தனி மாவட்டத்திற்கு அச்சாரமாக பொள்ளாச்சி நகராட்சியை விரிவாக்கம் செய்ய நடவடிக்கை: 7 ஊராட்சிகளை இணைக்க முடிவு

3 months ago 19

நகராட்சியுடன் அருகே உள்ள ஆச்சிப்பட்டி மற்றும் கிட்டசூராம்பாளையம், ஜமீன்முத்தூர், புளியம்பட்டி, மாக்கினாம்பட்டி, ஊஞ்சவேலாபம்பட்டி, சின்னாம்பாளையம் ஆகிய 7 கிராம ஊராட்சிகளை இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பொள்ளாச்சி: கோவை மாட்டத்தில் வளர்ந்து வரும் நகரில் ஒன்றாக பொள்ளாச்சியும் விளங்குகிறது. நகரின் மையப்பகுதியான பாலக்காடு ரோட்டில், சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு நகராட்சி அமைக்கபட்டிருந்தது. தென்னிந்தியாவில் பெரிய காய்கறி மார்க்கெட், மாட்டுசந்தை உள்ளிட்டவை நகராட்சிக்குட்பட்ட பகுதியிலே அமைந்துள்ளது. பொள்ளாச்சி வருவாய் கோட்டமாக இருந்தாலும், ஒரு சில அலுவலகங்களை தவிர, பெரும்பாலான அரசு அலுவலகங்கள் பொள்ளாச்சியிலேயே உள்ளது. பொள்ளாச்சியை பொருளாட்சி என்றும் அழைப்பார்கள். அந்த அளவிற்கு, பொருளாதாரத்திலும் சிறந்து விளங்கியுள்ளது. பொள்ளாச்சி நகரின் மையப்பகுதியிலிருந்து பிரிந்து செல்லும், கோவை ரோடு, பாலக்காடு ரோடு, மீன்கரை ரோடு, வால்பாறை ரோடு, பல்லடம் ரோடு, உடுமலை ரோடு உள்ளிட்ட முக்கிய நெடுஞ்சாலை ரோடுகளும் வாகன போக்குவரத்து வசதிகேற்ப விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளதுடன், புறவழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது.

தற்போது, பொள்ளாச்சியிலிருந்து திண்டுக்கல் வரையிலும் பல்வேறு வசதிகளுடன் நான்கு வழிப்பாதை அமைக்கும் பணி தீவிரமாக நடக்கிறது. அப்பணி சுமார் 90 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால், பொள்ளாச்சி பகுதி மேலும் வளர்ச்சியடையும் பகுதியாக அமைந்துள்ளது. கோவை மாவட்டத்திற்குள் உள்ள பொள்ளாச்சியை பிரித்து, தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை சமூக ஆர்வலர்கள், தன்னார்வலர்கள், பல்வேறு அரசியல் கட்சியினர் என அனைத்து தரப்பினரும் தொடர்ந்து முன் வைத்துள்ளனர். இந்நிலையில், பொள்ளாச்சி தனி மாவட்டமாகும் என்ற பல ஆண்டு கோரிக்கை விரைவில் நிறைவேறும் என்ற நம்பிக்கை பொதுமக்களிடையே இன்னும் தொடர்ந்துள்ளது.

மொத்தம் 36 வார்டுகளை கொண்ட பொள்ளாச்சி நகராட்சியில், தற்போதையை நிலவரப்படி சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் தொகை உள்ளது. பொள்ளாச்சி நகராட்சியை, பெரு நகராட்சியாக ஏற்படுத்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் அதன் செயல்பாடு சில மாதங்களில் தொய்வு ஏற்பட்டது. இந்நிலையில், பொள்ளாச்சி நகராட்சியை விரிவாக்கம் செய்ய முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நகராட்சியுடன் அருகே உள்ள ஆச்சிப்பட்டி மற்றும் கிட்டசூராம்பாளையம், ஜமீன்முத்தூர், புளியம்பட்டி, மாக்கினாம்பட்டி, ஊஞ்சவேலாபம்பட்டி, சின்னாம்பாளையம் ஆகிய 7 கிராம ஊராட்சிகளை இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பொள்ளாச்சி நகராட்சி வருங்காலத்தில் மாநகராட்சியாக உயர வாய்ப்பு ஏற்படுவதுடன், பொள்ளாச்சியை மையமாக கொண்டு தனி மாவட்டம் உருவாக வாய்ப்பாக இருக்கும் என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘‘பொள்ளாச்சி நகராட்சியில் மொத்தம் 36 வார்டுகள் உள்ளன. இதனுடன் அருகே தொட்டுள்ள ஊராட்சி கிராமங்களை இணைத்து விரிவாக்கம் செய்ய, சில ஆண்டுகளாக இது தொடர்பான தகவல் வெளியாகியிருந்தாலும். தற்போது பொள்ளாச்சி நகராட்சியை விரிவாக்கம் செய்ய முடிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த நகராட்சியுடன் அருகே உள்ள 7 கிராம ஊராட்சிகளை இணைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதற்காக, அந்த ஊராட்சிகளில் மக்கள் தொகை மற்றும் பரப்பளவு எவ்வுளவு உள்ளது என்பது குறித்து அறிக்கை தயாரித்து அனுப்பி வைக்க, வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் கேட்கப்பட்டுள்ளது. அதற்கான பணி நடக்கிறது. இப்பணி நிறைவடைந்த பிறகே, அடுத்தக்கட்ட பணி குறித்து தெரியவரும்’’ என்றனர்.

The post தனி மாவட்டத்திற்கு அச்சாரமாக பொள்ளாச்சி நகராட்சியை விரிவாக்கம் செய்ய நடவடிக்கை: 7 ஊராட்சிகளை இணைக்க முடிவு appeared first on Dinakaran.

Read Entire Article