்கள் பழுதுபட்டாலும் சீற்றம் குறையாது. சிங்கத்தின் கால்கள் பழுதே படவில்லை என்று கூறினார். மேலும், தனித்து நின்றாலும் 40 தொகுதிகளில் வெற்றி பெற இலக்கு; கூட்டணி உண்டு. கட்சி வளர்ச்சிக்காக ஆலோசனை நடக்கிறது; செயல்தலைவர் அன்புமணிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. செயல் தலைவர் அன்புமணி வரலாம், வந்துகொண்டே இருக்கலாம். களைப்போடு இருக்கும் நிர்வாகிகளுடன் தொலைபேசியில் பேசியிருக்கிறோம் என தெரிவித்தார். இதையடுத்து மாமல்லபுரம் மாநாட்டில் அன்புமணியை பாராட்டவில்லை என்ற கேள்விக்கு, மாநாட்டில் செயல் தலைவர் அன்புமணி என்று கூறினேன் என ராமதாஸ் விளக்கமளித்தார்.

படுத்துக் கொண்டே 50 தொகுதிகளில் ஜெயிப்பது எப்படி?: ராமதாஸ்
படுத்துக் கொண்டே 50 தொகுதிகளில் வெற்றி பெறுவது எப்படி என்பதை பரிமாறிக் கொள்ள கூட்டம் நடைபெறுகிறது. பாமக 50 தொகுதிகளில் வெற்றிபெற்று ஆட்சி அமைக்க வேண்டும் என்று நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியுள்ளேன். படுத்துக் கொண்டே ஜெயிப்பதற்கான வித்தையை சொல்லிக் கொடுத்திருக்கிறேன். கூட்டத்தில் பங்கேற்காதவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது. நிர்வாகிகள் விரும்பினால் மட்டுமே அவர்கள் மாற்றப்படுவார்கள்.

பா.ம.க.வில் கோஷ்டியா?: ராமதாஸ் புதிய விளக்கம்
பாமகவில் கோஷ்டியா என்ற கேள்விக்கு மார்கழியில்தான் பஜனை கோஷ்டி வரும் என்று ராமதாஸ் புதிய விளக்கம் அளித்தார். மேலும், சட்டமன்ற தேர்தலில் பா.ம.க. கூட்டணி வைப்பது நிச்சயம் ராமதாஸ் திட்டவட்டமாக தெரிவித்தார்.

The post தனித்து நின்றாலும் 40 தொகுதிகளில் வெற்றி பெற இலக்கு; சட்டமன்ற தேர்தலில் பாமக கூட்டணி வைப்பது நிச்சயம்: ராமதாஸ் திட்டவட்டம்! appeared first on Dinakaran.

Read Entire Article